சனி, 5 ஜூலை, 2014

ஓவியனாகி, பின் எதுவாகி...?

தமயந்தி  -2007-



 நான் ஓவியனல்ல.
ஒரு மனித உருவத்தைக்கூட
மூக்கு வாய் கண்ணென்று
ஒழுங்காக வரைந்தறியேன்.



கோடற்ற வெள்ளைத் தாளில்
ஒருவரி எழுதுவேனாகில்,
உலகத்து மலைகளிலெல்லாம்
ஏறியிறங்கிவருமவை.
அதிகாரிக்கோ, அல்லது
அம்மாவுக்கோ கடிதம் எழுதுவதற்கும்
எனக்கு
ஒற்றைறூள் கொப்பித்தாள் வேண்டும்.
ஐந்து சென்ரிமீற்ரரில் ஒரு
நேர்கோடுதன்னும் வரையமாட்டேன்.
ஒருநாள், நீயென்னோடிருந்த சில
கணத்துளிகளில்
மின்னாமல் முழங்காமல்
ஓவியனாகினேன்.
எப்படி…?
அது எப்படி நிகழ்ந்ததென்று
எனக்குத் தெரியாது,
உனக்கும் அதுபற்றி
எதுவும் தெரியாதென்கிறாய். எது
எப்படியோ, இப்போ
நான் ஓவியன்.
என் விரல்களின் பார்வையை
காதலோடு கவ்வி
அசைகிறது தூரிகை.
அண்ட சராசரங்களும்
அதன்மேல்
அசையும், அசையாதிருக்கும்
அனைத்துமென் வரைபுக்குள்
கோடுகளாகிப்போகின்றன.
அழுகையைச் சிரிப்பாக்குகிறேன்
சிரிப்பை நகைப்பாக்குகிறேன்.
நகைப்பைத் திகைப்பாக்குகிறேன்
திகைப்பை சுவைப்பாக்குகிறேன்.
இருளை வெளியாக்குகிறேன்
வெளியை குளிராக்குகிறேன்.
குளிரை மலராக்குகிறேன்,
மலரை போர்வீரனாக்குகிறேன்.
நித்திரையை சூரியனாக்குகிறேன்,
சூரியனை அடைமழையாக்குகிறேன்.
அதையே குடையுமாக்குகிறேன்.
அடை மழையில் குளிர் காய்கிறேன்.

நெருப்பால் கண்படுமனைத்தையும் நனைப்பாக்குகிறேன்.
கடலினலைகளைப் பாத்திகட்டி விதைநிலமாக்குகிறேன்,
வயலை விமானங்கொண்டுழுது,
வைரத்தை நெல்நுனியால் வெட்டுகிறேன்.
முல்லையில் ஒட்டகம் மேய்த்து,
பாலையில் கப்பலோட்டுகிறேன்.
இன்னும்...,
எரிமலைகளெல்லாம் பாடசாலைக்குப் போகின்றன,
கோயில்களும் சத்திரங்களும் மாடுகள் மேய்க்கின்றன.
சிங்கமும் புலியும் கூடவே யானையும்
செபமாலைக்கல் உருட்டுகின்றன,
ஒன்றுக்கொன்று தலை வாரி விடுகின்றன.
மனிதரின் மூக்கில் முச்சைகட்டி
பட்டம் விட்டு விளையாடுகின்றன கோழிக்குஞ்சுகள்.
இன்னும் என்னென்னவெல்லாமோ
நடந்தேறுகிறதென் சித்திரத்தால்.
மந்திர மாயமோ என்றேன்,
இந்திர வேகமென்றாய்.
அது எதுவோ..,
ஆனால்
என்னோடு நீயிருந்த
அந்த சில கணத்துளிகளில்
நான்
ஓவியனாகிவிட்டேன் என்பது மட்டும் நிசம் .
என்னவாயிற்று…,
இப்போ
இவையனைத்துக் காரியங்களுக்கும்
என்னவாயிற்று…?,
எனக்கென்னவாயிற்று…?
இப்போ,
நீயென் காதல்மீது கொண்ட வெறுப்பை
எதுவாக்கவும் தெரியாமல்
நானே திகைப்பாகிப் போனேன்.
பேருந்தில் அருகிருக்iயில் இருப்போருக்கும்
நகைப்பாகிப் போனேன்.
நான் இப்போ
எதுவாகிப் போனேன் என்பது
உனக்காவது தெரியுமா…?
உனது சிற்றுந்து புதிதாகத் தாலியணிந்து
என்னைக் கடந்து சென்றபோதுதான் புரிந்தது
நீ எதுவாகிப் போனாயென்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக