சனி, 5 ஜூலை, 2014

உலக்கையன்- தமயந்தி

21-01-2013 

செத்துப்போன எனது ஆச்சி அன்னம்மா ஒரு தீர்க்கதரிசிதான்.
அவள் சொல்லிவிட்டுப்போன ஏகப்பட்ட சங்கதிகள் நடந்தேறியிருக்கின்றன.
காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதைபோல்தான் என்று எத்தனை சங்கதிகளுக்குத்தான் சமாதானம் சொல்ல முடியும்.
மோட்டுச் சாஸ்திரங்கள் போலவோ அல்லது ஐதீகப் பம்மாத்துப்போலவோ, அல்லது குருட்டு விசுவாசத்தைப் போலவோ இல்லை இது. அவைகள் வேறு. இது வேறு.

தீர்க்கதரிசனம் வேறுதான். அறிவோடு ஆய்வோடு தொடர்புடையது. பகுத்தறிவோடு சம்பந்தமுடையது.

என்னை அவள் செல்லமாய் அழைப்பது உலக்கையன் என்றுதான்.

படம் புடிக்கிறவனாகத்தானடா நீ வருவாய் என்றாள். வந்தேன்.
கதப்பொஸ்தகம் எழுதுவாய் என்றாள். எழுதுகிறேன்.
கடலோடி விண்ணன் என்றாள். அதிகமாகவே.
கூத்துக்காறன் என்றாள். ஆகினேன்.
ஏமாந்த சோணகிரி என்றாள். அப்படியே.
இப்படி ஏகப்பட்டது....


ஆனாலும் இவைகள் எல்லாவற்றையும்விட அதிகமாக அவள் சொன்னது "உலக்கையன்" என்பதைத்தான். வானத்து நட்சத்திரங்களின் எண்ணிக்கையைவிட அதிகமிருக்கும். இப்போ அதுவும் பலிக்கத் தொடங்கி விட்டது.

துவக்குகளால் சுட்டுத்தள்ளி செய்யும் வன்முறைகளை விடக் கொடுமையான வன்முறைகள்
இப்போதெல்லாம் எழுத்துக்களால், அவதூறுகளால் செய்யப்படும் வன்முறைகள்.
என்னைக்கேட்டால் சொல்வேன் அவதூறு எழுத்துக்களால் செய்யும் வன்முறையைவிட
நாமே நமது செலவில் துப்பாக்கியை வாங்கி அவதூறாளர்களின் கைகளில் கொடுத்து
"சுடுடா சூனா" என்று சொல்லி செத்துப் போவது எவ்வளவோ மேல் என்று.

அதெல்லாம் சரிதான்,
இந்தப் பூமிக்குமேல் வாழ்வதற்கு எந்தவித அருகதையுமில்லாத இந்தப் பதருகளுக்காக
நாமேன் சாக வேணும். வடிவாக ஆராய்ந்தால் இந்த அவதூறுக் கோஷ்டி பூராவும் தத்தமது மனைவிமாரோடு ஒழுங்காகக் குடும்பம் நடத்த வக்கற்றுப் போனவர்கள் என்பது
தெட்டத் தெளிவாகிறது.
(இப்படியானவர்கள் மற்றவர்கள் மீதான அவதூறுப் பணியில் தீவிரமாக இறங்க மிக முக்கியமான உளவியல் காரணமும் இந்த சுய குடும்பத் தோல்விதான். துணையோடு அமைதியாக சந்தோஷமாக இருப்பவர்களைக் கண்டால் இவர்களால் தாங்கிக் கொள்ளவோ, சகித்துக்கொள்ளவோ முடிவதில்லை) நான் சொல்வது உண்மை. கிண்டிப் பாருங்கள் கிடைக்கும். தத்தமது துணைகளைத் திருப்திப் படுத்தத் தெரியாத, திருப்திப் படாத இவர்களுக்காக நாமேன் நாண்டு சாக வேணும்.

இந்த இடத்தில்தான் ஆச்சி சொன்ன தீர்க்கதரிசனம் நடந்தேறுகிறது.
மேற் சொன்ன இரண்டு வன்முறைகளைவிட மிக மிக சக்தி குறைந்தது. வெரி வெரி மைல்ட்.

உலக்கை.
சங்க இலக்கியங்களிலெல்லாம் இடம் பிடித்த மேதகு உலக்கை. சிற்றன்னையான லேனாள் ஞானசவுந்தரியின் கையில் கொடுத்த மாதிரியான உலக்கை. பூண் போட்ட கருங்காலி உலக்கை.

படம் பிடிப்பதை, கதைப்பொஸ்தகம் எழுதுவதை, கடலோடுவதை, கூத்துப் போடுவதை என
எல்லாவற்றையும் விட்டுவிட்டு இப்போ உலக்கையோடு அலையும் காலம் வந்துவிட்டது.

எனவே என்னை வன்முறையாளன் என்ற கேடையத்தை முன்னால் பிடித்துக்கொண்டு வரவேண்டாம். விசர் நாயை அடிப்பதையெல்லாம் யாரும் வன்முறை என்று சொல்வதில்லை என்றெல்லாம் சொல்ல மாட்டேன். உங்களிடமிருப்பதை விடப் பவர் மிகமிகக் குறைந்த ஆயுதம்தான் என்னிடமிருப்பது. அவ்வளவுதான்.

தவிரவும் 12ஆண்டுகள் வனவாசம்போல் எனக்கும் தேவைப்படுகிறது.
மண்டைக்குள் கிடப்பதை எல்லாம் எழுதிப் பதிந்தாக வேண்டும்.
"எழுதவேண்டிய நிறையச் சங்கதியளச் சொல்லாமலே செத்துப்போகப் போறாய் சனியனே" என்று நண்பர்கள்வேறு ஒருவர்மாறி ஒருவர் திட்டித் தீர்க்கிறார்கள்.

ஆச்சி அன்னம்மாவின் தீர்க்கதரிசனம் இப்படிக்குத்தானே நடந்தேறலாகப் போகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக