புதன், 16 ஜூலை, 2014

மெளனங்களும் எங்கள் கல்லறைகளும்

-தமயந்தி-  (02-05.1994)

(சபாலிங்கம் நினைவுகளைத் தாங்கி 1994ஜூலையில் சபாலிங்கம் நண்பர்கள் வட்டத்தால் வெளியிடப்பட்ட "ஒரு படுகொலையின் மொழி" தொகுப்பிலிருந்து.) 


ஒரு கணம்
அதிர்ந்து நடுங்கி
நின்றதோரிடத்தே அசையாது
சார்சல்ஸ் நகரத்தின்
சரிந்த வானக்கரையில் சூரியன்.

பெரிய தினமொன்றின்
பகற் பொழுதில் நனைந்ததொரு
ஆசிய மனிதனின் இரத்தத்தால்
சார்சல்ஸ் நகரத்தின் கூரைகள்.

வெடிக்கவும்
மனிதத்தின் கதை
முடிக்கவும் மட்டுமே தெரிந்த
எங்கள் தேசத்து யந்திரங்களிலொன்று
அலைகளையும், மலைகளையும்
கண்டங்களையும் தாண்டி
வெடித்தது
பிரித்தது
மனிதனொருவனை எம்மிடையிருந்து.


காலிழந்த காகமொன்றுகூட
கரைந்து தன் துயர் கொட்டாத
சூனியமான சூழ்நிலைக்குள்
எங்களிடமிருந்தொரு மனிதன்
பறிமுதல் செய்யப் பட்டான்.

செத்துப்போன மனிதர்களின் பட்டியலை,
மனிதர்களின் பட்டியலை
இதுவரையெங்கள்
கண்ணீராலும்,
மெளன அஞ்சலிகளாலும்
அடக்கம் செய்தோம்.

எங்கள் மெளனங்களே
எங்கள் மரணங்களை
பெருக்கமடையச் செய்கின்றது.
எங்கள் மெளனங்களே
எங்கள் மரணங்களை
பெருக்கமடையச் செய்கின்றது.
எங்கள் மெளனங்களே....
.............!

கல்லறைகள்
கோடிப் புறங்களில்

கல்லறைகள் வெட்டுவோம்
எங்கள் மெளனங்களை
போட்டதிற் புதைக்க

எங்கள் மெளனங்களையெல்லாம்
கல்லறையுளிட்டுச் சாத்தியபின்
மனிதத்தின் மரணமும்
அமிழும் கல்லறையுள்

இனியும்
மனிதர்களை நாங்கள் இழக்கோம்.
வெடிக்கும் குருட்டுத் துவக்கென்று
அச்சத்தால்
மெளனித்திருந்ததைக் களையும்போது

இனியும்
மனிதர்களை நாங்கள் இழக்கோம்.

02.05.1994



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக