செவ்வாய், 22 ஜூலை, 2014

கோணல் முகங்கள்


வண்ணத்துப் பூச்சிகளின் கனவுகளில்
அப்பப்போ வந்துபோகும்
சிறு பாத்திரம் எனது


வாயிற் காவலனாக,
தூதுவனாக,
குதிரை மேய்ப்பவனாக,
வண்ணத்துப்பூச்சிகளை தலையில் சுமந்து
ஆற்றைக் கடந்து அக்கரையில் சேர்ப்பவனாக,

பூமரங்களுக்கு
நீர் பாய்ச்சுபவனாக,
பேறுகாலங்களில் பரிகரிப்பவனாக
இப்படி
அவ்வப்போது பாத்திரங்கள் மாறும்.
ஆயினும்
எல்லாவற்றிலும் பணியாளன் பாத்திரம்தான்.
அதிலொன்றும் குற்றமில்லை.

இன்று அதிகாலைக்கு சற்று முன்னதாக
உலகத்தின் எல்லா
வண்ணத்துப் பூச்சிகளின் கனவுகளிலும்
ஒரே சமயத்தில் தோன்றுவதான பாத்திரம்
இன்பகரமானதாக இருந்தது.

அவற்றின் சிறகுகளில்
நிறங்கள் தீட்டுவதும்,
வகை வகையான ஓவியங்கள் வரைவதும்.

எல்லா வண்ணத்துப்பூச்சிகளும்
விரும்பிக் கேட்ட ஓவியம்
மனித முகங்களை
கோணல் கோணலாக
தமது சிறகுகளில் வரையும்படிக்கு.

-தமயந்தி. 
23.07.2014, 04;45

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக