செவ்வாய், 10 செப்டம்பர், 2019

"ஏகலைவன்" மீளுருவாக்கம்


தெணியான்
07/06/2015 

"நான் அறிந்தவரையில் இதுவரை வெளிவந்த பிரதிகளுள் தமயந்தியின் பிரதி மிக வித்தியாசமானது. ஆழ்ந்த சமூக நோக்குடையது. இதற்கு முன்னர் வெளி வந்திருக்கும் பிரதிகள் ஏதோ வகையில் ஏகலைவன் துரோணரின் துரோகச் செயலுக்குப் பலியாவதையே எடுத்துப் பேசுகின்றன. அதேசமயம் முற்போக்கான சில சிந்தனையுடன் குறிப்பிட்ட சில மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. ஆனால் தமயந்தியின் பிரதி காலத்துக்கும், சமூக மாற்றத்துக்கும் தகுந்த வகையில் ஒரு பாய்ச்சலாக மீளுருவாக்கம் செய்யப் பெற்றுள்ளது".




காபாரதம், இராமாயணம் ஆகிய இரு இதிகாசங்களும் மக்கள் மத்தியில் நன்கு பரிட்சயமாக இருக்கும் மகா காவியங்கள். மக்கள் வாழ்வினைச் சீரிய நல் வழியில் செம்மைப்படுத்தி வழிப் படுத்துகின்றவைகளாக இந்த் இரு காவியங்களின் நீண்ட நெடுங்கதைகள் விளங்குகின்றன. இந்தக் காவியங்களின் பெருங்கதைகளையும், கதா பாத்திரங்களையும், இவை காட்டும் வாழ்க்கை நெறிகளையும் மக்கள்மயப் படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு வழிமுறைகளில் இக் காவியங்கள் சராசரி மக்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்டு வந்துள்ளன.


இவற்றுள் காவியப்படிமுறை என்பது ஒன்று. புராணப்படிப்புப் போன்றே இக்காவியப் படிப்பு இடம்பெறலாயிற்று. ஓய்வான நேரங்களில் பலரும் வந்து ஒன்றுகூடும் பொது மடங்களில் அல்லது பொது இடங்களில் பெரிய எழுத்து மகாபாரதம், பெரிய எழுத்து இராமாயணம் என்பவற்றை ஒருவர் படிக்க ஏனையோர் ஆழ்ந்தமர் செவிமடுத்து அறிந்து கொண்டனர். இன்னொரு வகையில் களரிகளில் ஆடும் கூத்துக்களாகவும் இக்காவியங்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டன.

விரிந்த பெருங் கதைகளாகப் பரந்து செல்லும் இந்த இரண்டு காவியங்களுக்கும் இடையே கிளைக் கதைகள் பல விரவிக் கிடக்கின்றன. அக் கிளைக் கதைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இன்றும் மக்களால் பேசப் பெற்றும், வெளிப்படுத்தப் பட்டும் வருகின்றன. அவற்றுள் முதன்மையான இடத்தினைப் பெறும் கிளைக் கதைகளாக மகாபாரதத்தில் ஏகலைவன், கர்ணன் கதைகளும், இராமாயணத்தில் வாலி கதையும் இருந்து வருகின்றன. இக் கிளைக் கதைகள் மக்களுக்கு நல்லுபதேசம் செய்ய வேண்டிய நீதி, தர்மம் என்பவற்றைத் தெளிவாகப் போதிக்கின்றன என்று கொள்ளப் படுகின்றன. இந்தக் கிளைக் கதைகளுள் ஏகலைவன் கதைக்குத் தனித்துவமான ஒரு இடம் இன்றுவரை இருந்து வருகின்றது.

மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள ஏகலைவன் கிளைக்கதை நான் அறிந்தவரையில் நான்கு கலை இலக்கியப் பிரதிகளாக உருவாக்கம் செய்யப் பட்டுள்ளன. இவற்றுள் ஒன்று கதை வடிவத்திலும், ஏனைய மூன்றும் நாடக வடிவம் தாங்கியும் வெளி வந்திருக்கின்றன. மகாபாரதத்து ஏகலைவன் கதையானது நீதியை, தர்மத்தை வலியுறுத்தும் ஒரு கதையாக ஒருகாலத்தில் கணிக்கப்பெற்று வந்திருக்கின்றது. ஆனால் அந்தக் கதையில் இடம்பெற்றுள்ள நிகழ்வானது மன நெருடலையும், மன உறுத்தலையும் பரந்து சிந்திக்கும் மக்கள் மத்தியில் இன்றுவரை கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. அதனால் இக் கதையானது மீள்வாசிப்புக்கு உள்ப்படுத்தப்பட்டு இன்று பல பிரதிகள் உருவாவதற்கு வழி வகுக்கும் அடிப்படையான கருத்து நிலையைத் தன்னுள்ளே கொண்டுள்ளது.

ஏகலைவன் கதையானது ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் தமிழ்ப்பாட நூலில் கதை வடிவில் 80களில் இடம் பெற்றிருந்தது. மகாபாரதத்தில் வரும் ஏகலைவன் என்னும் உப பாத்திரம் மீள் வாசிப்புக்கு உள்ப்படுத்தப்பட்டுக¨, நாடக வடிவத்தில் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு "உபகதை" என்ற பெயரில் தமிழ்நாட்டுப் படைப்பாளி பிரளயன் வெளிக்கொண்டு வந்துள்ளார். இதே ஏகலைவனை நெல்லியடி அம்பலத்தாடிகள் மன்றத்தைச் சேர்ந்த இளைய பத்மநாதன் நாடகமாகத் தயாரித்து "ஏகலைவன்" ஆக அரங்கேற்றி இருக்கின்றார். நோர்வேயில் வாழும் கவிஞரான தமயந்தி (விமலராஜன்) "ஏகலைவன்" தென்மோடிக்கூத்து, இளையோருக்கான அரங்காற்றுப் பிரதி ஒன்றினை உயிர்மெய் பதிப்பகம் வெளியீடாக நூல் உருவில் கொண்டு வந்துள்ளார்.

ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் தமிழ்ப்பாட நூலில் இடம் பெற்றிருந்த ஏகலைவன் கதையானது மகாபாரதக் கதையினை மாற்றமின்றி ஒப்புவிப்பதாகவே பதிவு செய்யப் பட்டுள்ளது. ஏகலைவன் வில்வித்தை பயிலுவதற்காக துரோணாச்சாரியாரை நாடி வருகின்றான். அவன் வேடுவ குலத்தில் பிறந்தவன் என்பதால் துரோணாச்சாரியார் அவனை நிராகரித்து அனுப்புகின்றார். ஏகலைவன், துரோணாச்சாரியார் போன்ற ஒரு உருவத்தைச் செய்து வைத்து, அவரை மானசீகக் குருவாகக் கொண்டு வில்வித்தை பயில்கின்றான். பின்னர் அர்ச்சுனனின் நாயொன்று ஏகலைவன் தொடுத்த கணையினால் இறந்து போகின்றது.

ஒரு கணையினால் ஆயிரம் துளைகள் அந்த நாயின் உடலில் போடப்பட்டுள்ள விந்தையைக் கண்டு துரோணாச்சாரியாரும், அர்ச்சுனனும் உள்ளம் அதிர்ந்து போகிறார்கள். அந்த வித்தையைத் தனக்குப் பிரியமான அர்ச்சுனன் ஒருவனுக்கே துரோணாச்சாரியார் கற்றுக் கொடுத்திருக்கின்ரார். அந்த வித்தையை அறிந்திருக்கும் இன்னொருவனான ஏகலைவனைச் சந்தித்து, தந்திரமாக குருதட்ஷணை கேட்கின்றார் துரோணர்.

ஏகலைவன் தனது மானசீகக் குருவுக்கு குருதட்ஷணை கொடுப்பதற்குச் சம்மதிக்கின்றான். அவனிலிருக்கும் வில்லாண்மையை முற்றாக அழித்துவிடும் நோக்கத்துடன் அவனது வலதுகைக் கட்டைவிரலை (பெருவிரல்) குருதட்ஷணையாகக் கேட்கின்றார். அவர் விருப்பத்துக்கிணங்கி தனது வலது கைக் கட்டை விரலை ஏகலைவன் துண்டித்துக் குருதட்ஷணையாக வைக்கின்றான். குருபக்திக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக ஏகலைவனின் இந்தச் செயற்பாடு வலியுறுத்திக் கூறப்படுகின்றது.
காட்டுமனிதன் ஏகலைவன் வில்வித்தையில் மிக உயர்ந்த நுட்பத்தை அறிந்து வைத்திருப்பதனால் ஏனைய உயிர்களுக்குத் துன்பம் விளையும் என்பதாலேயே துரோணர் இவ்வாறு செய்தாரென அவர் செயலுக்கு நியாயம்வேறு கற்பிக்கப் படுகின்றது.

இளைய பத்மநாதனால் உருவாக்கப்பட்ட ஏகலைவன் நாடகத்தில் (நூலுருப் பெற்றதாக அறிய முடியவில்லை) ஏகலைவன் தானே விரலைத் தறித்து துரோணாச்சாரியாரின் பாதங்களில் குருதட்ஷணையாக வைத்து வணங்குகின்றான். ஏகலைவனின் குருபக்தியினை இந் நிகழ்வு மேலும் வலுவாக அழுத்துகின்றது.

ஏகலைவன் கதையினை மீள்வாசிப்புக்கு உட்படுத்தி "உபகதை" என மீளுருவாக்கம் செய்துள்ளார் பிரளயன். இந்த நாடகப் பிரதியின் சிறப்பினையும், தேவையினையும் கவனத்திற் கொண்டு கல்வி வெளியீட்டுத் திணைக்களம் 2006இல் வெளியிட்டிருக்கும் "தமிழ்மொழியும், இலக்கியமும் தரம்-10" நூலில் ஒரு காட்சியை இடம்பெறச் செய்திருக்கின்றது. மூன்று காட்சிகளத் தன்னகத்தே கொண்டுள்ள இந்தச் சிறிய நாடகம் பின்வரும் காட்சியுடன் ஆரம்பமாகின்றது.

வெளிச்சம் பரவுகிறது. பாடல் ஒலிக்கிறது. குருவம்சத்து இளவரசர்கள் துரோணாச்சாரியாரைப் பல்லக்கில் சுமந்தபடி அரங்கினுள் நுழைகின்றார்கள்.


பாடல்;
ஏனோ! ஏனோ, ஏனோ, ஏனோ
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
மேலவன் கீழவன்....

இக் காட்சியினைத் தொடர்ந்து துரோணாச்சாரியார் ஏகலைவன் யாரெனத் தேடுகின்றார். ஆரம்பத்தில் தன்னை இனம்காட்டாது மறைந்திருந்த ஏகலைவன், பின் வெளிப்படுகின்றான். துரோணரின் கட்டளை பிக்கிறது. "ம் அர்ச்சுனா! வெட்டியெறி இவன் கட்டை விரலை!" அர்ச்சுனன் வாளை உருவி ஏகலைவன் கட்டை விரலை வெட்டி எறிகின்றான். 

மீளுருவாக்கம் செய்யப் பட்டுள்ள இந்த நாடகம் ஆதிக்கசாதியின் அடக்குமுறை, அடாவடித்தனம், அதர்மம் என்பவற்றை வெளிக்கொண்டு வந்து காட்சிப் படுத்துகின்றது.
காலங்காலமாக "குருபக்தி" என்று பேசப்பட்டு வந்த போலி நியாயத்தை ஓங்கி நிராகரிக்கிறது. ஏகலைவன் தனது வலது கைக் கட்டை விரலை அவனே வெட்டிக் குருதட்ஷணை கொடுத்தான் என்னும் போலி நியாயத்தை முற்றாக நிராகரிக்கின்றது.

"வில்லும் அம்பும் எங்கள் மூச்சு, வில்லும் அம்பும் எங்கள் வாழ்வு..."  


கடந்த ஆண்டு (2014) நூலுருப் பெற்று வெளி வந்திருக்கிறது தமயந்தியின் "ஏகலைவன்" தென்மோடிக் கூத்து. மகாபாரதத்து ஏகலைவனை மீள்வாசிப்புச் செய்து, மீளுருவாக்கம் செய்திருக்கின்றார் கவிஞர் தமயந்தி. எனது பார்வைக்குக் கிட்டிய வகையில் மீளுருவாக்கம் செய்யப்பட்ட மூன்றாவது நாடகப் பிரதி இது. இந்தப் பிரதியானது விளிம்புநிலை மக்கள் வாழ்வின் அடிப்படைப் பிரச்சனைகள் பற்றிப் பேசுகின்றது. ஏகலைவன் தருவைத் தொடர்ந்து துரோணரை நோக்கி மேலும் உறுதிபடக் கூறுகின்றான்;

"குருவே! கட்டை விரலென்ன, உயிரினை ஈயவும் சித்தமாயுள்ளேன். ஆனால் உங்கள் உள்ளெண்ணம் குரோதமானது. சதி நிறைந்தது. வரலாறு உங்கள் துரோகத்தை இழித்துரைக்கும். என்னையும் மூடனென நகைதுரைக்கும். நான் தரும் குருகாணிக்கையால் இந்த இரண்டு தவறும் நிகழ வேண்டாம் நீங்கள் சென்று வருக" 

துரோணர் கூறுகின்ற குருகாணிக்கையை ஏகலைவன் கொடுப்பதற்கு மறுப்பதுடன், அவரது அந்தரங்க நோக்கத்தினை விளங்கிகொண்டு தனது மறுப்புக்கான நியாயங்களையும் முன் வைக்கின்றான்.


நான் அறிந்தவரையில் இதுவரை வெளிவந்த பிரதிகளுள் தமயந்தியின் பிரதி மிக வித்தியாசமானது. ஆழ்ந்த சமூக நோக்குடையது. இதற்கு முன்னர் வெளி வந்திருக்கும் பிரதிகள் ஏதோ வகையில் ஏகலைவன் துரோணரின் துரோகச் செயலுக்குப் பலியாவதையே எடுத்துப் பேசுகின்றன. அதேசமயம் முற்போக்கான சில சிந்தனையுடன் குறிப்பிட்ட சில மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. ஆனால் தமயந்தியின் பிரதி காலத்துக்கும், சமூக மாற்றத்துக்கும் தகுந்த வகையில் ஒரு பாய்ச்சலாக மீளுருவாக்கம் செய்யப் பெற்றுள்ளது.


விளிம்புநிலை மக்கள் அனைவரையும் சிந்தித்துச் செயற்படத் தூண்டுகிறது. சமூகத்தில் தமக்கெதிராக இளைக்கப்படும் கொடுமைகளை, புறக்கணிப்புகளை விளங்கிக் கொள்ள வேண்டும். அவைகளைக் கண்டும் காணாது ஒதுங்கிப் போகாது அவற்றை நிராகரிக்க வேண்டும். அவற்றை வெளிக்கொண்டு வருவதுடன், அந்த அநீதிகளுக்கும், அநாகரீகத்துக்கும், பொய்மைகளுக்கும், போலிகளுக்கும் எதிராகச் செயற்பட வேண்டும்.

அறிவைப் பயன்படுத்தி, நிமிர்ந்து நின்று கொடுமைகளுக்கு எதிராக முகம் கொடுக்க வேண்டுமெனப் பலவாறாகச் சிந்திக்கத் தூண்டுகிறது. இந்த நாடகப் பிரதியை நிச்சயம் எல்லோரும் படித்துப் பார்க்க வேண்டும்.

தெணியான்
நன்றி: தினக்குரல்
07/06/2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக