புதன், 16 ஜூலை, 2014

இரண்டு வெள்ளிக்காசுக்கு சனங்களின் கரையை விற்றவர்கள்!

-தமயந்தி- (16.07.2014)



ர்முனையிலுள்ள அந்த முதுபெரும் ஒற்றைப் புளியமரம்
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருக்கிறது மவுனமாக.

ஒப்பாட்டன் கரையில் கதியாலாய் நட்டுவைத்துப்போன
பருத்த பூவரசின் நீங்கள் தறித்ததுபோக மீதியான வேர்க்கால்கள்
இன்னமும் மண்ணடியில் ஈரலித்துக் கிடக்கிறது கோபத்தோடு


இப்போதும் உன்மத்தம் குறையாத அந்திரான் ஒற்றைப் பனையே!
ஒருவர்விடாமல் அவர்கள் எல்லோரையும் பிடித்துவா
அவர்களில் ஒருவர்கூட உண்மை பேசுபவர்கள் அல்ல
சொல்வதெல்லாம் பொய், பொய்யைத் தவிர வேறறொன்றுமில்லை.

பருத்த புளியைக் கட்டிப் பிடித்தாற்போல்
கட்டிப் போடுங்கள் அவர்களை.
அதே புளியின் கிளைகளை உருவி
முதுகுத்தோல் உரியும்வரை அடியுங்கள்.
பூமிமீதும், பூமிகொண்ட சனத்தின் மீதும்
அநியாயம் கொண்டவர்கள் அவர்கள்.

கர்ப்பம் தரிக்காத கருப்பைகளின் பொருட்டு
கவலை கொண்டனவாயிருந்த கரைகளை கண்முன்னாலேயே
இரண்டு வெள்ளிக் காசுக்கு கூறுபோட்டு வியாபாரித்தவர்கள்.

எந்நேரமும் சனங்களின் மீது இரக்கமாயிருந்த கடலின் பொருட்டு
நஞ்சை விதைத்த கொள்ளையர்கள் அவர்கள்.
ஓ கொல்கொதா மலைகளே!
நீங்கள் பாறி விழுங்கள் இவர்கள் பாவங்கள் தொலையட்டும் என
இரக்கங் காட்டத் தகுதியை இழந்தவர்கள்.

புளியில் கட்டிவைத்து முதுகுத்தோலை உரித்துப்போடு என்
உன்மத்தம் குறையாத மூத்த அந்திரான் ஒற்றைப் பனையே
செக்கல் அடங்குவதற்குள், மேற்றிசையையும் சாட்சி வைத்தே. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக