வியாழன், 15 டிசம்பர், 2016

ஊஞ்சலாடும் கவிதைச் சவங்கள்


வாசனைத் திரவியங்கள் பூசப்பட்ட
வார்த்தைகளால்
அலங்கரித்த உனது கவிதைகள்
அறையெங்கும்
நறுமணத்தையிறைத்து
கிறங்கடிக்கின்றன

மூச்சுக்காற்றை
தள்ளி விழுத்திவிட்டு
மூக்குவாயில்களூடாக
காதலைத் திணித்துவிட முயற்சி செய்கின்றன அவை

வாசனைத் திரவியங்களாலான காதலை
மறுதலிக்கிறது எனது சிறுபறவை

படபடவென சிறகுகளை அசைக்கும்
பறவை சொல்வதின்னதென்று அறி

"போ அப்பாலே உண்மை செத்த வார்த்தைகளே!"

அது
இன்னொன்றையும் சொல்கிறது.
வெளிச்சத்திலோ இருட்டிலோ
முற்றத்திலோ, கொல்லையிலோ
கயிற்றுக்கொடியிலோ
கட்டப்பட்ட ஊஞ்சலிலோ
தொங்கவிடாதே உனது கவிதைகளை
ஏனெனில்
காற்று நடமாடும் தெருக்கள் அவை.
வாசனைத் திரவியங்களின்
நறுமணத்தை
அது அள்ளிச் சென்றுவிடும்
அதற்கு யாரின் அனுமதியும் அவசியமற்றது.
அப்படியொன்று நேருமானால்
நறுமணம் அகற்றப்பட்ட உனது கவிதைப் பிரேதங்கள்
மணக்கத் தொடங்கிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக