புதன், 16 ஜூலை, 2014

எம்மிடமிருந்து தொலைந்தவர்கள் நினைவாக!

-தமயந்தி- (1987 இந்தியா)  


நமது சூரியன்
உங்களோடுதான் மரணித்தது.

நீங்கள் வருக
உங்களோடு
நமது சூரியனும் எழுக.

நமது
சூரியன் வருக
சூரியனோடு நீங்களும் எழுக.


காத்திருப்பு.
காலத்தின் பணிப்புக்காக.
தானாகத் திறபடாதபடிக்கு
உங்கள் கல்லறையின்
வாயிற் கற்கள்.
காவலுக்கு தூதுவர்கள்.

நாங்கள் திறப்போம்
காலம் பணித்ததென்று
கல்லறையின் கதவுகளை.
நீங்கள் வருக,
உங்களோடு
நமது சூரியனும் எழுக

மக்களின் மெளனங்களுக்கெல்லாம்
ஓர்
கல்லறை கட்டப் பட்டபின்
உங்கள் கல்லறைகள் திறக்கப்படும்
மெளனம் கலைத்த மக்கள் திரளால்.

அதிகாலை ஆரவாரம்
அவற்றிடை பூபாளம்
நமது சூரியன்
ஒளி கொண்டு வருக
சூரியனோடு நீங்களும் எழுக!

ஒளியைப் பறித்து
இருளைத் தந்தவர் ஓடி மறைவர்
ஓடும் குதிகளில்
ஒட்டிச் செல்லும் எமது மண்னையும்
மெளனம் தொலைத்த மக்கள் பறிப்பர்.

மண்ணிலிருந்து விண்ணைத் தொடவும்
விலங்கற்ற காற்றில்
உயரும் நமது தேசத்தின் பாடல்.

(சுமைகள்: வைகாசி 1992)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக