வெள்ளி, 4 ஜூலை, 2014

திருடப் படுகிறது காற்றுவெளி

 -தமயந்தி- (05.06.2014)


திறந்த விழிகள் திறந்தபடியே கிடக்க
எங்கள் கடலும், கரையுமென
களவாடப் படுகிறது.
கட்டறுத்து விடப்பட்ட தோணியைப்போல்
அலையிடுக்குகளில்
அள்ளுண்டு போகிறது ஒரு
சனக்கூட்டம்.

கஞ்சிக்கில்லாத கரைகளில்
மூச்சையேனும் விடவும்
விட்ட மூச்சை திரும்பப் பெறவும்
அனுமதி மறுக்கப்பட்டதாய்
கொள்ளைப்படையால்
திருடப் படுகிறது காற்றுவெளி.

கண்களை இறுக மூடிக்கொண்டு
பாவனை செய்தாக வேண்டுமென
சொல்லிவிட்டுச் செத்துப்போன
கவிஞன் ஒருவனைப்போல்
பாவனைகள் செய்யமுடியாதினி
ஏற்கனவே
பாதி உடலும் பாதி உயிருமாக
கடலுக்கடியில்
சமாதியாக்கப் பட்ட சனம்
முழுவதுமாக புதைக்கப் படுவதற்குமுன்
விழித்தாக வேண்டும்.
இல்லையெனின்
கடலுக்கடியில் சமாதிகளும்,
சமாதிகளுக்கடியில்
எங்களுக்கான இடங்களுமென
நிரந்தரமாக
தீர்மனிக்கப்  பட்டுவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக