செவ்வாய், 24 ஜனவரி, 2017

இருதயத்துக்குப் பட்சமானவள்

31 ஜூலை 2014, 11:46 PM




வெள்ளாப்புக் கினாவில்
கொஞ்ச நாளைக்குமுதல் தான்
கண்டேனவளை
குஞ்சுக்கண்டி முனங்கோரம் 
இறங்கித் திரிந்த பனிப்புகாரிடையே
முகிலுக்குள் திரியும் பிறைநிலாப் போல்
உலாத்தித் திரிந்தாள். 
சிறகுகள் பிடுங்கியெடுக்கப்பட்ட
மணிப்புறா அவளது வலது தோளில்.

கறுப்பும்
இடையிடையே
சாம்பல் நிறமும் கலந்த,
தையலற்று நெய்யப்பட்ட ஆடையை
அணிந்திருந்தாள்.
மிக விளப்பமுள்ள பொஸ்த்தகம் போல்
அவளின் முகத்திலுள்ள சோகத்தை
புகார் மண்டலத்திடையேயும்
வாசிக்கும்படிக்காய் இருந்தது.

பரிட்சயமுள்ள முகமாட்டம்
தெரிந்தாள்.

என்னிருதயம் முனகும் சத்தத்தை
இடையிடையே கேட்க முடிந்தது என்னால்.

ஷெரீனா.

1974.

முத்துச் சிலாவத்துறை.

நாற்பது வருசத்துக்கு முந்தி.

எனக்குப் பட்சமான சிறு பிராயச் சிநேகிதி.

தொண்ணூறிலிருந்து
அவளெங்கென்று அறிகிலேன்.
எந்தப் பொல்லாப்பும் அறியாத அவர்கள்
ஆணிவேரோடு பிடுங்கியெறியப் பட்டார்கள்.
ஆத்தாதவனாய்
அந்நியக் கரையிலிருந்து
யுத்தச் சங்கதிகளோடொரு சங்கதியாய்
அறிந்து கொண்டிருந்தேன்.

இது
எந்த யுத்தச் சாஸ்திரம் என்பது
இன்னும்தான் பிடிபடமாட்டேன் என்கிறது.

ஷெரீனா.
அவள்தான், அவளேதான்.
என் இருதயத்துக்குப் பட்சமான தோழி.
ஆனால்
குஞ்சுக்கண்டி முனங்கோரம்
இறங்கித் திரிந்தது பனிப்புகாரல்ல,
காஸா புகை மூட்டம்.

யுத்தங்கள் சாம்பலாய்ப்போக!



-தமயந்தி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக