செவ்வாய், 22 ஜூலை, 2014

எனது கிராமம்



சுவடுகள்-60 (நவம்பர் 1994)


பனிப்போர்வையுள்
நடுங்கிக் கிடந்த
எனது
பலகை அறையுள்
இன்னொரு போர்வையுள் நான்
கண்ணயர்ந்த சற்று நேரம்


கனவில்
எனது கிராமம்
கால்மாட்டில் வந்து குந்தியிருந்தது.
ரேகைகள் போலோடிய
அதன் வீதிகள்
அழிந்து கிடந்தன.
பசுந்தரையான அதன் ஆடை
காய்ந்து, தூசு படிந்து
கசங்கிக் கிடந்தது -
இடையிடையே கிழிசல்கள்.

அதன் மடியிலிருந்த குடிசைகள்
செத்து, சிதைந்து
சிந்திக் கிடந்தன.
கால்மாட்டில் வந்திருந்து
எனது கிராமம்
கண்ணீர் விட்டது.

கிராமத்துக் கோடியில்
முளைவிட்ட
பனம் விதைகளிடையே
பாதியிலும் பாதியான
உயிரைக் காவியபடி
கிழவியொருத்தி பாடுகிறாள்.
"போனாரே போனாரே
என் மக்கள் பரதேசம்
போனவர் வருவாரோ
இந்த
போக்கத்த பூமி மீண்டும்...?"

அவளது பாடல்
என்னிரு கன்னங்களிலும்
மாறி மாறி அறைந்தது.
எனது நெஞ்சில்
கால்களால்
ஓங்கி உதைத்தது.

விழித்தேன்.
கனவு போனது
ஆனால்
கால்மாட்டில் அழுதிருந்தது
எனது கிராமம்.

தமயந்தி 1994-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக