ஞாயிறு, 6 ஜூலை, 2014

இறுதியாக ஒரேயொரு கவிதை -தமயந்தி- (2005)

எனக்குள் புதைந்து போன,
உங்களுக்குள் விதைக்கமுடியாத
எனது
கவிதைகளுக்கு அஞ்சலியாகவும்,
ஒரு
முடிவுரைக்காகவும்
இறுதியாக ஒரேயொரு கவிதை
அலைகளோடு
அள்ளுண்டுபோன வார்த்தைகளை
தேடிக்களைத்த சிறுதோணி
அடிபட்டு,
அலைவாக்கரையொதுங்கி
பாதி உயிர் சுமந்து,
கருமுகிலின்தும்மலின்
துமித்துணிக்கைகளில்
தொண்டை நனைத்தபடி
இன்னமும்
எதற்காகவோ காத்துக் கிடக்கிறது

அது
ஒரு பயணத்தின் தொடக்கம்
அல்லது
ஒரு பயணத்தின் முடிவு
ஏன்
இரண்டுமாகக்கூட இருக்கலாம்.

கருவானத்தின் முகத்தை
கடல் சுமக்கிறது

கடல் கறுப்பென்றும்
வானம் உப்பென்றும்
வாதம் நடத்துங்கள்
அதற்கென்றே கடைவிரித்திருப்போர்.

ஒரு பயணத்துக்கான
முடிப்புக்கும்
இன்னொரு பயணத்துக்கான
தொடக்கத்துக்கும்
எனது
சiறுதோணி
காத்துக் கிடக்கிறது

அது
உப்பையும் அறியும்,
கறுப்பையும் அறியும்.
கடலையும் அறியும்,
வானையும் அறியும்.

கழுத்திலும் கால்களிலும்
விலங்கிட்டவர்கள் சொல்லலாம்
கட்டுண்டு கிடப்பதாய்.
கட்டறுக்க நாழிகை
கனதியாய்த் தேவையில்லை.
நாளை நிகழலாம்
அடுத்த
நாழிகையும் நிகழலாம்.

மரக்கோலைப் பறித்தாலென்ன,
அணைபலகை முறித்தாலென்ன
பறித்தவரும் முறித்தவரும்
எக்காளமிட்டு சிரித்தாலென்ன
உடலம் கவிந்திருக்கும்
தோலையுரித்து
உப்புக்காற்றில் உலரவிட்டு
பாயாய் விரித்து
பறக்குமென் சிறுதோணி

இதுதான் எனது நம்பிக்கை
நம்பிக்கைமீதான நம்பிக்கை
இதுதான் எனது சன்னதம்
வாழ்வுக்கும் எனக்குமான சன்னதம்.

இறுதியாக ஒரேயொரு கவிதை.
உங்களுக்குள்
விதைக்க முடியாத
அந்தக் கவிதைகளுக்கு அஞ்சலியாய்.

இனி
பிறப்பெடுக்குமென் கவிதையெலாம்
முன்புபோல் சமரசம் பேசாது
சோகத்தை சுமக்காது
துன்பியல் நாடகமும் நடத்தாது ன
தீயெனச் சுடும்.
துன்பங்களை, தோல்விகளை
வஞ்சங்களை, வாடிக் கிடத்தலை
எரித்து நீறாக்கும்.

பயங்களும் பாசாங்குகளும்
விலகட்டும்
வேண்டவே வேண்டாம்
பேரலை தாண்டும் வல்லமை போதும்

படகு சிறிதானாலென்ன
பயணம் பெரிது
சென்றடையும் கரையும் பெரிது.
முடிவற்றதும்கூட.
இந்த முடிவற்ற பயணத்தில்
நிசங்கள் மட்டும்
கை குலுக்கிக் கொள்ளட்டும்.

நன்றி: உயிர்நிழல், 2006

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக