சனி, 26 நவம்பர், 2016

பொன் தூபம் வெள்ளைப்போளம்



மீட்பர்கள் நிறைந்து வழிந்தொழுகும் நிலம்.
சோளகம் சுமந்துவந்து கொட்டிய உவர்ப்புழுதியால்
முகம் பொரிந்து
உதிர்ந்து கொட்டுண்ட ஈச்சம்பழங்களைப்போல்
அவர்கள் உதிர்ந்துபோனாலும்
விதைகளிலிருந்து மீட்பர்கள்
மீண்டும் மீண்டும்
திரண்டெழும் புனித மண்.

வாருங்கள் அவர்களை ஆராதிப்போம்.

தேகத்தைச் சுட்டெரிக்கும் குளிர் இரவில்
நட்சத்திரங்களின் வழிகாட்டுதலில்
பதனமாக தடங்களைப் பதித்து
யாத்திரையைத் தொடங்குவோம்

ஏழு மலைகளையும்
ஏழு கடல்களையும் தாண்டி
எங்கோவோர் மலைக்குகைக்கு வரும்படியாக
நமது மீட்பர்கள்
எமது யாத்திரையைக் கடினப் படுத்தார்
மிகமிக நல்ல மீட்பர்கள்

அவர்களை ஆராதிக்க
பொன் தூபம் வெள்ளைப்போளம் உகந்தவையென 
தீர்க்கதரிசிகள் வாயிலாக சொல்லப்பட்டுள்ளது
எடுத்துக் கொள்ளுங்கள் ஆளுக்கொன்றாய் 

சோறு சொன்ன இடம்வரை இருந்தாலும்
குளிருறைந்த இரவுக்கு ஒவ்வாது.
துலுக்கனின் கட்டுச்சாதம் சிறப்பு
மறக்காமல் அம்மாவின் அடுப்புக்கரியில்
இரண்டு துண்டுகள்

ராப்போதில்
கட்டுச்சாதத்தை மோப்பம் பிடித்து
வைரவமுனி நாயாய் பின்வருவார்

வரைபடங்கள் கீறவல்ல நண்டுகள்
கரைநீளம் கொட்டிக்கிடக்கும்
அங்கேதான் சிந்தாத்திரை மரியாவும்
துலுக்கரின் பள்ளியும் அருகருகாக

மின்மினிகளாக தேறகைப் பட்டாளம் 
கவிராடும் இராத் தண்ணீரில்
தீர்த்தமாடி தீட்டகற்றி
மீட்பர்களை ஆராதிப்போம்

நண்டுகள் ஊரும் கரைம்நீளம்
மணல் குவித்துக் கட்டிய
எங்கள் நாவலர்களை இனி
எந்த அலையும் வந்து அடித்துச் செல்லா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக