வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

தங்குமரம்



தங்குமரம் சேர்ந்து பறப்பதில்லை பறவைகளோடு.
இலைகளை, பூக்களை, கிளைகளை
உதிர்ந்து கிடக்கும் சருகுகளைக்கூட
தங்கிச்செல்ல வருமவை அறிந்திருக்கக் கூடும்.



நிலத்தடியின் ஏழூற்றுக்களின் தடாகத்தில்
விரல் தொட்டழையும் வேர்களை
பறவைகள் அறிந்திருக்க எந்தவித நியாயமுமே இருக்கமுடியாது.

காற்றில் அசைந்தும்
மழையில் நீராடியும்
வெயிலில் உடல் காய்ந்தும்
பனியில் குளிர்ந்தும் பேய்க்காற்றை எதிர்த்தும்
இழப்புக்களோடும், இனித்தல்களோடும்
காலகாலமாக வாழ்ந்திருக்கும் மரம்
மறுத்ததில்லை குந்த இடமில்லையென
வந்து போகும் பறவைகளுக்கு.

பழங்கொத்திப் பறவைகளும் வரும்
இலை மேயும் பறவைகளும் வரும்
தேனுண்ணும் பறவைகளும் வரும்
கூடுகட்ட கிளை முறிக்கும் பறவைகளும் வரும்
சிறகாறக், காலாற கிளையில் உட்கார்ந்து
சிறகு நீவிச் செல்லும் மறவைகளும் வரும்.
வந்து வந்து போகும் இவையனைத்தும்.

வேர்கள் அறியாப் பறவைகளுக்கு மரம்
ஒரு மரமாக மட்டுமே தெரியும்.
ஆயினும், எதுவாயினும்
வருகைகளுக்காக
பூக்களோடும், பழங்களோடும்
காங்களோடும் நிழலோடும்.

கரையில் காத்திருக்கும் மரம்
சேர்ந்து பறப்பதில்லை பறவைகளோடு.

-தமயந்தி.
13.08.2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக