வியாழன், 3 ஜூலை, 2014

மீள வேண்டும்! (1988)

 -தமயந்தி-


இரையும் கடலின் அலையும் கரையும்
கரையில் ஈரக் கரும்பாறைகளும்
பாறை காக்கும் ஒற்றைக் கொக்கும்
கொக்கின் பிடியில் தப்பும் மீனும்
மீன்கள் நிரப்பி அசையும் படகும்
படகில் கேட்கும் அம்பாக் குரலும்
குரலும் வானை உரசும் கூத்தும்
கூத்து முடிந்த கொட்டகைத் தரையும்

கொட்டகைத் தரையில் உதிர்ந்த மணியும்
மணிகள் தேடும் சிறுவர் படையும்
படையாய்த் திரளும் முள்ளிக் கொடியும்
கொடியில் உலரும் சிறகு வலையும்

வலையிற் சரியும் சுங்கன் கிளையும்
கிளைமுள் சிலிர்த்த கிழாச்சி மரமும்
கிழாச்சி மரமும் கண்ணாத்தீவும்
தீவுகள் ஏழு சூழ்ந்த என் கரையும்

கரையில் ஓலைக் குடிசை நிரையும்
நிரையாய் சடைத்த ஈச்சை மரமும்
ஈச்சை மரத்தில் பழுத்த குலையும்
குலைகள் தொங்கும் தென்னங்காடும்

காட்டில் மணக்கும் நொச்சிப் பூவும்
பூக்கள் சிரிக்கும் முசுட்டைக் கொடியும்
கொடிகள் படர்ந்த கள்ளி மரமும்
மரங்கள் நட்ட பாட்டன் நினைவும்

பாட்டன் நினைவாய்ப் பருத்த புளியும்
பருத்த புளியின் பரம்பரைக் கதையும்
கதைகள் சொன்ன ஆச்சி முகமும்
முகத்தில் உப்பு படிந்த சனமும்

சனங்கள் வளர்த்த நெய்தல் கலையும்
கலைகள் திரிந்த நரையான் தீவும்
நரையான் தீவின் வீழி ஒதுக்கும்
வீழி ஒதுக்கின் வெள்ளை மணலும்

மணலை அரிக்கும் கிழக்குக் கடலும்
கிழக்குக் கடலில் உதிக்கும் பொழுதும்
பொழுது புதையும் மேற்குப் பனையும்
பனையின் தலையில் நுங்குக் குலையும்

குலைகள் இறக்கும் இருட்டுக் கதையும்
இன்னும்.......இன்னும் என்னைப் பிரிந்த

எனது தேச வனப்பும் வனப்பின்
எழிலும் சிறப்பும் காதல் கொண்ட
கடலும் கரையும் எல்லாம் எனக்கு
மீள வேண்டும் மீள வேண்டும்.

பார்க்க ரசிக்க பேச எழுத
சுதந்திர மனுவாய் இவற்றைச் செய்ய
மீண்டும் எனக்கு வேண்டும் இவைகள்

யாரிடம் சென்று விண்ணப்பம் செய்வேன்?
பனிமலைச் சுவரில் பட்டியல் எழுதி
பனிமுகிலிடமா முறையிட்டழுவேன்.

-தமயந்தி- (1988) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக