செவ்வாய், 22 ஜூலை, 2014

நம்பிக்கை மீதான நம்பிக்கையில்

ஓசை-10 (ஐப்பசி-1992) 


இடைவிடாத பயணம்
இன்றுவரை வெட்டவெளியில்.
அடிவானின் கீழ்
அமிழ்ந்திக்கிடக்கும்
எனது கிராமம்
இன்னும்
மேலெழவில்லை
நம்பிக்கையும் தேயவில்லை.
களைத்துப்போன கால்களுக்கு
ஆறுதல் கூறி
பயணம் தொடர்கிறது.


விழிகள் கூர்மையடையும்
வெளிகளுக்கப்பால்
எங்கேயாவது ஓர்
பனையின் தலைதானும்
புலப்படாதா என்று

இதுவரை இல்லை.

இருட்டுக்கூடையுள்
பாம்பெனப் பூமி
மகுடி வாசித்த
பொழுதும் போனது .

பயம்
கவ்விக்கொள்ள முயற்சித்து
பின் தொடரும்.

விரட்டியபடி இன்றுவரை.

நம்பிக்கை, நம்பிக்கை.
நம்பிக்கை மீது நம்பிக்கை வைத்து
நடை நீட்டி
பயணம் விரிகிறது.

எனது கிராமம்
எனது கிராமத்தில்,
தோட்ட விரிப்பில்,
தென்னங்கால்கள் புதைந்த
தெளிந்த மணல் மேனியில்
எனது கால்கள் தரிப்புக் காணும்வரை
பயணம் நீளும்
நம்பிக்கைமீது கொண்ட
நம்பிக்கையோடு.

தமயந்தி (ஏப்ரல் 1992)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக