செவ்வாய், 22 ஜூலை, 2014

இமைமூட....

மனிதம் (நவம்பர் 1994)


புறாக்களும் கிளிகளும்
பிணங்களில் குந்தியிருந்து
கடித்துக் கடித்து தின்றன


ககனவெளியில்
முயற்கூட்டம் பறந்தபடி
குருதி கொட்டுண்ட நிலத்தை
நோட்டமிட்டன குடித்து மகிழ.

அணில்களெல்லாம்
பிணங்களின் கண்களை
பிடுங்கித் தின்பதற்கு
வளம் பார்த்துத் திரிந்தன

புறாக்களும் கிளிகளும் கிழித்துப்போட்ட
எலும்புத் துண்டுகளை
இழுத்துச் சென்றன
புதர் மறைவுக்கு குயில்கள்

தலைகளை மட்டும் நறுக்கி
வாயில்ப் போட்டுக் குதப்பின குதிரைகள்

ஆடுகளும் மாடுகளும்
தங்களுக்குத் தேவையான பிணங்களை
தங்கள் தங்கள் குகைகளில்
தாராளமாகவே சேகரித்துக் கொண்டன

மரங்களிலும், கம்பங்களிலும்
தொங்கும் உடல்களிலிருந்து
ஒழுகும் ஊனை
நிலத்தில் நின்றபடியே
அண்ணார்ந்து
தொண்டைக்குழியில்
சேர்த்துக் கொண்டன மைனாக்கள்

பூனை நாய் கூடவே
காகங்கள்
எல்லையில் நின்று
சுட்டிக்காட்டின எனக்கு
"அதோ,
அதுவே உனது பூமி" என்று

எனது
முன்னங் கால்களிரண்டாலுமெனது
தலையில் அடித்துக்கொண்டேன்.
என்னிடம் அனுமதி கோராமலே
எனது வால்
கண்ணீரைத் துடைத்துக் கொண்டது.

தமயந்தி (ஜூன் 1993)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக