சனி, 16 செப்டம்பர், 2023

கடலாள் 10 நாட்கள் -தமயந்தி-


 

கடலே, நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?

நானே என்னை
தின்று கொண்டிருக்கிறேன்.

சனி, 4 பிப்ரவரி, 2023

கொண்டல் -தமயந்தி-


2023 மாசி 20. 

இரண்டு வாரங்களுக்கு முன்னமே மாசிப்பனி மூசிப் பெய்யத் தொடங்கி விட்டிருந்தது. 

கடந்த மாரிமழையும், வாடைக்காற்றும் வெறுங்கையை விரித்து உதறிக்காட்டிவிட்டு கமுக்கமாய்க் கடந்துபோய் விட்டது. இந்த மாசிப்பனிக் கடலாவது பஞ்ச பாதகமில்லாமல் கைதூக்கிவிடும் என்ற நம்பிக்கையைக் கைவிடாமல் தக்க வைத்திருக்கும் கப்பித்தான் இருதயநாதர் கயிற்றுக்கொடியில் கட்டிக்கிடந்த ஆறு பழைய வழிவலைகளையும் எடுத்து முற்றத்தில் விரித்துப்போட்டுச் செப்பனிட்டுக் கொண்டிருந்தார். மூப்படைந்த கண்கள் ஒளிமங்கிப்போனதால் வலைகளைச் செப்பனிடுவதில் அவருக்கு சற்று சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும் அனுபவத்தில் பழுத்த அவரது கைவிரல்கள் கட்புலனின் வழிகாட்டல்களோ கட்டளைகளோ இல்லாமல் தம்பாட்டுக்கு வலைக் கயிறுகளைச் செப்பனிடுதலில் இயங்கிக்கொண்டிருந்தன. 


இந்த சித்திரை இருபத்தெட்டு வந்தால் கப்பித்தான் இருதயநாதருக்கு எண்பத்திமூன்று வயது. 

சங்குமுனைக் கரையோரக் கிராமத்தில் பதின்ம வயதில் கடலில் இறங்கிய தொழிலாளர்களில் இருதயநாதரும் ஒருவர். 

தீவகத்துக் கடற்பரப்பு முழுவதையும் உள்ளங்கையில் அள்ளிப் பருகும் திறன்போல் அனுபவங்களைக் கொண்டவர். இளவயதிலேயே தேக்குமரச்சிறகுகட்டித் தோணியும், மீன்கள் ஏற்ற இறக்கவென ஒரு சிற மரவள்ளமும் சொந்தமாக வைத்திருந்தார். முப்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கட்டிமேய்த்துத் தொழில் செய்த பெருங் கடலோடி. சங்குமுனைக் கிராமத்தில் மட்டுமல்லாது அயலட்டைக் கிராமங்களைப் பொறுத்தவரையும் பெரு மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தொழிலாளியாக, சம்மாட்டியாக, கூத்துக் கலைஞனாக விளங்கினார். 

அந்தக்காலத்தில் அண்ணாவி அந்தோனி கூத்துகளில் வரும் கரைத்துறைக் கப்பித்தான், கப்பல்க் கப்பித்தான் பாத்திரம் என்றால், அது இருதயநாதர்தான் என்று தீவகம் பூராவும் கூத்து மேடைகளில் கண்டுணர்ந்த சங்கதி. அதனால்த்தான் அவருடைய பெயரோடு "கப்பித்தான்" என்ற இணைப்பெயரும் சேர்ந்து கொண்டது.  

 

1995. 

"மேய்ப்பர்கள்தம் இடுப்பிலும் தோளிலுமாக 

சுமந்திருந்த மந்திரக்கோல்களின் பொருட்டு 

அச்சங் கொண்டிருந்த மந்தைகள்  

அவர்களது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து  

மாமிசமாகப் பின் தொடரலாயின.  

மீறிப் பேசவோ, மந்தைவிட்டு அகலவோ 

வேறேதும் முகாந்திரமில்லை. 

தப்பிப் பிழைத்தலுக்கு 

தவிர்க்க முடியாதாயிருந்தது 

மவுனித்தலெனும் சித்தம் மட்டுமே"  


யாழ்ப்பாணம் வெளியேறிக் கொண்டிருந்தது. 

தீவகக் கிராமங்களும்தான். அதுபோலவே சங்குமுனைக் கிராமமும் வன்னி நோக்கி இழுத்துச் செல்லப்பட்டது. சங்குமுனையை விட்டு சனங்கள் போனபின்னாலும் ஐந்தாறு குடும்பங்கள் மட்டும் ஊரைவிட்டுப் போகவில்லை. சுட்டாலும் செத்தாலும் இந்த மண்ணிலதான் என வெளியேறாமலிருந்த ஐந்தாறு குடும்பங்களில் இருதயநாதரும் மகிறம்மாவும்தான். 


அன்றிரவு தென்திசையிலிருந்து கரைவந்தேறிய கடற்படை சுட்டுக்கொண்டே ஊருக்குள் வந்தது. ஊரைவிட்டு வெளியேறாமலிருந்த ஐந்தாறு குடும்பங்களும் ஆலயத்துக்குள் தஞ்சமடைத்திருந்தனர். இரவிரவாய் ஊருக்குள் கேட்டுக்கொண்டிருந்த வெடிச்சத்தங்கள் அதிகாலையில் அமைதியானது. 


கப்பித்தான் ஆலயத்தைவிட்டு மெல்ல மெல்ல தெருவில் இறங்கினார். படைகள் போய்விட்டன. வீட்டுப்பக்கம் சென்று பார்த்தார். அம்மி பொழிந்ததுபோல் வீட்டுச் சுவரெல்லாம் குண்டுகள் கொத்தி வைத்திருந்தன. கடற்கரைக்குச் சென்று பார்த்தார். சிறகுகட்டித்தோணி சிதறிக் கிடந்தது. மரவள்ளம் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை. 


2009. மீண்டும் சங்குமுனைக் கிராமம் சனங்களால் நிரம்பப்பெற்றது. 

பதின்மச் சிறுசுகளாகவும், இளசுகளாகவும் வெளியேறியவர்கள் குடும்பங்களாகவும், குழந்தை குட்டிகளோடும் மீளவந்து சேர்ந்தார்கள். 

சங்குமுனைக்குள் மீண்டும் கூத்துச் சத்தங்கள் ஒலிக்கத் தொடங்கின. வேலிகளையே கண்டிராத சங்குமுனை வீடுவளவுகள் மதில்களால் சுற்றிக் கட்டப்பட்டன. மரவள்ளங்களும், சிறுதோணிகளும் இயந்திரப் படகுகளாக கரையெங்கும் அணிவகுத்தன. 

இருதயநாதரிடமோ அந்தச்சிறு தோணி மட்டுமே. அதுவே அவருக்குப் போதுமானதாகவும் இருந்தது. 

** 

"என்ன தொட்டப்பு, வழிவலை செம்மயாக்கிறாய்.... ராவைக்குப் பாடு போகப்போறியோணெ...? 

கேட்டுக்கொண்டே முற்றத்துப் பூவரசோடு சைக்கிளைச் சாய்த்து வைத்துவிட்டு மண்ணெண்ணை பரலோடு இறங்கி வந்தான் வெங்கிலாசு. 


"ஓமடாப்பன், இண்டைக்கு மாசி இருவது அமகாச இருட்டெல்லோ...., அதுதான் இந்த களத்தால ஒருபாடு போட்டுப் பாப்பமெண்டு நினச்சன்" 

ஆறாவது வலையைச் செப்பனிட்டபடி வெங்கிலாசுக்குப் பதில் சொன்னார் கப்பித்தான்.  


"தொட்டப்பு இதில பத்து லீற்றர் எண்ணை இருக்கு. உன்ர தோணிப் பேமிற்றுக்குத் இந்த மாசம் தரவேண்டிய இன்னும் இருவது லீற்றர் அடுத்த கிழமதான் வருமெண்டு தலைவர் சொன்னவர். காசு குடுத்திற்றன்... தொழில் வாய்க்கேக்க ஆறுதலாத் தந்தால் போதுமணை" 


"எனக்கெதுக்கு ராசா எண்ணைய...? என்னட்டயென்ன மோட்டர் கீட்டரா இருக்கு.... நீ எடுத்து உன்ர தொழிலுக்குக் கொண்டு போவன் மோனே" 


"தொட்டப்பு, சும்மாயிரணை. எண்ண கிடைக்காமல் அடிபடுகிறாங்கள் நீ என்னடாண்டால் வேணாமெண்டிறாய். விளக்கெரிக்க அடுப்புமூடயெண்டாலும் உதவுமெல்லோ... இருட்டுக்கயா கிடக்கப்போறியள் ரெண்டுபேரும்" சொல்லியபடியே எண்ணைப்பரலை வீட்டுவிறாந்தைக்குள் கொண்டுபோய் வைத்தான் வெங்கிலாசு. 


"ம்..... அதுகுஞ் சரிதான்" 


"எந்தக் கடலண தொட்டப்பு பாடு போடப்போறாய்?" 


"இதில பெரியபுட்டிக் குடாவுக்குள்ள போகலாமெண்டிருக்கிறன். இண்டைக்கு அமகாசஅவதிக்கு ஏதாவது ஏறுந்தானே...?" 


"எங்கயண தொட்டப்பு...., இப்ப அமகாசக் கடலுமில்ல, அட்டமிப் பாடுமில்ல.... களங்கள் முழுக்க அட்டைப்பட்டியளப் போட்டு அடைச்சு வச்சிருக்கிறாங்கள் வம்பில புறந்தவங்கள்.... வீணாக வருகுது வாயில...." 


"அப்பிடியெல்லாஞ் சொல்லாத மோனே....! கடலும் தொழிலும் தெரியாதது அதுகளின்ர குற்றமில்லக் கண்டியோ.... இருவது இருவத்தஞ்சு வருசமாப் பூட்டிக்கிடந்த கடல்...., தொழிலறியாச் சந்ததிதானே இப்ப இருக்குதுகள்.... ஆரோ காசு குடுக்கிறாங்களெண்டு கை நீட்டி வாங்கிப்போட்டுதுகள்..... தங்களால ஏண்டியதத்தானே செய்யுங்கள்...?" 


"என்ன தொட்டப்பு நீயே இப்பிடிச் சொல்லுறாய்....?" 


"வேறயென்னத்தச் சொல்ல...., நெஞ்சுக்குள்ள ரெத்தக்கண்ணீர்தான் விடயேலும்.... நீயும் நானும் சொன்னாப்போல கேட்டிடவா போறாங்கள். விடு மோனே..." 


"அப்ப இது எங்கபோய் முடியப்போகுது தொட்டப்பு...?" 


"எல்லாம் முடிஞ்சுபோம். வெறுங் கடல்லயென்ன உப்பா அள்ளேலும்... ஊரோட எல்லாரும் திரும்ப வன்னிப்பக்கம் எதாவது கூலிக்குப் போவேண்டியதுதான்..." 


"தொட்டப்பு.... இப்பிடி வேண்டா வெறுப்பாக் கதைக்காதேயணை. இதுக்கேதாவது செய்ய வேணுமணை. எல்லாந் தெரிஞ்சுகொண்டும் நீ இப்பிடிக் கதைக்கிறது சரியில்லத் தொட்டப்பு..." 


"மோனே.... இதொரு இனஅழிப்பு" 


"போராடுவந் தொட்டப்பு..." 


"சரி, சட்டெண்டு ஓடிப்போய்ப் போராடு நீ" 


**** 

இன்னுங் கொஞ்ச நேரத்தில் பொழுது மேற்குக் கடலுக்குள் முழுவதுமாக இறங்கிவிடும். காற்றமர்ந்து, அலைகளடங்கி கடல் மிகவும் அமைதியாகக் கிடந்தது. சிறிய மீன்குஞ்சு துள்ளினாலும் டொலக் டொலக் என்று கடல் பெரிதாகச் சத்தமிட்டது.  

பல்லதீவின் வடகிழக்கில் பெரியபிட்டி. அதன் குடாக்கடலில்தான் கப்பித்தான் இருதயநாதரின் இன்றைய பாடு. 


செக்கல்வானம் மெல்ல மெல்ல இருளத் தொடங்கவும் வலைகளைக் கடலில் இறக்கத் தொடங்கினார் கப்பித்தான். கடலில் மீன்களின் நட்மாட்டத்தை அவதானித்த கப்பித்தானின் கண்கள் பெருமிதத்தில் சிரித்தன. தனது கணிப்புத் தவறவில்லை என்பதும், கடலனுபவங்கள் மூப்பின் நிமித்தம் இன்னமும் தனது நினைவுகளிலிருந்து அகலவில்லை என்ற மிதப்பும் அவரை அணியத்தில் நெஞ்சு நிமிர்த்தி நிற்க வைத்தது. 


வலைகள் கடலில் இறக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே ஆங்காங்கே மீன்கள் வலையில் சிக்கி கடலின் மேற்தளத்தில் அலையடிக்கும் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.  

ஒன்று இரண்டு மூன்று என சில நிமிடங்களிலேயே ஆறு வலைகளையும் கடலில் இறக்கிவிட்டு, மடிப்பெட்டியில் சுற்றி வைத்திருந்த சுருட்டை எடுத்துப் பற்ற வைத்தார்.  


சிறிது நேரத்தில் வடக்கிலிருந்து இரண்டு இயந்திரப் படகுகள் வெளிச்சம் பாய்ச்சியபடி கப்பித்தானின் தோணியை நோக்கி வேகமாக வந்தன. கடற்படையாக இருக்குமோ என்று ஒருகணம் எண்ணி அச்சப்பட்டார். இருக்காது. இப்போ அச்சப்பட என்ன யுத்தமா நடக்கிறது....? வந்தால் வரட்டும் ஏதாவது கஞ்சாக் கடத்தல்காரரை கண்காணிப்பதாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டார். 


இரண்டு படகுகளும் கப்பித்தானின் தோணியின் இரு புறங்களிலும் வந்து அணைந்து கொண்டன. இரண்டு படகுகளிலுமிருந்து பெரிய டோர்ச் லைட்டுக்களின் வெளிச்சத்தைக் கப்பித்தானின் முகத்துக்கு நேராகப் பாய்ச்சினர். கண்கள் கூச்சம் தாங்கமுடியாமல் இரண்டு கைகளாலும் முகத்தை மறைத்துக் கொண்டார். 

"ஆர்ரா பு..... இந்தக் கடலுக்க வரச்சொன்னது.....?" படகில் வந்தவர்களில் ஒருத்தன் பெரிய சத்தமாகக் கத்தினான். இன்னொருத்தன் கப்பித்தானின் தோணியில் இரும்புக்கம்பியால் ஓங்கி அடித்தான். தோணி உடைந்து விடுமாப்போல சத்தத்துடன் சிலகணம் அதிர்ந்தது.  


"இந்தப் பக்கம் வரப்படாதெண்டு தெரியாதாடா கிழட்டுப் பு....?" கேட்டபடியே மீண்டும் அவன் இரும்புக் கம்பியால் தோணியில் அடித்தான். 

இது கடற்படையில்லை என்பது கப்பித்தானுக்கு விளங்கிவிட்டது. சங்குமுனையைச் சேர்ந்தவர்கள்தான் சந்தேகமே இல்லை. அதுவும் எல்லாமே இனபந்துக்களின் இளைய தலைமுறைகள்தான்.  ஒவ்வொரு படகிலும் நான்கு நான்கு பேர் இருந்தனர். அவர்களோடு கூடவே போதையும் இருந்தது. அனைவரும் இளவட்டங்கள். 


"தம்பிமாரே..., என்ர கடல்ல தொழில்ச் செய்யாமல் வேறயெங்க ராசா நான் போறது...? கப்பித்தான் சொல்லி முடிப்பதற்குள் வலதுபக்க இயந்திரப்படகின் தளத்தில் நின்றவன் கப்பித்தானின் நெஞ்சில் காலால் எட்டி உதைத்தான். 


"உன்ர கடலோ...., கிழப்பிப்பார்ரா கிழடா கவட்டுக்க கிடக்கும் உன்ர கடல். இப்ப இந்தக் கடலெல்லாம் அட்டப்பட்டிக்கு லைசன்ஸ் எடுத்து வச்சிருக்கிறம். இந்தப் பக்கம் ஒருத்தரும் இனிமேல்ப்பட்டு வரப்பிடாது தெரியுமா?"  இடதுபக்கப் படகில் நின்ற ஒரு மெல்லிய சுள்ளான் கீச்சுக்குரலில் சொன்னான். 


"இனிமேல்ப்பட்டு இந்தப் பக்கம் வந்தியெண்டால் கண்ணாவுக்குள வெட்டித்தாழ்ப்பம் கிழடா" இரும்புக்கம்பியோடு நின்றவன் கத்தினான். 


இரண்டு படகுகளும் கப்பித்தானின் வலைகள் கிடந்த பக்கம் போயின. வலைகளை இழுத்து கத்திகள் கொண்டு மாறிமாறி அறுத்தெறிந்தனர். அவர்கள் அறுத்தெறியும் வலைகளில் வெள்ளிக்காசுகள்போல் மீன்கள் பளிச்சிட்டதை அவர்கள் பாய்ச்சிய வெளிச்சத்தில் கண்டு கலங்கிப்போனார் கப்பித்தான் இருதயநாதர். 


***** 


"தொட்டப்பு.... பொலிசில போய் இன்றி போடுவம் எழும்பி வாணெ...." வெங்கிலாசு திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டேயிருந்தான். கப்பித்தானோ எதையும் காதில் வாங்காதவராய் சர்வாங்கமும் இறுகிப்போய் முற்றத்தில் இருந்தார். 


"அந்தப் பூலுவத்துக்குப் புறந்தவங்கள் அட்டப்பட்டிக் காவலெண்டு கடல்ல அட்டாளக்கொட்டில் போட்டு நாளாந்தம் தண்ணியும் கஞ்சாவுமா அடிச்சுப்போட்டுக் கிடக்கிறாங்கள் தொட்டப்பு. பாவப்பட சனங்களின்ர களங்கண்டிப் பட்டியளையெல்லாம் வழிச்சுத்துடச்சு காஸ்சிலிண்டர் வச்சு காச்சித் தின்னாறாங்கள் தொட்டப்பு. இவங்களுக்கொரு பாடம் படிப்பிப்பம் எழும்பணை...." 


"வேணாம் ராசா விடு. சுத்திச்சுத்திப் பாத்தா எல்லாஞ் சொந்தங்கள்தானேயப்பு. விடடா" 


"நீ சரிவர மாட்டாயணை....." சினந்துகொண்டபடியே வெங்கிலாசு சைக்கிளை எடுத்துக்கொண்டு போய்விட்டான். 


கப்பித்தான் அப்படியே இறுகிப்போனவராய் அசைவற்று முற்றத்திலேயே இருந்தார். தனது நெஞ்சில் அந்த இளைஞன் காலால் உதைத்ததுகூட அவருக்கு வலிக்கவில்லை ஆனால் இவர்கள் கடலின் கருமடியை உதைத்தும், கீறிக் கிழித்தும் செய்யும் அட்டூழியங்கள்தான் பெருவலியெடுத்தது. 


அகலத் திறந்துகிடந்த வாசற்கதவு வழியாக நேற்று வெங்கிலாசு கொண்டுவந்து விறாந்தையில் வைத்த மண்ணெண்ணை பரல் கப்பித்தானின் கண்களில் பட்டது. ஏதோ எண்ணங் கொண்டவராக எழுந்து கோடிப்புறம் சென்றவர் மடிவலைக்குச் சாயமிடும் அண்டாப் பானையை எடுத்து முற்றத்தில் கொண்டுவந்து வைத்தார். வீட்டு விறாந்தையில் இருந்த மண்ணெண்ணை பரலை எடுத்துவந்து மூடியைத் திறந்து அண்டாவில் முழுவதையும் ஊற்றினார். பின்வளவில் சிதறிக்கிடந்த சிறகுகட்டித் தோணியின் பலகைத்துண்டங்களை எடுத்துவந்து அண்டாவுக்குள் போட்டார். எண்ணையில் மிதந்து ஊறியது சிறகுகட்டித் துண்டங்கள். 


சாமத்திற்கு சற்றுக் கிட்டவாக விழித்தபடி விறாந்தையில் உட்காந்திருந்த கப்பித்தானுக்கு மெல்லியதாக வாயூறத் தொடங்கியது. குதிக்கால் வியர்த்துக் கசிந்தது. நம்புதற்கு முடியாமலிருந்தது அவருக்கு. இப்போ எப்படிக் கொண்டல்காற்றும் மழையும் சேர்ந்து வரமுடியும் என்ற குழப்பம். மெல்ல எழுந்து வெளியே சென்று வானத்தை அண்ணார்ந்து பார்த்தார். ஏற்கனவே அமாவாசை கழிந்த இரண்டாம் நாளாகையால் இருளான வானம் இன்னும் கருமை கட்டிக்கிடந்தது. கிழக்குவானத்தில் கருமுகில்கள் கும்பல்கும்பலாக அடைத்து நின்றன. கப்பித்தானுக்கு வாயூறல் அதிகரித்தது. குதிக்கால்களிரண்டும் கசிந்து முற்றிலும் ஈரமாகிவிட்டன. ஆமாம் இன்னும் சற்று நேரத்தில் கொண்டலிடியும் பெருமழையும் வரப்போவதை உணர்ந்து கொண்டார். அத்தோடு அமாவாசை அவதியின்  வெள்ளப்பெருக்கும் அதிகரிப்பதால் கடல் கொந்தளிக்கப் பார்க்குமே என எண்ணிக் கொண்டதோடு, யாராவது கடலுக்குப் போயிருந்தால் என்னவாகும் என்ற அச்சத்தினாலும் உடலம் நடுங்கத் தொடங்கினார்.   


சில கணங்கள்தான் கழிந்திருக்கும். வலிந்த சண்டைக்கு எடுக்கப்பட்ட திக்விஜயப் படையணிபோல் கொண்டல்க்காற்றும், கொடிமின்னலும், இடிமுழக்கமும் எழுந்ததோடு பெருமழையும் கொட்டத் தொடங்கியது. வீட்டுக்கூரையைப் பிய்த்தெறிவதுபோல் உலுப்பியெடுத்தது கொண்டல். 


****** 


இரவு அடித்துப் பெய்த பெருமழையின் வெள்ளம் ஓடிச்சென்று குளம் குட்டைகள், கடலைச் சேர்வதற்கான வழித்தடங்களற்று மதில்களால் சூழப்பட்ட சங்குமுனைக் கிராமத்தையே சூழ்ந்து நின்றது. விடிந்தும் விடியாததுமாய் சங்குமுனைச் சனங்கள் பூராவும் கடற்கரையை நோக்கி வெள்ளத்துக்குள்ளால் ஓடிக் கொண்டிருந்தார்கள். பொலிஸ் வாகனம் உட்பட பல வாகனங்களும் கடற்கரையை நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. 


அவசர அவசரமாக வெங்கிலாஸ் சைக்கிள் இல்லாமல், சாறத்தை நெஞ்சுவரை தூக்கிக் கட்டிக்கொண்டு, ஜட்டியோடு வெள்ளத்தில்  உருண்டோடி வந்தான். 

"தொட்டப்பு! எணேய் தொட்டப்பு..... அட்டைப்பட்டியெல்லாம் புசலில அள்ளுண்டு போச்சுதாம். ஒரு தடிகூட மிச்சமில்லையாம். அட்டைக்கொட்டிலுக்குமேல மின்னலிடி விழுந்ததாம் எண்டும், சமையலுக்கு அவங்கள் வச்சிருந்த காஸ்சிலிண்டர் வெடிச்சதாமெண்டும் ஊரெல்லாம் கதையடிபடுகுது. என்ன ஏதெண்டு சரியா ஒரு விளப்பமுமில்லத் தொட்டப்பு.... பாவமணை பொடியள்... எல்லாரும் இளந்தாரிப் பொடியங்கள். வாழ்ற வயசு..... துறைக்குப்போய் என்னெண்டு பாத்திற்று வாறனணை...." சொல்லிவிட்டு வெங்கிலாஸ் சாறத்தைத் தூக்கித் தலையில் கட்டிக்கொண்டு வெள்ளத்துக்குள்ளால் கடற்கரையை நோக்கி ஓடிச் சென்றான். 


இருதயநாதர் வாசற்படியில் நின்றபடியே தாழ்வாரத்தைப் பார்த்தார். சாயப்பானை பத்து லீட்டர் மண்ணெண்ணையோடும் சிறகுகட்டிப் பலகைத் துண்டங்களோடும் மழைவெள்ளத்தில் மிதந்துகொண்டு கிடந்தது.  


"போய்ச்சேருகிற காலத்தில ஏன்தான் இவனுக்கு இப்பிடிக்கொந்த பாவகாரியமெண்டு நினைச்சியா ஆழியாச்சி...?" 

கடலை நினைந்து தனக்குள் உறுத்தலோடு உருகிக்கொண்டார் கப்பித்தான் இருதயநாதர். 


மெல்ல மெல்ல வடக்கிலிருந்து ஊர்ந்துவந்த வாடைக்காற்று வீட்டு வாசற்படியில் நின்றிருந்த கப்பித்தான் இருதயநாதரின் கன்னங்களைத் தடவியபடி அதுவும் சங்குமுனைக் கடற்கரையை நோக்கிப் பயணித்தது. 


முற்றும். 

நன்றி: அபத்தம் (மாசி இதழ்)

Apaththam-second-issue1.pdf (thayagam.com)