வெள்ளி, 4 ஜூலை, 2014

கைவிடப்பட்ட பாடலின் சுவை என்ன?

 -தமயந்தி- (05.06.2014)


கட்டிடப் புயலடித்த நகரங்களைத் தேடி
எல்லா மனிதர்களும்
குடியேறிப் போனதன் பின்னால்
எனக்குத் தெரிந்த அவளொருத்தியும்
தலைமறைவாகியிருந்தாள்.
தனித்து விடப்பட்ட
பனிக்காட்டிடையில்
வளைந்து வளைந்து
சலசலத்தோடும் சிற்றோடையில்
அவளது பாடல்கள் மட்டும்
நீச்சலடித்துக் கொண்டிருந்தன.
அவற்றை ஏந்தியெடுத்து
வருவழியில்
ஒரு கடவுள் வந்து குறுக்கிட்டாள்
வந்த கடவுள் சொன்னாள்
கைவிடப்பட்டவை அனைத்தும்
கடவுளுக்கே சொந்தம் என்று.

நானும்தான் கைவிடப் பட்டவன்
ஆகவே
கைவிடப்பட்டவை தத்தமக்குள்
சொந்தமாகிக் கொள்ளலாமென
நான் சொன்னதை கேட்டு
சிரியோ சிரியெனச் சிரித்தாள் கடவுள்.

கைவிடப்பட்ட பனிக்காட்டில்
கைவிடப்பட்ட பாடல்களை
பார்க்க எடுக்க படிக்க
கைவிடப்பட்ட கடவுள்கள்
பலர் இங்கிருக்கிறோம்
இதையேனும் எங்களிடம் விட்டு
கட்டிடப் புயலடித்த நகரங்களில்
உனக்கான இருப்பு கிடைத்தல் கூடும்
அங்கே போ என்றாள்.

கடவுளுக்குத் தெரியாமல்
சட்டைப் பைக்குள் மறைத்து வந்த
ஒரு பாடலை
வீட்டுக்கு வந்து பார்த்தபோது
பனிக்கட்டியாய் உருகியிருந்தது.
உப்புக் கரித்தது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக