புதன், 16 ஜூலை, 2014

ஆயிரங்கால்

-தமயந்தி- (13.07.2014)



பச்சைத் தண்ணீர் பற்றிய எனது கவிதையை
எல்லா இதழ்களும் நிராகரித்திருந்தன
ஒரு வாழாவெட்டியனைப்போல் பலகாலமாக
கவிதை
வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தது.
என்னை பார்க்க வந்தவர்கள்
கவிதையைப் பார்த்துவிட்டுச் சொன்னதென்னவெனில்
நல்ல சட்டை போட்டனுப்பவில்லை நான் என்று.


ஒருநாள்
காலாற நடக்கவென வெளியே சென்ற கவிதை
நெடுவழிப் பயணத்திலிருந்த சூரியனை '
கூடவே அழைத்து வந்தது வீட்டுக்கு.

சூரியனுக்கும் தனக்கும் சரியான பசி என்றது.
தட்டில் உணவைப் பரிமாறுவதற்குள்
அடுக்களைக்குள் புகுந்த சூரியன்
சுளகிலிருந்த மிளகாயை அள்ளி
வாயில் போட்டு
மாடு குதப்புவதுபோல் குதப்பியது.

கொஞ்ச நேரத்தில்
எல்லாம் எரியுது, எல்லாம் எரியுது என
வீடுபூராவும் ஓடித் திரிந்தது.
இரு கைகளாலும் தண்ணீரையள்ளிக் குடித்தது.
காரம் அடங்கவில்லை.

எதிர்பாராக் கணத்தில்
எனது
பச்சைத்தண்ணீர் பற்றிய கவிதையை
அப்படியே எடுத்துக் குடித்து விட்டது.
எரிச்சல் அடங்கிய சூரியனுக்கு
ஆயிரம் கால்கள் முளைத்தன.

எல்லா இதழ்களும்
ஆயிரம் கால் முளைத்த சூரியனைப் பற்றி
மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக