சனி, 5 ஜூலை, 2014

பூச்சிக்குப் பயந்த கவிஞன்

 -தமயந்தி- (26.12.2013)



உப்புக்காற்றின் தழுவலில் கண்ணா மரக்கிளையில் இரவிரவாய் தூங்கி, வெள்ளாப்பில் விழித்த கவிதை சிறகெடுத்துப் பறந்தது. அதன் சிறகிடுக்கில் தூங்கி வழிந்துகொண்டிருந்த கவிஞர்கள் ஐந்து பத்தாய்க் கொண்டுண்டனர். குய்யோ முறையோவென தரையில் விழுந்த கவிஞர்கள் குளறிய சத்தத்தில் கரை நீளம் தூங்கிக்கொண்டிருந்த நூற்றுக் கணக்கான கவிதைகளும் எழுந்து பறக்கத் துவங்கின. அவற்றின் சிறகிடுக்குகளிலிருந்து இன்னும் ஆயிரக் கணக்கான கவிஞர்கள் கொட்டுண்டு கரை நீளம் சிந்திச் சிதறிக் கிடந்தனர். 




ஒரு குத்துமதிப்பாய் சூரியன் ஒன்றரைப்பனை உயரத்தில் எழுந்திருப்பான், கரையோரப் பாறைகளை முத்தமிட்டு எச்சில் பரிமாறிக்கொண்டிருந்த அலைகளின்மீது மின்மினிகளாய் விளையாடிக்கொண்டிருந்த சூரியப் பூச்சிகள் குளறல் சத்தம் கேட்டு கரையேறிப் பார்த்தன. கரை நீளம் கவிஞர்கள் விதைக்கப் பட்டுக் கிடந்தனர். (ஒன்றை இங்கே உன்னிப்பாக உணர்க அவர்கள் புதைக்கப் பட்டில்லை, விதைக்கப் பட்டுக் கிடந்தனர் சரியோ) 

ஒவ்வொரு சூரியப் பூச்சியும் தலைக்கு ஐந்து, ஆறு கடகங்களென நிறைத்துவிட்டன கவிஞர்களால். கரையோரப் பாறையிடுக்கொன்றில் முனகல் சத்தம் கேட்டு மெல்ல எட்டிப் பார்த்தது சூரியப் பூச்சியொன்று. "பூச்சி, பூச்சி, பூச்சி" என உளறியபடிக்கு கண்களை இறுக மூடி நடுங்கிக் கிடந்தாரொரு பெருங்கவிஞர். பாறையிடுக்கில் கையை விட்டுப் பார்த்தது சூரியப்பூச்சி. அதன் நக நுனியில்கூட எட்டுப்படவில்லை அந்தப் பெருங்கவிஞர். அவர் கண்களை இறுக மூடியபடி உளறிக்கொண்டே கிடந்தார். அக்கம் பக்கம் தேடியது சூரியப் பூச்சி. 

கொஞ்ச நாளைக்குமுன்பு உரத்து வீசிய காற்றில் பல்லவதீவில் முறிந்த சடக்கங்கிளையொன்று பிரண்டையாற்றைக் கடந்து சற்று முன்புதான் கரையேறிக் கிடக்கக் கண்டது அது. பாறையிடுக்கில் சிக்கிக் கிடந்த அந்தப் பெருங்கவிஞனை சடக்கங் குச்சியால் தட்டி வெளியே எடுத்தது சூரியப்பூச்சி. வாயுளறல் ஓயவில்லை, நடுக்கமும் நின்ற பாடாயில்லை. 

"உளறாதே, நிறுத்து!" அதட்டியது கவிஞரை. அப்போதுதான் அச்சத்தால் மூடப்பட்ட விழிகளை மெல்லத் திறந்து பார்த்தார். "உளறவில்லை, கவிதை சொன்னேன் விளங்காதுனக்கு" என்றார் கவிஞர் தாடையில் அப்பியிருந்த குருகுமணலை புறங்கையால் தட்டியபடி. சுற்றுமுற்றும் நோட்டமிட்ட கவிஞர் உணர்ந்து கொண்டார் சூரியப் பூச்சிகளால் தனக்கொன்றும் தேகக்கெடுதல் நேராதென்பதை. உசார் மருந்துண்டவர்போல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டார். "ஏய் பூச்சியே! யாரென்று நினைத்தாய் என்னை? என்னால் படைக்கப்பட்ட கவிகளின் கைங்கரியம் அறிவாயா நீ...? எனது கவிதைகளைக் கண்ட ஆயிரமாயிரம் பெடி பெட்டைகள் ஆவேசங் கொண்டு சமர்க்களம் போனார்கள் தெரியுமா உனக்கு...? 

"அவர்கள் போனதிருக்கட்டும், நீ போனாயா?" என்று கேட்க நினைத்த சூரியப்பூச்சி கேட்கவேயில்லை. சிரித்தது. "இது மெத்தப் பெரிதான செயலென்று புழுகாதே, கொம்பேறி மூக்கா டேய்பெருச்சாளி வயிறோனே என் பேரைக் கேட்டாலே கொங்கணா மலை சென்று நாலாயிரம் பேரை நரகிற் கிழுத்திட்டேன்" என்ற அண்ணாவி அந்தோனியின் பாடல்தான் நினைவுக்கு வந்தது. 

லூசிஃப்பெர் என்ற பேயரசனின் தளபதியான கொம்பேறிக்கும் மந்திரியான காடேறிக்குமிடையில் இந்தத் தர்க்கப் பாடல். 

ஒரே முசுப்பாத்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக