சனி, 5 ஜூலை, 2014

குருவிச்சை

 -தமயந்தி- (25.06.2014)


எங்கெங்கோ குந்தியிருந்துவிட்டு 
கடைசியாக 
எனது பசுமரக்கிளையில் வந்து 
சிறகாற்றிய காகமிட்ட எச்சம். 
அதற்குள்ளிருந்து 
மரத்தடியில் முளை விட்டதுதான் 
இந்தக் குருவிச்சை. 

எனது பசுமரத்தின் நிழலிலேயே வேரூன்றி 
அதிலேயே வளர்ந்து 
அதன் நீரையே குடித்து 
அதன் மேனியிலேயே படர்ந்து 

போதாததற்கு 

அதன் உடலத்துள்ளும் புகுந்து 
தன்னை வியாபித்துக்கொண்டது 
குருவிச்சை. 

எனது மரம் 
சிறு குருவிச்சையால் பிளக்கப்பட்டு 
பாறிவிழுந்து பாடையில் போகும் நாளை. 
ஆனால் குருவிச்சை....? 
இன்னொரு எச்சமாகி 
இன்னொரு மரத்தினடியில் வேரூன்றி 
அதன் நிழலிலேயே வளர்ந்து..... 

குருவிச்சைகளை வெட்டி 
அக்கினியிலே எறியாதவரை 
எங்கள் பசுமரங்கள் நற்கனி கொடாமல் 
பாறி விழுந்தழியும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக