சனி, 5 ஜூலை, 2014

சூரியனைத் தின்றவர்கள்

-தமயந்தி- (1988)




சூரியனைப் பிய்த்து
தம் சீடர்களுக்கு அதை அளித்து
அவர் கூறியதாவது:
அனைவரும்
இதனை வாங்கித் தின்னுங்கள்
இது
உங்களுக்காக கையளிக்கப்படும்
என் அதிகாரங்கள்
இதனை உட்கொள்ளும் நிமித்தம்,
ஒளியின் மீதான ஆட்சியையும்
இருளின் மீதான ஆதிக்கத்தையும்
நீங்கள் அடைகிறீர்கள்

எனது ராஜ்ய பரிபாலனத்தின்
திறவு கோல்களை
உங்கள்
இடுப்பிலும் தோழிலுமாக
சுமத்துகிறேன்.

அவர்கள் எலும்புக் கூடுகளின் மேல்
உங்கள் இருப்பும்
உங்கள் அனைவரின்
எலும்புக் கூடுகளின் மேல்
எனது இருப்பும்
எனதேயான சித்தம்

ஒன்றைமட்டும்
நானுங்களுக்குச் சொல்லுகிறேன்
ஆயுதங்களின் மீதான
நம்பிக்கையையும்
அராஜகங்களின் மீதான விசுவாசத்தையும்
வலுப் படுத்துங்கள்

ஏனெனில்
தண்டிக்கும் அதிகாரம் மட்டுமேயன்றி
மன்னிக்கும் அதிகாரம்
உங்களுக்கு வழங்கப்படவில்லை

எவனொருவனை நீங்கள்
மரணத்திற்கு தீர்வையிடுகிறீர்களோ
அவனது மரணம்
எனது நித்திய அரசின் ஓர்
செங்கல்லுக்குச் சமானமாகும்

நீங்கள் ஒவ்வொருவரும்
சுடு குழலின் மீது
பிரமாணிக்கமாயிருங்கள்

உங்கள்
தூக்கத்தின் துணையாக
துப்பாக்கிகளே
என்றென்றும் இருக்கக் கடவதாக!
துப்பாக்கியை இழக்கும்
எவனொருவனும்
எனது
மந்தைகளை மேய்க்கத்
திராணியற்றவனாவான்

இயற்கை மரணம்
உங்களை அணுகாதபடிக்கு
செய்ய வேண்டியது
எனது
பேரரசின் கடமை என்பதை மறவாதீர்

பூமி எங்கும்
வானத்து மீன்களைப் போலவும்,
கடற்கரை மணலைப் போலவும்
மானுடத்தின் பிணங்களை
பல்கிப் பெருகச் செய்யுங்கள்

எனது அரசின் வரலாறு
மனிதக் குருதியால்
எழுதப்படும் என்ற
தீர்க்கதரிசிகளின் வாக்கு
நிறைவேறக் கடவதாக.

(சரிநிகர் 1990)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக