செவ்வாய், 19 மார்ச், 2019

மல்லாந்து படுத்த வார்த்தைகள்


நாவாந்துறை எழுத்தாளனின் படைப்புக்கு நல்லூரடி இலக்கியக்காறர் அடிக்குறிப்பு எழுதும்படி பணிக்கும் நிலையையிட்டு இன்னமும் நாம் வெட்கப்படாமலும், ஏனென்று கேட்காமலும் இருந்துகொண்டு, யாரோ ஒரு RSS fascist ideology எழுத்தாளனைக் கலைத்துக் கொண்டு திரிகிறோம்.




  70களில் வீரகேசரிப் பிரசுரங்களையே அநேகமாக வாசித்துவந்த எனக்கு தோழர் கே.டானியல் அவர்களின் "போராளிகள் காத்திருக்கின்றனர்" நாவல், மற்றும் தோழர் மல்லிகை ஜீவாவின் "தண்ணீரும் கண்ணீரும்" கதைத் தொகுப்பு ஒருபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. காரணம் இந்தப் படைப்புக்களின் கதைக்களங்கள் எனதானதாக இருந்தன. நான் பிறந்து வளர்ந்த எனது வடிவான குட்டி மீன்பிடிக் கிராமமும், அந்த மக்களின் வாழ்வழகும், என்னைச் சூழவுள்ள மனிதர்களும் நானும் அவைகளுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தோம். 

85இல் சென்னையில் விடுதலை இயக்கங்களின் கூட்டமைப்புக் (ஈ.என்.எல்.எஃப்)காரியாலயத்தில் "ஆபீஸ் பையன்"ஆக பணியாற்றியபோது ராத்திரிகள் எனக்கானதாகக் கைக்குக் கிடைத்தன. அந்த ராத்திரிகளில் எழுதிய "80பக்க ஒற்றைறூள்க் கொப்பிகள் இரண்டு". 

இரண்டு ஒற்றைறூள்க் கொப்பிகளையும் ஒரு நெய்தல் உவர் நிலத்தைத் தட்டிப் பரவி நிறைத்திருந்தேன். எனது ஏழு தீவுகளும், ஏழாற்றுப் பிரிவும், அந்த மனிதர்களும் அவர்களது மொழியோடு அந்த இரண்டு ஒற்றைறூள்க் கொப்பிகளின் 160பக்கங்களிலும் சுறுசுறுப்பாக காதலோடும் போராட்டங்களோடும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

அப்போ ஈ.என்.எல்.எஃப். காரியாலயத்துக்கு அண்மையில்தான் கவிஞர் முல்லையூரான் தனது காதல்த் துணையோடும (குஞ்சக்கா) வசித்து வந்தார். அவர் அப்போது "ஆபீஸ்" என்பதை தமிழ்ச் சொல்லென அடித்துப் பிடித்துச் சண்டை பிடிக்கும் தலைமை ஆசிரியரைக் கொண்ட ஒரு தினப் பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். (இந்தச் சண்டை முற்றி முல்லையூரான் வேலையைக் கைவிடும் நிலை பின்பு ஏற்பட்டது) முல்லையண்ணை காலையில் பணிக்குப் புறப்படும்போது எமது காரியாலயத்துக்கு வருவார் தாயகச் செய்திகளை அறிந்து கொள்ளும் பதகளிப்போடு. பணி முடித்து வரும்போதும் என்னிடம் வந்து செல்வார்.

அப்பப்போ கவிதைகள் என நினைத்து நான் எழுதும் கடதாசிகளை எடுத்துச் செல்வார். மறுநாள் வந்து அதுபற்றி நல்லது கெட்டதுகள் சொல்வார்.
கொண்டற்கடலை சுண்டல் எனக்கு விருப்பம் என்பதை அறிந்து சிலவேளைகளில் அவரது வீட்டில் காலைச் சாப்பாட்டுக்கு கொண்டல்க் கடலை அவிக்கும் தருணங்களில் ஒரு சரையில் அவித்த கடலை கொண்டுவந்து தருவார் "அக்கா தந்து விட்டவ சாப்பிடடா" என்று.
ஒருநாள் சனிக்கிழமை மாலை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். அங்கு சென்றபோதுதான் தெரியும் எனக்காக அவர்கள் கொண்டல்க் கடலையில் சுண்டல் செய்திருக்கிறார்கள் என்பது.
"ஒரு நாளாவது உனக்கு அவிச்ச கடலை இல்லாமல் அதைச் சுண்டல் செய்து தர வேணுமெண்டு நினைச்சம். இண்டைக்குத்தான்ரா தம்பி அதுக்குப் பொசிப்புக் கிடைச்சிருக்கு" என்றார்.

அன்றுதான் நான் கையோடு எடுத்துச் சென்ற இரண்டு ஒற்றைறூள்க் கொப்பிகளையும் தயங்கித் தயங்கி அவரிடம் கொடுத்தேன்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 5மணிக்கு கார்ப்பரேசன் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக கதவைத் திறந்துகொண்டு வெளியே வரும்போது முல்லையண்ணை வாசலில் நின்றார். ஒருகணம் பதறித்தான் போனேன். அடுத்த கணம் என்னை இறுகத் தழுவி இரண்டு கன்னங்களிலும் நெற்றியிலுமாக மூன்று முத்தங்களைத் தந்தார்.
"கதை நல்ல சோக்கா இருக்கடா தம்பி. ஈழசூரியன் பதிப்பகத்தால நான் போடுறன் தாடா"
"சும்மா போங்கண்ண, நீங்களே திண்டாடிக் கொண்டிருக்கிறியள்..."
"நீ ஒண்டும் கதைக்காத. அக்கா ஒரு காப்புத் தாறனெண்டவ"
அவவிடம் இருந்த ஒரு சோடி காப்பில் ஒன்றை தனது "ஈழம் எழுந்து வருகிறது" புத்தகத்துக்காக அடகு வைத்துவிட்டார் என்று முன்னமே தெரியும் எனக்கு. மீதமாக அவவிடம் இருப்பது அந்த ஒற்றைக் காப்புத்தான்.

மறுநாள் வேலைக்குப் போகுமுன் வந்தார். "பின்னேரம் வெளிக்கிட்டு நில்லு ஒரு இடத்துக்குப் போவம்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
அப்போது தமிழக விருந்தினர் விடுதியில் வந்து தங்கியிருந்தார் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள்.
கவிஞர் முல்லையூரானின் மதிப்புக்குரியவர்.
பேராசிரியரிடம் என்னை அறிமுகஞ் செய்து வைத்தார் முல்லையண்ணை.
அவரின் கையில் தானே கொடுத்தார் எனது இரண்டு ஒற்றைறூள்க் கொப்பிகளையும்.
இரண்டு நாட்களின் பின் மீண்டும் வரச்சொன்னார் பேராசிரியர். சென்றோம்.
உள்ளே சென்ற நாங்கள் இருவரும் இருக்கைகளில் உட்காரவேயில்லை கேட்டார் பேராசிரியர்;-
"இது எந்த ஊர் பேச்சுவழக்கு ஐசே?"
"எங்கட ஊர்"
"அதுதான் எங்கயது?"
"மெலிஞ்சிமுனை"
"இப்பிடி இலங்கயில எங்கயும் பேச்சுவழக்கில்ல, இது உம்மட சோடின"
இரண்டு ஒற்றைறூள்க் கொப்பிகளையும் தூக்கி முன்னால் கிடந்த சோஃபாவில் போட்டார் பேராசிரியர்.
எனக்கு எதுவுமே புரியவில்லை.

எனது அறைக்கு வந்து மீண்டும் அந்த இரண்டு ஒற்றைறூள்க் கொப்பிகளின் பக்கங்கள்  முழுவதையும் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்.
எனது சனங்கள் அத்தனைபேரும் அந்த 160பக்கங்களிலும் நிறைந்திருந்து என்னோடு ஒருவர்மாறி ஒருவர் கதைத்தார்கள், சிரித்தார்கள், கோபப் பட்டார்கள்.
எனக்கு முன்னாலேயே அண்ணன் தம்பி, மாமன் மச்சான் என ஒருவரோடு ஒருவர் அடிபட்டார்கள். வழக்காடினார்கள், வழக்கு முடிவதற்குள் ஏதாவதொரு கொண்டாட்டத்தில் ஒற்றுமையானார்கள். கூத்துக் கொட்டகையில் ஆளையாள் சால்வை போர்த்தி கட்டி முகர்ந்தார்கள், ஏழாற்றுத் திடலில் பேராமைகளைப் பிடித்தார்கள், பெரும் பெரும் சுறாக்களை வேட்டையாடினார்கள், கோபக் காரர்களையும் கூப்பிட்டு சுறாப்பங்கு கொடுத்தார்கள். விடுவலையில் இளசுகளை மடவலைக் கயிற்றால்க் கட்டி, முழுப்பங்கு கொடுத்து இளந்தாரியாய்ப் பிரகடனஞ் செய்தார்கள், மணச்சோறு காய்ச்சி பகிர்ந்துண்டார்கள்.
முழுப்பங்கு கண்ட இளவல்கள் காதலித்தார்கள், எனக்கு முன்னாலேயே கலவியும் கொண்டார்கள்.....
இப்படித்தானேயான அந்த 160பக்க சிறு பட்டினம் கண்முன்னாலேயே எரிந்து சாம்பலானது. ஓம், நான்தான் நெருப்பு வைத்தேன்.


ம்... பேராசிரியர்கள்..??
இவர்கள் இப்படித்தான் மேதாவிகளாக இருக்கிறார்களா? எப்படி?
ஒரே நொடியில் இவர்கள் மீதான பிரம்மாண்டமான பிம்பம் உடைந்து சுக்கலானது.
இவர்களைப் போன்றவர்களுக்கு மூட்ட வேண்டிய தீ அது.

பண்ணைப் பாலத்துக்குத் தெற்கால ஊர்கள் இருக்கின்றன, சனங்கள் இருக்கின்றார்கள், அவர்களுக்கென்றொரு மொழியுடன் வாழ்கின்றார்கள், சாதியக்கொடுமைக்கு எதிராகப் போராடியிருக்கிறார்கள், கூத்துக்கள் கட்டுகிறார்கள், தனிப்பெரும் கலைகளை மடிநிறையக் கட்டியும், நிலம் நிறைய, கடல் நிறைய ஈரத்தோடு பரத்தியும் வைத்திருக்கிறார்கள் என்ற ஒரு தாலியறையும் தெரியாமல் எப்படி இவர்கள் புத்திசீவிகளாகவும், இலக்கிய மேதாவிகளாகவும் உலாத்தித் திரிகிறார்கள் என்ற கேள்வி அன்று வலுக்கத் தொடங்கியதுதான் எனக்கு.

(சாதி ஒடுக்குமுறைக்கெதிராக தீவகத்தில் நடந்த போராட்டங்களில் ஒரு சிலவற்றை தோழர் கே.டானியல் அவர்கள் பதிந்திருக்கிறார்கள். புங்குடுதீவு, நெடுந்தீவிலிருந்து பேசப்படுகிற இலக்கியக்காரர்கள் யார் எவரென்று பார்த்தால்..... அவர்களது விலாசங்களை நான் சொல்லித் தெரிய வேண்டும் என்பதல்ல. அப்போது எனது எண்ணத்தில் தோன்றியவை;- "தோழர் கே.டானியலின் இலக்கிய மரபு யாழ்ப்பாண ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இலக்கியமாக வியாபிக்க வேண்டும். அதுவே வடக்கிலங்கை இலக்கியமாக ஓங்கி உச்சியிலறைந்து உருவேற்றப்பட வேண்டும்" எனப் பல எண்ணங்கள்)

//இப்படி பக்கத்திலிருக்கும் மனிதர்கள் பற்றிய ஒரு தாலியறையும் தெரியாமல் எப்படி இவர்கள் புத்திசீவிகளாகவும், இலக்கிய மேதாவிகளாகவும் உலாத்தித் திரிகிறார்கள்?// என்ற மேற்படி கேள்வி இன்று "ஏழு கடல்கன்னிகள்" வரை தொடர்கிறது.
அழகியலைப் பற்றி நீட்டி முழக்கி சிலம்பாட்டம் அடிக்கிறீக, அட முதல்ல உங்களுக்கு மொழியே சரியாத் தெரியேல்லயே மூதேசிகளே.

105பக்கங்களுக்குள் அடங்கிக் கிடக்கும் இந்த ஏழு கதைகளில் உள்ள 105சொற்களுக்குமேல் இதை விமர்சனம் செய்த தோழர்களுக்குத் தெரியாது என்பது அவர்கள் வெளிப்படையாகச் சொன்னது.
இவை ஒன்றும் காலாவதியாகி மறைந்தழிந்து போன சொற்களல்ல. சத்தியமாக இன்னமும் சனம் கதைத்துக் கொண்டிருக்கும் தமிழ்ச் சொற்கள்தான். அதாவது "காலகாலமாக இவர்களின் அருகிருந்து வாழும் சக மனித உயிரிகள்"
அப்படியானால் என்ன அர்த்தம்?
தமக்கருகில் இருக்கும் கிராமத்தில் வாழும் மக்கள் பேசுகிற சுத்தத் தமிழ்ச் சொற்கள் தெரியாமல் இந்த இலக்கிய மேதாவிகள் இருக்கிறார்கள் என்றால்...???

இதே நிலைதான் டானியல் அன்ரனி அவர்களின் 80களின் நடுவில் வெளியான "வலை" புத்தகத்துக்கும் நடந்தது.
"வலை" சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்ற வட்டாரவழக்கிற்கு அடிக்குறிப்புக் கோரப்பட்டது. திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப் பட்டது.

இதே யாழ்.ஆதிக்கசாதிய இலக்கியத் தடிப்புகள் தமிழகத்திலிருந்து கொண்டுவந்து கொட்டிக் குவிக்கும் அக்ரஹாரப் புண்ணாக்கு எழுத்துக்களுக்கு அடிக்குறிப்புக் கேட்க மாட்டார்கள். அப்படியே பம்மிக்கொண்டு எல்லாம் விளங்கியதுபோல் உச்சுக் கொட்டுவார்கள். அடிமைகள்.
அதெல்லாஞ்சரி, யாழ்ப்பாணத்தில் ஆதிக்கசாதியர்களால் காலகாலமாக கல்வி மறுக்கப்பட்டு ஒடுக்கி வைக்கப் பட்டிருக்கும் உழைக்கும் மக்களின் மொழியும் தெரியாமல், கலையும் தெரியாமல் நீங்கள் அப்போ யாரின் இலக்கியங்களை ஆய்வு செய்து ஒட்டுமொத்த தேசத்தின் இலக்கியத்துக்கும் பொதுமைத் தீர்ப்பாயம் சொல்கிறீகள்.

இந்தச் சாதிய ஒடுக்குமுறைக்குள் கிடந்து அடிபட்டு, இவர்களால் காலகாலமாக திட்டமிட்டுச் செய்துவரும் கல்விமறுப்பையும் உடைத்துக்கொண்டு, ஒடுக்கப்பட்ட சனத்திடமிருந்து இன்று இலக்கியர்களாக இயங்குபவர்களைக் கேட்கிறேன், மேற்படி கேள்வியைக் கேட்காமல் மிக இலகுவாகக் கடந்துபோவதற்கு நீங்கள் சொல்லும் உங்கள் அறிவாளிக் காரணங்கள்தான் என்ன?
இந்தக் கேள்விகளுக்கு குறைந்தபட்சம் உங்களளவிலேனும் விடை காணாமல் கடந்து போவீர்களானால் இந்த யாழ்.மேட்டுக்குடிக்கு கொத்தடிமையாக இருப்பதில் கிடைக்கும் சுகம் மட்டும் உங்களுகுப் போதுமானதாகும் என்று அர்த்தம் கொள்ளலாமா?
 
சரி, எனது இரண்டு ஒற்றைறூள்க் கொப்பிக் கதை பற்றிய சுவாரஸ்யமான சம்பவங்கள் சில சொல்லவில்லையே நான். அதிலொன்று;-

1987ம் ஆண்டு நான் சென்னையில் இருந்தபோது தோழர் சுகு ஸ்ரீதரன் ஸ்ரீலங்காவில் சிறையால் விடுவிக்கப்பட்டு சென்னை வந்திருந்தார். அந்தச் சமயத்தில் பேராசிரியர் தமிழக அரசின் விருந்தினர் மாளிகையில் வந்து தங்கியிருந்தார். அவரைச் சந்திப்பதற்காக தோழர் சுகு ஸ்ரீதரன் என்னையும் அழைத்துக் கொண்டு போனார். விருப்பமில்லாமலேயே தோழருக்காகப் போனேன்.
இருவரையும் பேராசிரியர் வரவேற்று உட்கார வைத்தார். தோழர் சுகுவுடன் உரையாடிக் கொண்டிருந்த பேராசிரியர் உரையாடலின் இடையில் என்னைப் பார்த்து; "முன்னுர வாங்கிக்கொண்டு போனீர் புத்தகத்தைக் கண்ணிலயே காட்டயில்ல...., அர்ப்புதமான நாவல். ஒரு கொப்பி கொண்டுவந்து தாரும்" என்றுவிட்டு மீண்டும் தோழர் சுகுவுடன் அவரது உரையாடல் தொடர்ந்தது.

"80பக்க ஒற்றைறூள்க் கொப்பிகள் இரண்டு"
எனதிரு கண்களும் எரித்தன அந்த நெருப்பை அக்கணத்தே.

"வாழ்வுதரும் வார்த்தையெல்லாம் உம்மிடமன்றோ உள்ளன"

 இறுதியாக இன்னொரு பச்சை உண்மை: 

"இப்போ யாருமே சாதி பார்க்கிறதில்லை" என பச்சைப் பொய் சொல்வதுபோல, "இப்போ ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி மறுப்பு என்பதே கிடையாது" என்றும் பொய் சொல்லப் படுகிறது.
முன்புபோல நேரடி நடவடிக்கையாக பனையோடு தறித்து வீழ்த்துவதில்லையே தவிர, ஒடுக்கப்பட்ட மக்களின் பாடசாலைகளுக்கு சரியான ஆசிரியர் வசதிகள், உபகரண வசதிகள், போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை ஆதிக்கசாதி அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், மதகுருமாரும் மறுதலிப்பதன் ஊடாக தொடர்ந்து கல்வி மறுப்பைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக