வியாழன், 3 ஜூலை, 2014

10 கவிதைகள்

-தமயந்தி- (29 09., 2013 )



மிக அழகாக வடிவமைக்கப்பட்டதான 
அவளது புத்தகம். 

 கனவுகளாலான அவளது புத்தகத்தை 
படித்து முடித்தபோது 
வண்ண மலர்களும் வண்ணத்துப் பூச்சிகளும் 
வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்தன. 
வண்ணத்துப் பூச்சிகளின் 
உன்னத சங்கீதங்களில் கரைந்து கலந்தவனாய் 
வானுக்கும் பூமிக்கும் 
ஒரு குரங்கைப்போல் தாவிக் குதித்துவிட்டு 
களைப்பாற 
அவளது குடிசைக்கு வந்தபோது 
அழகாக வடிவமைக்கப்பட்ட  அவளது புத்தகத்தோடு 
அவளும் எரிந்து சாம்பலாய்க் கிடந்தாள். 
----------------------------------  


சப்படாத வானத்தை 
பின் தொடர்ந்துகொண்டேயிருந்தது 
தாய்ப் பறவை. 
பின்னால் மகள்ப் பறவை. 

மேற்றிசைக் கடலடியில் 
மூழ்கிச் செத்துக்கொண்டிருந்த தங்களது 
சூரியனை மீட்டெடுக்கவாக 
இந்தப் பயணம் இருக்கக்கூடும். 

நேற்றும் இப்படித்தான். 
அதுவும் ஒரு தாய்ப்பறவையும் 
மகள்ப்பறவையுமாகத்தான்
செக்கல்வானம் நோக்கி பறந்து சென்றன. 

மேற்கில்
சூரியன் செத்துக்கொண்டிருக்கும் செக்கல் நேரம் 
வேட்டைக்கு உகந்தது
காட்டிலும் கடலிலும். 

பின் வந்த காலங்களில் 
ஊர்களுக்குள்ளும், நகரங்களுக்குள்ளும்.  

கடலில் 
பலநூறு செக்கல் வேட்டைகளை 
நானும் என் அப்பனுமாக ஆடி 
சோறு தின்ற எங்கள் சிறுதோணியும் 
ஒரு செக்கலுக்குள்தான் சிதறடிக்கப்பட்டது. 

எஞ்சியிருக்கும் ஒற்றைத் துடுப்புடனும் 
ஒற்றைக் காலுடனும்
 மூன்று லிட்டர் குடிநீருடனும் 
அதே கரையில் இன்னமும் என் அப்பன். 
  
அவன் சொல்கிறான் 
அதே தாயும் மகளும் 
வசப்படாத அந்த வானத்தை நோக்கி 
மேற்றிசையில் பறப்பதை இன்னமும் 
கை விடவில்லை என்று. 
--------------------------------- 


ல்லா நிறங்களிலும் பொறி,
எல்லா நிறங்களிலும் கூடு, 
எல்லா நிறங்களிலும் வீடு. 
நிறங்களுக்குள் ஒளிந்திருந்தது அது. 

நிறங்களொடு நிறங்களாக 
அள்ளிப் பூசிய அரிதாரமுகம். 

எலிகளாகவும், புலிகளாகவும் 
சிங்கங்களாகவும், சிறுத்தைகளாகவும் 
மழை பட்டுச் சாயம்போகாதபடிக்கு 
குகைகளில் பதுங்கியிருந்தது அது. 

அது ஒன்றுதானோ...? 
இல்லை, 
நிறைய "அது" கள். 
------------------------------------------ 


சூரியன் களவாடப்பட்ட பூமியில் 
ஊர்ந்து திரிந்த பாதி நிலவும், 
நட்சத்திரப் பூச்சிகளும் வேட்டையாடப்பட்டபின்
இருண்மையின் ஆள்கையில் 
சிக்கிக் கிடந்தன பட்டினங்களும் தாணையங்களும். 

கலட்டுத்தரையின் ஓர் ஓரத்தில் 
தோண்டியெடுத்த உவர்ப் புழுதியில் 
வியர்வைகளைக் கொட்டி 
சூரியனின் சாயலிலும், நிலவின் வெப்பத்திலும் 
நட்சத்திரங்களின் வெளிப்புமாக ஓர் 
வட்டத்தைச் செய்து 
வானவெளியில் மிதக்கவிட்ட அடுத்த கணம் 

தூரத்தில் கேட்கிறது 
சைனியங்களின் பேரொலி 
இன்னொரு படையெடுப்பும் முற்றுகையும் 
அபகரிப்பும் நெருங்கி வருவதை 
குதிரையடி எக்காளம் கூவிச் சொல்கிறது.
--------------------------------------------- 


வெற்றி! வெற்றி!! வெற்றி!!! 
வெற்றி, ஒருதரம்! 
வெற்றி, ரெண்டுதரம்!! 
வெற்றி, மூணுதரம்!!! 

ஏலம் முடிந்தது. 
அவர்கள் வெற்றியை வென்றுகொண்டு 
தத்தம் கூட்டாளிகளுடன் 
வீடு போய்ச் சேர்ந்துவிட்டார்கள். 
இன்னமும் 
வெல்லப்பட்ட வெற்றிகளையிட்டு 
வெற்றி களித்துக் கொண்டிருக்கிறார்கள். 

அடுத்த ஏலத்துக்கான கூட்டத்தையும்
காலத்தையும் நோக்கி காத்திருக்க
ஆயத்தமாகி விட்டார்கள் தோற்றுப்போன சனம். 
------------------------------------------- 


ருண்ட காலத்தில் மட்டுமே 
எனது காதலை 
சுவரில் கிறுக்கவும், 
இருளில் பொறிக்கவும் 
மெல்லென வார்த்தைகளின் இடுக்கிலிட்டு 
கொறிக்கவும் முடிகிறது. 

பகல்
பயங்கரமானதாக இருக்கிறது. 
அதனால் 
வெளிச்சம் அபகரித்து வைத்துள்ள பகலில்
காதலோடு என்னால் வாழ முடியாதுள்ளது. 

எங்காவதோர் மலையடிவாரத்தில், 
குகைகளுக்குள் 
சிறு பொந்தினூடாக உட்புகும் சிற்றொளியில்
வாழ்கிறதென் காதல்

எனது காதலைத் தேடுபவர்கள் 
பகலன்றி, இருளில் மட்டுமே தேடிக் கண்டடைவீர். 
---------------------------------------------- 


ல்லாத் தரப்பினரும்
வெற்றிச் சரித்திரத்தை 
வாய் கிழியப் பாடியும், 
முதுகு வலிக்க எழுதியும் 
குதூகலித்துக் கொண்டாடுகிறார்கள். 

யுத்தம் வென்றார்கள், 
ஆட்சி கைப்பற்றினார்கள், 
சுதந்திரம் கொண்டார்கள், 
சிம்மாசனங்களில்
இடம் பிடித்துக் கொண்டார்கள், 
அகலத் திறந்த காணிவெளிகளில் 
அகலக் கால்விரித்து வைத்திருந்து 
பலப்பல விண்ணாணமும் சொல்கிறார்கள் 

அவர்களும் இவர்களுமாக கைப்பற்றிய பூமியின் 
கண்காட்சிச் சாலைகளில் 
சனங்கள் நிறைந்து வழிகிறார்கள் 
மீட்டெடுக்கப்பட்ட ஒருபகுதி எலும்புகளாய். 
------------------------------------------------ 


சிதறுண்ட கனவுகளுக்குள் 
என்னை நானே புதைத்துக்கொண்டேன். 
கனவுகளோடு புதைந்துகிடந்த என்னை 
மீட்டெடுப்பதாகச் சொல்லிக்கொண்டு வந்தவர்கள் 
என்னையும் மீட்கவில்லை, கனவையும் மீட்கவில்லை 
மாறாக 
கனவுளோடு புதைக்கப்பட்டிருந்த நிலத்தை 
முடிந்தவரை சிதைத்துப் போனார்கள்.  

சிதையுண்ட கனவும், 
புதையுண்ட நானும், 
இடியுண்ட நிலமுமாக சேர்ந்து 
எழுதிப் புதைத்த கவிதைகளை 
பின்னால் வந்த இவர்கள் தோண்டியெடுத்து 
மொத்தமாகக் கொழுத்திப் போட்டார்கள். 

இப்போ, 
சிதையுண்ட கனவுமில்லை, 
புதையுண்ட நானுமில்லை, 
இடியுண்ட நிலமுமில்லை, 
கடைசிக் கவிதையின் சாம்பலுமில்லை. 
-------------------------------------------------- 


காகிதங்களால் தோணிகள் சரிக்கட்டி 
வண்டில் ஓடிய பள்ளங்கள் வழியே 
முண்டியடித்தோடும் மழை நீரில் 
ஓடவிட்டு போட்டி வென்ற காலங்கள் 
கைகளுக்கெட்டாத் தொலைவு மட்டுமல்ல, 
நினைவுகளுக்கும் எட்டாத தூரத்தில். 

இப்போ 
நிறங்களாலான கவிதைகளில் 
பெரிய பெரிய கப்பல்கள் செய்து 
அறைக்குள் மட்டுமே நடனமாட விட முடிகிறது.

நடனமிடும் காலநீரோடு கரைந்து செல்கின்றது வாழ்வு. 

மழை நீரில் கரைந்துபோன 
காகிதத் தோணிகள் போலவே 
கவிதைகளாக்கி நடமாட விடப்பட்ட காதலும் 
காற்றுவெளியில் கரைந்து போய்விடுகின்றது. 

அவை காற்றிடை கரைவதற்குமுன் 
முடிந்தவரை நாமும் ஆடி முடிப்பதே உத்தமம். 
-------------------------------------------------- 


ருகால் நூற்றாண்டின் முன் 
அம்மா ஒரு நாள் பகல் பொழுதில் 
துவண்டு கிடந்தாள். 
அவளது காதலோ
முற்றத்தில் 
புகைவளையங்களை காற்றில் சுருட்டிவிட்டு 
சிட்டுக்குருவிகளின் ஒலிகளை ரசித்தபடி 
ஆண்மையோடு உலா வந்தது. 

இன்று 
எனது முற்றத்தில் 
புகைவளையங்களை காற்றில் சுருட்டிவிட்டு 
சிட்டுக்குருவிகளின் ஒலிகளை ரசித்தபடி 
ஆண்மையோடு உலா வந்துகொண்டிருந்தேன். 

எனது காதலோ 
துவண்டு கிடந்தது அறைக்குள்.  

சிட்டுக்குருவிகள் 
எனது முகத்தில் 
எச்சங்களை எறிந்துவிட்டுப் பறந்தன.
----------------------- 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக