புதன், 23 ஜூலை, 2014

ஒரு மானுடனுக்காக!

விமலேஸ்வரன் நினைவாக (ஜூலை 1993இல்)

கால்மாட்டிலும் தலைமாட்டிலும்
வெட்கமும் வேதனையும்
வந்தமர்ந்து கொண்டு
அவனது
மரணத்தின் வாழ்தலைப் பற்றி
விவாதித்துக் கொண்டிருக்கும்.

இராக்காலம் பாதியும்
பாதியில் பாதியும் வராத
பனிப்புல இருப்பில்
அதில் பாதியாய் கிடைக்கும்
இமைத் தேற்றமும் இல்லையென்றாகிவிடும்.

தட்டிக்கொட்டி
சேர்த்த சில்லறைகளால்
கிடைத்த
வளாகசாலையின் மண்டித் தேநீர்.
மிடறுக் கணக்காய்
பங்குபோட்டுக் குடித்த
காலங்கள் வந்து துரத்துகிறது.


அவனிடம் இரவல் வாங்கிய
ஒரு சிவப்புப் புத்தகத்துக்காய்
ஒளித்துத் திரிந்த காலம் வந்து
நிரந்தரமாய்
ஒழிந்துவிடு எனவுரைக்கிறது.

மீட்புக்காய்,
மீட்பின் மீட்புக்காய்
தம் உயிர்களை மீட்கமுடியாமல் போன
மனிதர்களோடு அவனும்.....

கூனிக்குறுகி
மனம்
தனக்குள் தன்னையே
மறைத்துக்கொள்ள முயற்சித்து
தோற்றுப்போனது.

விரல் முறியளவுகூட இல்லாத
சன்னத் துண்டின்
மிரட்சியில்
சமுத்திரங்களையும்
மலைகளையும் கண்டங்களையும் கடந்து
இயந்திர பூமிக்குள்
எம்மையுமோர் இயந்திரமாய்
இணைத்துக் கொண்டோம்.

வாழ்வில் அர்த்தம்
வாழ்வதில் அர்த்தம்

மண்ணொடு தன்
இருப்பையும் இணைத்துக்கொண்டு
உயிர்களை நேசிப்பதற்காக
உயிரை வெறுத்த அந்த
மானுடன் முன்னால்,
அவனது வார்த்தைகள் முன்னால்
வாழ்க்கையையும்,
வாழ்வின் வாழ்வையும் போட்டுவிட்டு
ஓடிவந்த மனம் கூனிக் குறுகி
தனக்குள் தன்னையே மறைத்துக்கொண்டு
தோற்று விடுகிறது.

தமயந்தி / ஜூலை 1993

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக