சனி, 5 ஜூலை, 2014

பரிசுத்த ஆவி பசியோடு தப்பிப்போன வழி

-தமயந்தி- (நன்றி: குவர்னிகா-2013) 



வானத்தின் ஏழாவது அடுக்கின்மேலே
அவள் உதறிக் காயப்போட்ட கவிதைக்கும்
பூமியின்
ஏழாவது அடுக்கின் கீழே வெகு நாட்களுக்குமுன்
நான் புதைத்துவைத்திருந்த கவிதைக்கும்
அந்தரப் பரப்பில்
புணர்ச்சி நடந்துமுடிந்த ஏழாவது நிமிடத்தில்
வானத்தினுச்சியிலிருந்து ஒலித்த
அசரீரியின் குரலின் மீதேறி
பசியோடு இறங்கி வந்த புறாவானவர்
நீரின்மீது மடமடவென நடந்தார்
ஒரு சுடுகாரல்கூடக் கிடைக்கவில்லை
ஈரத்தெரு முழுவதுமாக நடந்துபார்த்தார்
ஒருசிறு ரொட்டித்துண்டுதானுங் கிடைக்கவில்லை


 ஏழாயிரம் வருடங்களுக்கு முன்னதான
ஏட்டுச்சுவடிகளைத் தூசிதட்டிப்பார்த்த
தீர்க்கதரிசிகளும், ஆரூடர்களும்
அணியணியாய்த் திரண்டு வந்து
கைது செய்து புறாவானவரை
அடைத்துப்போட்டனர் ஆலயத்துள்.
மனுமகள் வருகையை அறிவிக்க
வானத்திலிருந்து இறங்கிவந்த
பரிசுத்த ஆவி இவரே என்றனர்.

 அந்தரப்பரப்பில்
கவிதைகளுக்குப் பிறந்தவள் தன் தலைக்கடகத்தில்
அவரவற்கேயான அனுதின அப்பங்களுடன்
ஆலயத்தினண்டை வந்தபோது
தனது பசி தீரும் நேரம் வந்துவிட்டதாக
நம்பிக்கொண்டார் புறாவானவர்.

பரிசுத்தஆவி அறிவிக்கவந்த மனுமகள் இவளே என்றனர்.
கைது செய்தனர்.
ஆலயதின் இன்னொரு மூலையில் அடைத்துப்போட்டனர்.
அவள் பிடிபட்ட ஏழாவது நிமிடத்தில்
சன்னலூடாக உள்ளேவந்த வெளிச்சத்தின் மீதேறி
பறந்து தப்பித்துக்கொண்டார் பசிமறந்து புறாவானவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக