ஞாயிறு, 20 ஜூலை, 2014

வயல் - மே 1993

(சுவடுகள் இதழ்-53, மார்கழி 93)

போர் முடிந்துவிட்டது.
தேசப் பிரதான சாலைகளின்
ஒவ்வொரு திருப்பத்திலும்
நூதன சாலைகள்.



ஒவ்வொன்றாய்
ஏறி இறங்கிக் களைத்து விட்டேன்
எனது ஒரு காலையும்
உழவுமாடொன்றையும் தேடி.

குத்தகை நிலம்
உழுத்த பரம்பரைக் கலப்பை
இரவல் மாடுகளிரண்டு
இரண்டு கால்களுடன் நான்
பாதி நிலம் உழுதபடி
இரும்புப்பருந்து பீச்சிய
கெந்தக எச்சம்
பறந்துபோனது எனதொரு காலும்
இரவல் வாங்கிய
உழவு மாடொன்றும்

போர்
முடிந்து விட்டது.
இறுதி நூதனசாலையிலிருந்து
புழுதிப் பெருந்தெருக்கள் கடந்து
ஒற்றைக் காலால் வயலை அடைந்தேன்

வயலினோரத்தே வேலியோடு
எருக்கலம் பற்றைக்குள்ளிருந்து
எனது பெயர்
உச்சரிக்கக் கேட்டேன்

நுகத்தடியில் குருதியாய்
செம்மண் பூசி
பரம்பரைக் கலப்பை
அழுது கிடந்தது

என்னை எடு
நிலத்தை உழு
கிடைக்கும் உனதொரு காலும்
இரவல் எருதும்

ஒரு காலின்றி ஒரு கால் ஊன்றி
ஒரு கால் தேடி
பரம்பரைக் கலப்பையால்
நிலத்தை உழுதேன்

விலா எலும்பு, கை எலும்பு
முதுகெலும்பு மூட்டெலும்பு
சிறிது பெரிதாய்
மண்டை ஓடுகள்....
...............

எனது காலையும்
காலொடு தொலைந்த
எருதையும் காணோம்

சேறு துப்பிய கலப்பை சொன்னது
முயற்சியை விடு
புதிதாய் நீயொரு
நூதனசாலை திற
எலும்புத் தடிகளின்
உரிமையாளர் வருவர்
உனது வயிற்றுப்பாடு தீரும்

இப்போ
எனது கிராமத்துச் சந்தியில்
என் மனைவியின் பெயரில்
நூதன சாலையொன்று
புதிதாய் முளைத்தது
பல மண்டையோடுகள்
வரியாய்ச் செலுத்தி

(தமயந்தி- 1993)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக