வியாழன், 17 மே, 2018

ஆயிரம் பாயிரங்கள் பாடி ஆடிய கலைஞர்

மெலிஞ்சிமுனை சைமன்  (1938-2017)

-கருணாகரன்-

 நாங்கள் இளையவர்களாக இருந்த 1960, 70கள் வரையில் கூத்துக் கலையும் கூத்துக் கலைஞர்களும் பெரிய நட்சத்திரங்கள். அந்த நாட்களில் கூத்துக் கலைஞர்கள் இரவுகளைத் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்து ஆண்டார்கள். அதிலும் கிராமங்களில் என்றால், சொல்லவே தேவையில்லை. கூத்து அங்கேயொரு மாபெரும் கொண்டாட்ட நிகழ்வு. ஒரு நாள் திருவிழாவில் கூடிக் கலைவதைப்போல இல்லாமல், வாரக்கணக்காக, மாதக்கணக்காக கூத்தோடு ஒன்றாகிக் கலந்திருக்கும் ஊர்.
பொழுதிறங்க, கூத்தைப் பழகுவது, “வெள்ளுடுப்பு ஆட்டம்” என்று ஒத்திகை பார்ப்பது, பிறகு அதை அரங்கேற்றுவது என்று ஊர் கூத்திலேயே ஓடிக் கொண்டிருக்கும். இதிலே இன்னொரு விசேசமும் உண்டு. ஊரில் பாதிப்பேருக்கு மேல் கூத்துக் கலைஞர்களாகவே இருப்பார்கள். தலைமுறை தலைமுறையாக கூத்து ஆடப்படுவதே இதற்குக் காரணம். இதனால், எல்லாத் தலைமுறையிலும் ஆட்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தனர். சில ஊர்களில் சில குடும்பங்களுக்குக் கூத்திலுள்ள சில பாத்திரங்கள் பரம்பரையாக வழங்கப்பட்டேயிருந்ததுமுண்டு.