சனி, 16 செப்டம்பர், 2023

கடலாள் 10 நாட்கள் -தமயந்தி-


 

கடலே, நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?

நானே என்னை
தின்று கொண்டிருக்கிறேன்.

நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?

என்னை
உனக்குள் தேடிக்கொண்டிருக்கிறேன்.
எனக்குள் மட்டுமல்ல,
எங்கும் உன்னைத் தேடாதே
கண்டடைய மாட்டாய்.
ஏனெனில்
முதலில் நான்
தின்று முடித்தது உன்னைத்தான்.

05.09.2023
--------------------------------------

ஒரு தடவை
தோணி கவிழ்ந்து விட்டதால்
காத்திரம் கவிழ்ந்து
படுத்துவிடுவதில்லை கடலோடி.
ஆயிரமாய் ஆழிப்புயலில் சிக்கினாலும்
அலையாடும் பாறைகளில்
மோதுண்டு சிதறினாலும்
மீண்டெழும் வலியன் அவன்
பாசாங்கும் பொல்லாங்கும்
நிறைந்த மாந்தரை விடவும்
நேர்கொண்டெழும் வல்லியள் கடலாள்
முகத்திலறையும் காற்றில்
ஆயிரமாயிரமாய்
பூக்களைப் பறிக்கும் வித்தையை
சொல்லிக் கொடுப்பவளும் அவளே
புயலாடினாலும், அலையாடினாலும்
காற்றின் மீதேறி
மிடுக்காய் கரை கடப்பான்
கடலாளின் காதலன்.

08-09.2023
--------------------------------------

மீண்டும் துருவக்கோட்டில் வந்து விழுந்தாயிற்று.
எப்படித்தான் எண்ணங்களை மடைமாற்றம் செய்தாலும்,
எனது கடலாளைப் பிரிந்துவந்த துக்கம்
நெஞ்சாங்கூட்டுக்குள் பெருமலையாய்க் கனக்கிறது.
பாறை இடுக்கில் சிக்குண்ட சிறுகுருவிபோல
மெல்லிதயத்தின் இறகுகள் கிழிந்து காற்றில் பறக்கின்றன.
சிரித்து விளையாடி நடமாடுகிறது கடல் என்கிறார்கள்.
ஆனால் ஓங்கித் தகிக்கும் அலைகளின்
குமுறலும், விம்மலும் எனக்கு மட்டும் கேட்பதேன்...?
பொறுத்திரு,
ஒருநாள் நீ குமுறியெழுந்து கரை தாண்டும்போது
பல கதவுகள் உடையும்.
இறுதியாக பிரண்டையாற்றில் சந்தித்தபோது
துள்ளியெழுந்து தோள்தழுவி ஒன்று சொன்னாயே...,
அது உண்மைதானா....?
நல்லது, விடை தந்தேன், அப்படியே எழுந்து நட.

08.09.2023
--------------------------------------

எனது கவிதைக்குள்
வடிவான சிறிய
கடலொன்று இருந்தது.
அதில் இறங்கியபோது
முழுவதும்
எனக்கான கவிதைகளால்
நிரம்பியிருந்தது.

09.09.2023
--------------------------------------

மூன்று மிளகுவிதைகள்
மண்டைக்குள் உருண்டு திரிகின்றன.
இதயமோ
என்னிடமிருந்து தன்னை
விடுவித்துக்கொண்டு
வானவெளியில் சிறகுகட்டிப் பறக்கிறது.
கண்களுக்கெட்டாத தொலைவில்
அலைகொண்டாடும்
அந்த சிறு கடலைத் தேடியபடி
முகில்திரளின் மடிப்புகளை
அலகுகளால்
புரட்டிப்போட்டுக்கொண்டு
அலைகிறது குருதி கசியும் இதயம்
வானிலிருந்து ஒழுகும்
மழையோடு மழையாய்
கலந்தொழுகும் இதயத்தின் குருதி
கடலில் விழும்போது
விண்மீன்களிடமிருந்து
நட்சத்திர மத்தாப்பூக்கள் சிதறும்.
மத்தாப்பூ வெளிச்சத்தில்
கடல் தன்னைத் தானே
இன்னொருமுறை தரிசிக்கும்.
குருதி கசிந்த இதயப் பறவையோ
எப்போதும்போல
தனித்து அலையும் வானவெளியில்.

13.09.2023
--------------------------------------

கண்தொடும் இடமெல்லாம்
மெல்ல மெல்ல இருள் படர்கிறது
அலைகளின் இரைச்சல் மட்டும்
இன்னமும் செவிகளில் உரச
தூரத்தே கரையொதுக்கில்
புதிதாய் முகைவெடித்த
தாழம்பூவின் வாசம்
மூச்சுக்குழாயை முத்தமிடுகிறது.
நீள நெடும் மகிழ்வின்மீது
தாழம்பூ வாசனையை போர்த்திவிடும்
மெல்லிரவின் மேகங்களும்
பூரித்து சிவந்து போவது
காதலால் அல்லால் வேறேதாகும்
கரையேறிய பின்னும்
இன்னமும் நான்
கடலுக்குள்தான்
சயனித்துக் கொண்டிருக்கிறேன்
கடலோ,
என்னை கரையேற்றி
அனுப்பி விட்டதாக
மெய்யற்ற அறிக்கையை வெளியிடுகிறது.
நான் அறிவேன்,
நானின்னமும் கடலுக்குள்தான்.
இது கடலுக்கும் தெரியும்.

15.09.2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக