வியாழன், 3 ஜூலை, 2014

புளியநிழல்

 -தமயந்தி- 22. 08. 2013



மண்புழுக்கள் உறிஞ்சிக் குடித்ததுபோக 
மண்டி வடித்த மீதிக் கலங்கல் நீரால் 
நிறைந்திருந்தது அவளது இடையின் மண்குடம். 

ஒவ்வோர் அடிக்குமான இடையசைவில்
தளம்பிச்சிந்தும் நீர்த்திவலையோடு
துண்டந்துண்டமாய்க் கொட்டுண்ணும் கவிதைப் பருக்கைகளை
சவ ஊர்வலத்துக்குப் பின்னால் பொரி தின்னும் பேயைப்போல
பொறுக்கி வாயில் போட்டுக்கொண்டு பின்தொடர்ந்தது காற்று

ஊர்க் கட்டுப்பாட்டை மீறியதாக
காற்றைச்சிறைப்பிடித்து புளியமரத்தில் கட்டி வைத்து
ஊரார் விசாரிக்கையில் சொன்னது அது
தானொரு கவிதை விரும்பியென்று

கவிதையைப்பற்றி கண்டுகேட்டறியாத சனம்
எப்படியிருக்கும் கவிதை சொல்லென விசாரிக்கையில்
நிலத்தடி நீருண்ட மண்புழு போலவும் இருக்கும் கவிதை,
அவள் மொண்ட மீதி நீர் போலவும் இருக்கும் அது,
மண்குடம்போலவும் இருக்கும் கவிதை,
மண்குடம் சுமந்துபோனவளைப் போலவும் இருக்கும் அது
என்றது புளியில் கட்டுண்டுகிடந்த காற்று.

சூரிய உதயத்துக்கு முன்னால்
அதே புளியில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது
ஒரு கவிதைவிரும்பிக்கு.

உதயத்தின்போது புளியமரத்தின் நிழல்
நிலத்திலல்லாது
வானத்திலும் கடலிலும் பதிந்திருந்தது 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக