செவ்வாய், 2 செப்டம்பர், 2014

மவுனத்தோடவள் காத்திருத்தல்... -தமயந்தி.



தணுவில் முனங்கின்
வீச்சுளாத்தி மரங்கள்
முகையவிழ்த்த வாசனையை
செக்கல் சோளகம்
கரைநீளம் தூவிக்கொண்டிருந்தது.
அந்த மெல்லிய மாலையில்தான்
தோணியேறினேன்.

தலைகள் கொய்தெறியப்பட்ட
தணுவில் தென்னைகளை
தளநார் இல்லாமல்
ஏறிக்கொண்டிருந்தது
முகமுடைந்த நிலவு.
முனங்கை விட்டு
தோணி அகலுவதை
நிலவு
முகிற்புதருக்குள் மறைந்திருந்து
எட்டியெட்டிப் பார்த்ததை
நான் கண்டேன்.
அவளும்தான்.
முனங்குப் பாறையில்
இறுக்கிக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு,
அணையவந்த கள்ளத்தோணியில்
ஏற்றி அனுப்பி வைத்தாள்.
என்னை நானே
நாடு கடத்திக் கொண்ட நாள்த்தொட்டு
அவளது மவுனத்தின் குரல்கள்
வீச்சுளாத்திக் காற்றிலும் அலையிலுமாக
வந்துவந்து போம்.
இன்னுமவள்
முனங்குப் பாறையில்தான்
அமர்ந்திருக்கிறாள்
மீள வருவேனென்ற நினைப்பில்.
பூவும் பிஞ்சுமான
வீச்சுளாத்தி மரங்கள்
எல்லாமிழந்து
மடிவற்றி நிற்பதாக சொன்னது
அண்மையில்
தெருவில் நடந்த கொண்டல் காற்று.
மீண்டும் நான் வருவதாக
நம்புகிறாள் அவள்
என்றும் சொன்னது.
நானோ
வார்த்தை தவறிய கடன்காரனாக
ஈரத்தெரு நீளம் நடக்கிறேன்.
அதே நிலவு
இப்போதும், இங்கேயும்
முகிற்புதருக்குள் மறைந்திருந்தபடி
எட்டிப் பார்ப்பதைக் காண்கிறேன்.
அவளும்
அங்கிதைக் காணத் தவற மாட்டாள்.

30.08.2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக