சனி, 5 ஜூலை, 2014

சுடலைக் குருவிகள்

-தமயந்தி. (24.06.2014)



செக்கல் பட்ட நேரம்.
மேற்கில்
செவ்வானம் நிறம் மங்கி
உடலில்
கருமையை அப்பிக்கொண்டிருந்தது
மெல்ல எழுந்து
தெற்கு நோக்கி நடக்கிறேன்
அங்கேதான் எனது துறைமுகம்.
என் பாட்டனும் அப்பனும்
எனக்காக விரித்துவைத்த துறைமுகம்.
அழகான, மிகமிக அழகான கரை அது.

கிழக்குக் கையால்
பிரிந்து கிடக்கும் எனது குடிசை.
தெற்கு நோக்கி நடக்கிறேன்.
சுடலைக் குருவியொன்று
இடப் பக்கக் காதருகால்
குளறிவிட்டுப் பறக்கிறது.

இன்னும் ஒன்று.
மீண்டும் ஒரு சுடலைக்குருவி.
ஒன்றன்பின் ஒன்றாக
சுடலைக்குருவிகளின்
குளறல், ஊளை, ஓலம்.

சுடலைக்குருவிகள் பெருகிவிட்டன.

சுடலைதான் எடுத்தாயிற்றே...?
பின் எப்படி...?

அதனால்தான்
ஊரைச் சுடலையாக்குகிறோம் என்பதாகத்தான்
இந்த
குளறல், ஊளை, ஓலம் எல்லாம்.

தெற்கு நோக்கி நடக்கிறேன்.
கரையிலிருந்து
துவர்ப்பாய் வலித்த தோணி
நகர்கிறது கிழக்கு நோக்கி.

அதிலென் அப்பன்,
பாட்டன், பூட்டன், ஒப்பாட்டான் என
அநேகர் இருந்தனர்.

கரையை விட்டு
அவர்கள் புறப்பட்டு விட்டார்கள்.

இனி
சுடலைக் குருவிகள்
வாய்களை அகலத் திறந்து கத்தும்.

சனங்கள் வெளியேறிப் பின்
சவங்கள் மலிந்த சுடலையின் நெற்றியில்
ஒரு கூலிப்பேய்
தனது எஜமானனின் கொடியை
உச்சத்தில் ஏற்றும்.
எல்லா சுடலைக் குருவிகளும்
எக்காளமிட்டபடி
சாம்பலை அள்ளி
உடலம் முழுவதும் அப்பிக் கொண்டு
குதித்துக் குதித்துக் கூத்தாடும்.

இறுதி நெருப்பை
ஒருபெரும் காற்று சுமந்து வரும்.
அந்த நெருப்பில்
நான் கரை நீளம் எழுதிவைத்த
எனது
அழகிய கவிதைகளும் இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக