சனி, 19 ஜூலை, 2014

உரத்த இரவுகள் (1985-86)

(15.11.86இல் வெளிவந்த தொகுப்பு- சில கவிதைகள்
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியன்று வெளியிடப் பட்டது

முகப்போவியம்: நிலாந்தன் 


பிலாத்துக்களே! 

சிலுவைகள் இல்லாமலேயே
மரணித்துப்போன
இந்த
யேசுநாதர்களுக்கு
தண்டனை விதித்த
பிலாத்துக்களே!


நீங்கள் கழுவிய
உங்கள்
கைகளைத் துடைத்த
துணிகளை
பத்திரப்படுத்தி
வைக்க வேண்டாம்

புதைகுழிகளில்
அமிழ்ந்திப்போன
புதிய யேசுநாதர்களுடன்
அதனையும்
புதைத்து விடுங்கள்

நிச்சயம்
அடுத்த சந்ததியின் மேலும்
இந்தக் கறைகள்
படிய வேண்டாம்.

அவர்கள்
உண்மையின் பக்கம்
நிற்கட்டும்
உண்மைகளுக்காகப் போராடட்டும்.

அவர்களையும்
பிலாத்துக்களாக்கும் இந்த
வஸ்த்திரங்களை
பத்திரப்படுத்தி வைக்காதீர்
அவர்கள் உண்மைக்காகப் போராடட்டும்.
-------------------------------------------------------------

உரக்கச் சொல்லோம் 

ஒரு
சோக இசை
சில தெருக்களில்
தூங்கி வழியும்
கறுப்புக் கொடிகள்
சுவரில்
பூசிய பசைகள்
சரியாகப் பிடிக்க மறுத்ததால்
மூலைகள் கிளம்பிப் பறக்கும்
அஞ்சலித் துண்டுகள்

சில
வாழை மரங்கள்
சில மரியாதை வேட்டுக்கள்

நாங்கள் அறிந்துகொண்டோம்
அவன்
வீர மரணமடைந்து விட்டான்
கண்ணீர் அஞ்சலியுட
புதைக்கப் பட்டுவிட்டான்
நாங்கள் அறிந்து கொண்டோம்.

ஆனால்
அஞ்சலிகள் மறுக்கப்பட்ட
இந்தப் புதைகுழிகள்
இங்கே
அழுது வடிகின்றன

நண்பனே!
இது இரகசியம்
இவை
திரைக்குப் பின்னால் நிகழ்ந்தவை

உரக்கச் சொல்லாதே
உலகறிந்த உண்மையானாலும்
திரைக்குப் பின்னால் நிகழ்த்தப் பட்டவை

இவற்றை பேசும் சுதந்திரம்
மறுக்கப் பட்டுள்ளது
உரக்கச் சொல்லாதே

துரோகி நாமத்துடன்
துப்பாக்கிக் குண்டுகளும்
பரிசளிக்கப்படும்

இவைதான் இப்போ
நவீன பரிசுப் பொருட்கள்

இப்போ
நடப்பவை எல்லாம்
நமது
தலைவிதியை
துப்பாக்கிக்குழல்கள் தீர்மானிப்பதே.

நனைக்கப்படாத வலைகள்.

உரத்த சோளகத்துடன்
ஒதுங்கிய சாதாழை
மெல்லிய
வாடைக்காற்றைக் கண்டு
எங்கோ மூட்டை முடிச்சுகளுடன்
அணிவகுத்து
கூட்டம் கூட்டமாய்
குடி பெயர்கின்றன

இனந்தெரியாத
பறவைகள்
எங்கள்
கடற்கரையோரங்களில்
கூட்டம் கூட்டமாய்
குந்திய வண்ணம்

அவை
வெளிநாட்டுப் பறவைகளாம்
கிராமத்தவர் பேசிக் கொள்கிறார்கள்

எங்கள் கடலில்
ஒருபோதும் இல்லாத மீன்கள்
தொகை தொகையாய்
அலை எழுப்புகிறதாம்.

ஆனாலும் ஏனோ
இன்னமும்
எங்கள் வீட்டு
கயிற்றுக்கொடியில்
பொத்திக் கட்டிய வலைகள்
தொங்கப் போட்டபடி.

எங்கள்
தந்தையின் தலையும்
தூரத்தே எழும்
மெல்லிய அலையை வெறித்துப் பார்த்தபடி.
---------------------------------------------------------------------

சங்கார இரவு 

செத்துக்கொண்டிருந்த
பாதி நிலவை
கறுத்த வானத்து
நட்சத்திரங்கள்
அழுது வடிந்து
பார்த்தவண்ணம்
சிதறிக் கிடந்தன.

அந்த
நட்சத்திரங்களை
சாட்சி வைத்தே
கறுப்பு இருட்டில்
இந்த
சங்காரமும் நிகழ்ந்தது

இத்துப்போன
பனைமட்டை
வேலியையும் பிய்த்துக்கொண்டு
நிறைந்த வயிறோடு
நாட்களை
எண்ணிக்கொண்டிருந்த
தாய்மையும் சிதைந்தது.

கனரகக் குண்டில்
சிதறிய மண்டை
கட்டியவன் மடியில்
குருதி ஊற்றில்....

எங்கோ ஓர்
பறுகுப் பரப்பின்
ஈச்சம் பற்றைக்குள்
ஆட்காட்டி ஒன்றின்
அலறல்....

வழமைபோல்
அந்த இரவும்
ஏதோ ஓர் பட்டியலில்.
---------------------------------------------------

அன்னையிடமிருந்து 

ஊர்க்கோடி
கிழட்டு ஆலமரத்தின்
இலைகளெல்லாம்
பழுத்து விட்டன

மெல்லிய
காற்று ஒன்றின்
தடவலுக்காக
அவை
இன்னமும்
நிலத்தில் விழாமல்
காத்துக் கிடக்கின்றன

மகனே!
போன வாரம்
நமது கிராமத்திற்குள்
ஆமியாம்...
சோதனையாம்...
என ஓர் வதந்தி

உனது
கடதாசிப் பெட்டியை
உரப்பையில் கட்டி
கிணற்றடி
முருங்கைக்குக் கீழே
புதைத்து விட்டோம்.

உனது
காற்சட்டை சேர்ட்டை
தலையணைக்குள் வைத்து
வாயைத்
தைத்துவிட்டாள்
உன் தங்கை.

மகனே!
நமது கிராமத்து
கோயில்மணி
இந்த
சில மாதத்திற்குள்
பல தடவை
மங்கல ஒலி
எழுப்பியுள்ளது

என் மகனே!
நான்
எப்போதும் பிரார்த்திப்பது
உனக்கும்
உன் தோழர்களுக்கும்
இந்த மணி
அமங்கலமாய்
அழக்கூடாது என்றே.

இந்த வாரம்
உனது தோழன் சூரியன்
சிறையிலிருந்து
விடுதலையாகி வீட்டுக்கு வந்திருந்தான்.
நன்றாக
மெலிந்துவிட்டான்.

தெருப் பிச்சைக்காரரும்
பாம்பாட்டிகளும்
உட்பட
பலர்
தன்னோடு
வதை கூடத்தில்
சிறை வைக்கப்பட்டிருந்தார்களாம்.

சில மாதங்களின் பின்
தன்னோடு
சிலரை மட்டும்
விடுதலை செய்தார்களாம்.

தெருப் பிச்சைக்காரரும்
பாம்பாட்டிகளும்
சிறையில்தானாம்.

உன்
தோழனின் உடலில்
இன்னமும்
ஆறாத அடிகாயங்கள்.
இப்பொழுது
மருந்து செய்துகொண்டிருக்கிறான்.

மகனே!
உனது
புகைப்படத்தை
முகாமில் பார்த்தானாம்
உன் தோழன்
சூரியன் சொன்னான்.

கறுப்பு அல்பத்தில்
பல படங்களுடன்
பத்திரமாக
வைத்துள்ளார்களாம்.
..........................................................

எல்லோருக்குமே தெரியும் 

எங்கள் தெருக்களில்
ஆயிரம் தடவைகள்
ஆமி றக்குகள்
வந்து போய்விட்டன

எங்கள் கோடிகளில்
ஆயிரம் தடவைகள்
இரும்புச் சப்பாத்துக்கள்
தடம் பதித்து விட்டன.

எங்கள் இதயங்கள்
ஆயிரமாயிரம் தடவைகள்
பயந்து பயந்து
நசிந்து போயின.

ஆயினும்
எங்கள் தெருக்களில்
காணாமல் போனவர்களை
நாங்கள்
தேடவேயில்லை.

ஏனெனில்,
அவர்கள்
என்ன ஆனாரென்று
எல்லோருக்குமே தெரியும்.

அதனால்.....
எங்கள்
தெருக்களில்
ஆயிரம் தடவைகள்
.........................................
.........................................


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக