வெள்ளி, 6 செப்டம்பர், 2019

நீளும் துயரத்தில் ஒரு வரலாற்றுப் பதிவு

ஏகலைவன்! 

-செல்வம் அருளானந்தம்- 


சென்ற மாதத்தில் ஒரு நாள் "நாவாய் ஒளி" என்கின்ற ஒரு கலை நிகழ்வுக்கு செல்கின்ற வாய்ப்புக் கிடைத்தது.


நாவாந்துறை யாழ்ப்பாண நகரத்துக்கு அருகே இருக்கின்ற ஒரு கரையோர ஊர். தொன்மையும் பெருமையும் மிக்க அவ்வூர் ஒரு காலத்தில் யாழ்ப்பாண அரசின் துறைமுகமாக இருந்திருக்க வேண்டும். நாவாய் என்பது பாய்மரக் கப்பல் போன்ற சற்றே பெரிய கடற்கலமாகும்.

"கங்கை இரு கரையுடையான்
கணக்கற்ற நாவாயான்"
என கம்பன் இராமயணத்தில் குகனை அறிமுகப்படுத்துகின்றான்.

வீட்டுக்குவீடு கலைஞர்கள் வாழும் அளவெட்டி என கவிஞர் ஜெயபாலன் அளவெட்டி பற்றி ஒரு கவிதையில் குறிப்பிடுகின்றார்.

அப்படித்தான் நவாந்துறையும் வீட்டுக்குவீடு கலைஞர்களையும் விளையாட்டு வீரர்களையும் காலங்காலமாக உருவாக்கி வருகின்ற ஊர். குறிப்பாகத் தென்மோடிக் கூத்து கலைஞர்களின் பெருமைமிக்க பாரம்பரியம் அங்கு தொடர்ந்து வருகின்றது.


மகாபாரதத்தில் வரும் ஏகலைவன் கதாபாத்திரத்தை, இலக்கியம் அறிந்த அனைவரும் அறிவர். ஏகலைவன் கதை காலகாலமாக இலக்கியவாதிகளாலும் நாடகக்கலைஞர்களாவும் கூத்துக் கலைஞர்களாலும் பல்வகை வடிவங்களைக் கொண்ட பிரதிகளாக கையாளப்பட்டு வந்திருக்கின்றது.
தட்சணை என்ற பெயரில், ஒரு சிறந்த வில்லாளியின் பெருவிரலை வெட்டி எடுத்துக்கொண்ட அதிகாரத்தின் கொடுங்கோன்மையையும் சாதியக் கொடுமைகளையும் துயர்கலந்து கூறும் உன்னதமான இலக்கியக்கலைப் பிரதி ஏகலைவன் கதை.

இக்கதையை அருமையானதொரு தென்மோடிப் பாணிக் கூத்துப் பிரதியாக்கியிருக்கின்றார் தமயந்தி. இந்தப் பிரதி ரொரன்ரோவில் கூத்தாக அரங்கேறுகின்றது என்றறிந்த போது அதைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

தமயந்தி, தேச விடுதலைப் போராட்டம் உருவாகி வந்தபோது அதில் தன்னை அர்பணித்து வாழ்ந்த முதற் தலைமுறைக்காரர். நுட்பமும் அழகும் விஞ்சும் புகைப்படக் கலைஞராகப் பலரால் பாரட்டப் பெற்றவர். ஈழத்தமிழ்க் கவிதை உலகில் நல்ல கவிஞாக அடையாளமிடப்பட்டவர்.

தற்போது சுற்றுச்சூழல் பற்றியும் ஈழக்கடலில் மற்றவர்களின் ஆக்கிரமிப்புப் பற்றி மக்களுக்கு எடுத்த சொல்வதில் தன்னை ஈடுபடுத்தும் ஒரு சமுகப்போராளியாகவும் திகழ்ந்து வருகின்றார்.
குறிப்பாக இந்திய பெரும் படகுகளினால், ஈழத்து கடலும் மீனவரும் அடைகின்ற தொல்லைகளை ஆதரங்களுடன் மக்களுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் எடுத்து சொல்லும் பணியிலும் தன்னை ஈடுபடுத்தித் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றார்.

தற்போது நோர்வேயில் வாழ்ந்தாலும் பிறப்பாலும் இயல்பாலும் அவர் ஒரு தென்மோடிக் கூத்துக்காரர். கூத்துக்குள் வளர்ந்தவர்.

அவருடைய எழுத்தாக்கத்தில் இந்தக் கூத்து நடைபெறுகின்றது என்றவுடன் அதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமானது.

தமயந்தி இயல்பாகவே ஈடுபாடு கொண்டிருக்கும் சாதிய வேறுபாடுகளுக்கு எதிராக கதைக்கருவைக் கொண்டிருந்தது ஏகலைவன் கதை. ஆகவே கூத்துப் பிரதி அற்புதமாக வந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்து மதத்தில் உள்ள ஒவ்வொரு வர்ணமும் பல மாடிகளைக்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு போலத்தான். ஆனால் ஒரு மாடியில் இருந்து இன்னொரு மாடிக்குச் செல்வதற்கு என்று எந்தப் படிகளும் கிடையாது' அதனாலேயே "ஓர் ஆதிக்கச்சாதியில் பிறப்பவன் கருவிலேயே நீதிபதி ஆகும் கனவைக் கொண்டிருக்கிறான். ஆனால் ஒரு தோட்டியின் மகனோ கருவில் இருக்கும்போதே தோட்டியாவதற்கான வாய்ப்பைத்தான் கொண்டிருக்கிறான்" என்று சொன்ன அம்பேத்காரை நன்றாக வாசித்திருப்பவர் தமயந்தி.

 மாபெரும் வனம் மீதினில் - படர்
பூவினம் தரும் வாசமும் - உயர்
வண்டினங்களில் கீதமும் - என்றும்
எந்தன் பேரலங்காமே!

என்று தன்னை அறிமுகப்படுத்தியபடி ஏகலைவன் வருகின்றான். இந்த இராகத்தில் உள்ள தொன்மையும் இனிமையுமே இதை எழுதியவர் ஒரு கவிஞனாகத்தான் இருக்க முடியும் என்ற செய்தியை எமக்குத் தெரிவித்து விடுகின்றது.

இவ்வாறாக, முழுக் கூத்திலும் பாடல்கள் கவிதைக்குரிய சந்தங்களுடனும் விடயத்தை விட்டு அகலாத கருத்துக்களுடனும் அமைந்திருந்தன.

கூத்தில் பங்குபற்றிய கலைஞர்களும் இயக்குனர் றெஜி மனுவல்பிள்ளையும் கூத்துக்காகத் தங்களை அர்ப்பணித்தவர்களாக அறியப்பட்ட சிறந்த கூத்துக்காரர்கள்.
இவர்களுடைய அயராத உழைப்பும் திறமையும் இந்த மண்ணில் கூத்தைப் பேணிச்செல்லும் என்ற நம்பிக்கையை எமக்குள் ஏற்படுத்துகின்றன.

அரங்கேறும் கலைவடிவங்களில் கூத்தைப்போன்று உழைப்பை கடுமையாக்க வேண்டி நிற்கிற வேறு வடிவங்கள் இல்லை என்பதே என் கருத்து.
மூச்சிளைக்கப் பாட வேண்டும், மூச்சுமுட்டப் பாடியபடி ஆடவேண்டும், தாளத்தில் கவனம் இருக்க வேண்டும், பிற்பாட்டை உற்றுக் கவனித்தவாறு நடிக்க வேண்டும். இவ்வாறாக பல அவதானங்களைக் கொண்டு நேர்த்தியாக நடிக்க வேண்டும்.

இப்படியெல்லாம் பல மாதங்கள் பழகி மேடையில் பாடி ஆடும் போது ஒலி வாங்கியாலோ, அல்லது வேறு ஏதாவது தவறுகளாலோ கூத்தில் குறை ஏற்பட்டுவிட்டால் அவ்வளவு உழைப்பும் வீணாகிப் போய்விடும்.

நாடகங்களிலும் கூத்திலும் அரங்கில் தோன்றும் கலைஞன் உயிரோடு எங்கள் கண் முன்னே மேடையில் நிற்கின்றான். அது சரியானதோ, பிழையானதோ அந்தக் காட்சி அந்தக் கணத்துக்கு மட்டுமே உரியது.
இந்தச் சிக்கல்கள் எல்லாவற்றையும் வென்றவர்களாக ரொறன்ரோவில் இக்கூத்துக் கலைஞர்கள் புகழ் பெறுகின்றார்கள்.

வருமானம் பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நவீன நாடகங்களின் மத்தியில் தங்களை நிலைநாட்டப் பெரும் முயற்சி செய்கின்றார்கள். ஆடலும் பாடலும் அழகும் கொண்ட கூத்துக்கலையின் மேல், இவர்கள் பாட்டன்மார் கொண்ட காதல், இவர்கள் இரத்ததிலும் தொடர்ந்து கலைஞர்களாகவே இவர்களையும் பயணிக்கச் செய்கின்றது.
எம் முன்னோர் கூத்துக்கலையின் மேல் கொண்ட பேரார்வமே வழிபடும் கடவுளான சிவனையே கூத்தனாகக் கொண்டாடத் தூண்டியது.

சிலவேளை வர்க்க பிரச்சினைகள் தீர்க்கப்படலாம். ஏன் இலங்கைத் தேசிய இனப்பிரச்சனை கூடத் தீர்க்கப்படலாம். ஆனால் எம்மவர் மத்தியில் இருக்கும் "சாதி" என்ற கொடும் குணம் அழிந்து போகாது என்பதற்கு தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலேயே பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.
இங்கு காசு பணத்தை கொண்டு வரவில்லை, நிலத்தைக் கொண்டுவரவில்லை பழாய்போன சாதியெனும் தீண்டாமையை, குலம் என்னும் கொழுப்பை எங்களுடனே கொண்டு திரிகின்றோம்.
நிறம் குறைந்தவருக்கு, நிலமற்றவருக்கு சாதியில் கீழானவருக்கு, சமூகத்தால் புறகணிக்கப்பட்டவருக்கான கல்வியை வழங்குவதில் மேலாண்மைச் சமூகம் எப்படிச் செயற்படுகின்றது என்பதுதான் கதை.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த கதைதானே என்று கூறி விமர்சகர்கள் தப்பிக்க முடியாது.
போன மாதம் சிவா சின்னபெடியன் என்பவர் எழுதிய 'நினைவு அழியா வடுக்கள்' என்ற நினைவுக்குறிப்பு வெளிவந்தது.

அந்த நினைவு குறிப்பில் கல்வி பெறுவதற்குகாக அவர் அடைந்த துயரத்தை அவர் குறிப்பிடுவார்.
"அப்பன்ரை தொழிலை செய்யாமல் ஏன்ரா பள்ளிகூடம் வாறாய்" என்று அவன் ஆசிரியர் அவனைத் திட்டுவார். பள்ளியில் ஆதிக்கசாதி மாணவர்கள் வாங்கில் இருந்து படிக்க, தாழ்த்தப்பட்ட சாதிக்காரர் கீழே நிலத்தில் இருந்து படிக்க வைக்கப்பட்டனர்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவன், புதுக் காற்சட்டை அணிந்து வந்தபோது, அவனை வாழைத் தண்டால் அடித்து ஆசிரியர் தன்னுடைய சாதி வெறியை ஆவணப்படுத்துகின்றார். வாழைத்தண்டின் கயர் காற்சட்டையில் பட்டுவிட்டால் அது கழுவித் தோய்த்தாலும் போகாது.
இப்படி கொடும் வெறியோடு கலந்த, சாதி ஆதிக்கம் கொண்ட ஆசிரியர்கள் எங்கள் பூமியில் வாழ்ந்தமை நீண்ட காலத்துக்கு முன்பு அல்ல, இதை எழுதியவரும் உயிரோடு இருக்கின்றார். வாசித்த நாமும் உயிரோடு இருக்கின்றோம்.

இந்த சமூகத்தின் மீதிருந்த தார்மீக கோபமே தமயந்தியை இக்கூத்துப் பிரதியை உருவாக்கியிருக்கத் தூண்டியிருக்க வேண்டும்.

கல்வியே கற்பிக்காத ஆசிரியர், குரு தட்சணையாக கட்டை விரலைக் கேட்டபோது, அதை வெட்டித் தரமாட்டேன் என்று அன்றைய ஏகலைவன்களாலும் இன்றைய ஏகலைவன்களாலும் கூற முடியாதிருப்பதே எனக்குள் தோன்றும் பெருஞ் சிக்கலாக இருக்கின்றது.

பண்டாரவன்னியன் வெள்ளையரிடம் இருந்து தப்பிவிட்டார் என்றோ, பாரி மூன்று பேரரசர்களையும் தாண்டி வாழ்ந்துவிட்டான் என்றோ, இன்றும். ஆதிக்ககாரர்களை எதிர்த்த விடுதலை போராட்டக்காரர்கள் தப்பி விட்டார்கள் என்றோ சொல்வது கற்பனை தான்.


கூத்தை முடிக்கும் போதில்...
"நீ விரலை வெட்டமாட்டேன் என்று சொல்லுகின்றாய்.. அப்படிச் சொல்லிவிட்டு இந்தக் காட்டிலோ நாட்டிலோ வாழமுடியாது" என்று துரோணர் சொல்லியிருக்கலாம். இது என் மன ஆதங்கத்தின் வெளிப்பாடுதான்.

எது எப்படி இருந்தாலும், ஒரு இலக்கியக்காரருக்கு எல்லா சாத்தியங்களும் பிரதியில் இருக்கின்றது என்ற உண்மை இருக்கின்றது. பார்ப்வர்களும் வாசிப்பவர்களும் அதை எப்படி உணருகின்றார்கள் என்பதைப் பொறுத்தே படைப்பின் மீதான விமர்சனம் அமையும்.

ஊர் ஒன்றுகூடல் என்பதும் பள்ளிக்கூட பழைய மாணவர் ஒன்றுகூடல் என்பதும் மகிழ்வான தருணங்களே. உறவுகளைக் காண்பதற்கும் பழைய நினைவுகளைப் பேசி மகிழ்வதற்குமான தருணங்கள் அவை. அதற்குச் சாட்டாக நிகழ்சிகளை நடாத்துவது ஒரு பொது வழமை.

அங்கு நடைபெறும் கலை நிகழ்வுகளுக்குப் பார்வையாளர் முக்கியத்துவம் கொடுக்கமாட்டர்கள். மக்கள் வெவ்வேறு பிராக்குகளுடன் அவ்வப்போது நிகழ்ச்சிகளைக் கவனிப்பார்கள்.
அப்படியான நிகழ்வொன்றில் இக்கூத்தை நிகழ்த்துவதற்குப் பெரிய துணிவு வேண்டும்.

ஏற்பாட்டாளர்களும் கலைஞர்களும் பொறுப்பாகவும் ஒழுங்காகவும் அதைச் செய்தார்கள்.
தாளம் தப்பவில்லை காட்சி ஒழுங்குகளில் சுணக்கம் ஏற்படவில்லை. குரல்கள் பிசிறவில்லை சிறியசிறிய தடங்கல்கள் ஏற்பட்டபோது கூத்தர்கள் அனுபவங்களால் அதைக் கடந்து போனர்கள்.

சின்னஞ்சிறார்களைக் கூத்தில் சேர்த்தது ஒரு முன்னோடியான முயற்சி. ஒவ்வொரு தாளக்கட்டாக அமைத்து, அவர்களை ஒவ்வொருவராக உள்ளே வரவிட்டு பின்பு ஒன்றாக ஆடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.

நாவாந்துறை மக்கள், தமது ஊர் ஒன்றியக் கலைநிகழ்வில் துணிச்சலாக ஒரு தென்மோடிக் கூத்தை அரங்காடி மக்களைக் கவர்ந்தமை துணிச்சலானதும் பாராட்டத் தக்கதுமான செயற்பாடே.

நன்றி: தாய்வீடு (கனடா)
செல்வம் அருளானந்தம் (காலம்)


காட்சிப் பதிவுகள் சில....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக