வியாழன், 21 மார்ச், 2019

பாம்புசுத்தி மலை


சில ஆர்வக் கோளாறுகள் விரிவடைந்து பருமனாகும்போது பிடரிக்குள் இரசாயன மாற்றமடைந்து அது ஒருவகை அம்னிசியாவாக (amnesia) மாறி விடுகின்றது.
பசிய இலைகள் பழுத்து கிளைகளை விட்டு விலகி ஒரே தடவையில் முழுவதுமாகக் காற்றில் பறப்பதுபோல பிடரிக்குள் இருக்கும்
எல்லாவற்றையுமே (தனக்குத் தெரிந்த எல்லாவற்றையுமே) ஒரே ஒரு சம்பவத்தில் மட்டும் பொருத்தமோ, பொருத்தமில்லையோ கவிழ்த்துக் கொட்டச் செய்து விடும்.
இந்த இரசாயனமாற்ற நோயின் அறிகுறி (symptoms);- வெள்ளலரிப் பூவின் வாசம் உடலம் முழுவதும் மணக்கும். ஆனால் அந்த வாசம் இன்னதுதானென இனம் காண முடியாதபடி பிடரிக்குள் கிர் கிர்கிர்... என்ற கிறிச்சான் இரைச்சல் உள்ளுக்குள்ளேயே கேட்கும். ஆனாலும் அது ஒரு ஆனந்தக் கும்மி என்ற உணர்வையே தந்துகொண்டிருக்கும்.
இது ஒரு நோயென்பதை ஏற்க மனம் ஒப்பாது. இன்னும் கொஞ்ச நாட்களில் கண்களிலிருந்து முழுவதுமாக மறைந்து விடப்போகும் தொலைவில் அதோ போய்க் கொண்டிருக்கும் அந்த காலப்  புட்டுவாணிச்சி அவளை சற்று நிறுத்துங்கள்.
வட திக்கில் கண்ணகியிடமிருந்து நாகராசு பெற்றுச்சென்ற அவளது முற்றத்து வெள்ளலரி அது. சோளகம் கண்ணகி பட்டினத்தாரை சங்காரிக்க வேகரம் கொண்டு வீசியடித்தது. ஆயினும் நாகராசு விட்டபாடில்லை. மனகோலம் வேகரமெழுந்து தகதெய் தத்தித்தோம் என தலை சிலிப்பி ஆடினான்.
அவன் யுத்தம் செய்தபடியே வாளேந்திய கரங்களை ஒவ்வொன்றாய் வெட்டி வீழ்த்திக்கொண்டு முன்னேறினான்.
கண்ணகியின் முற்றத்துப் பூவை வாயில் கவ்வியபடியே கடலலைளைக் கடந்தான்
சீராம்பார் தாண்டி இன்னும் கொஞ்சத் தூரம்தான்...
புலியன் தீவின் தென்திசையில் எப்போதும் இல்லாத புதினமாய் குறுக்கே எப்படி வந்தது இந்த மலை.
தன்னுடலால் மலையை சுற்றிக் கட்டினான் நாகராசு. மலை உடலம் மெலிந்தது
அலைகள் அடங்கின.
நாகராசு தெற்கில் கரையேறியபோது நாகம்மாவும் கவுதமனும் அரசின் வேர்களுக்கு மேல் அமர்ந்திருந்தார்கள் ஒன்றாக.
நாக பட்டினத்தார் தீப்பந்தங்களாய் இருவரையும் சூழ நின்றிருந்தனர். நாகராசு கொண்டுசென்ற கண்ணகியின் வெள்ளலரி மலர்களை ஆளுக்குப் பாதியாகக் கொடுத்தான். தீவுகள் வெள்ளலரி வாசக்கடலில் பச்சைப் பாலாடையாக மிதந்தன.
கண்ணகி அதற்குப்  பிரண்டையாறு எனப் பெயர் சூட்டினாள். பச்சைத் தீவுகள் 
வாசமற்ற தாமரை மலர்களை ஏற்க மறுத்தன. அதை எப்போதும் தனது எல்லைக்குள் அனுமதித்ததுமில்லை.
நற்கனி கொடாத மரங்கள் வெட்டப்பட்டு தீயில் வீசப் பட்டன. தீவுகள் தினவெடுத்தபடி நிமிர்ந்து நின்றன. கெறுவம் கடல் முழுவதும் வெப்பல் பரப்பின.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக