புதன், 16 ஜூலை, 2014

ஏகலைவன் கூத்து


அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸ் எண்ணங்களிலிருந்து....  


நாட்டுப்புறக் கலைகளில் சமூகத்தின் மரபுகள், மதச்சடங்குகள், கலாச்சார வழக்குகள் பின்னிப் பிணைந்து வாழ்வியலின் நெறிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளமையினால், நாட்டார் பாடல்கள், நாட்டுக்கூத்துக்கள், வடபாங்கு, தென்பாங்கு எனும் வடிவத்துடன் மக்கள் பாடலாகவும், அந்தத்தப் பகுதி மண்ணுடன் வளர்ந்து வளம் பெற்றவையாகவும் உயிர்ப்புடன் விளங்குகின்றன.




கல்லாத பாமர மக்களின் பாடலாக ஒருகாலத்தில் புறக்கணிக்கப் பட்டு, காலப்போக்கில் கற்றோரும் மேதாவிகளும் இதன் சிறப்புக்களையும், பெருமைகளையும் உணர்ந்து, தமிழரின் கலைவடிவமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

தீவகத்தின் மெலிஞ்சிமுனை மண்ணில் மரபு சார்ந்த இக்கூத்துக் கலையை 1928ம் ஆண்டு கலைக்குரிசில் நீ.வ.அந்தோனி அண்ணாவி அவர்கள் தமது ஆளுமையில் விதைப்பாக,   சிதறியிருந்த கலைஞர்களை அணிதிரட்டி ஒருங்கிணைத்து முடுக்கி வைத்தார். அவரின் வழியே இன்றுவரை நாடக ஆற்றுகை தொடராக வளர்க்கப்பட்டு வருகின்றது. அதன் ஸ்தான நிலையிலிருந்து உருவாக்கம் பெற்று கிளை கொம்புகளாக தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் கூத்தரங்க நிகழ்வுகளிலும், எழுத்துருவாக்கத்திலும் பல இளம் கலைஞர்கள் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக, நோர்வே, பிரான்ஸ், கனடா நாடுகளில் கூத்துக்கள் மேடையேற்றம் பெற்றுவருவது மகிழ்ச்சிக்குரிய விடையமாகும்.

கூத்துக்கலை படித்த மக்களால் ஆடப்படவில்லை. பாமர மக்களின் பாரிய முயற்சியினாலேயே மக்கள் மயப் படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. சமகாலத்தில் கல்விமான்களும் மரபு சார்ந்த எமது கூத்துக்களை அச்சேற்றுவதிலும், அரங்காற்றுவதிலும் முனைப்புக் கொண்டிருக்கின்றமை கவனிக்கத் தக்கதாகும்.

 ஓர் நாடகம் ஏட்டு வடிவம் பெறும்பொழுது அப்படைப்பு செம்மையாகின்றது. இந்த வகையில் நோர்வேயில் வாழும் எம் மண்ணின் கவிஞனான தமயந்தி (விமலறாஜன்) அவர்கள் கவிதை, கட்டுரையாகத் தன் படி நிலையை ஆரம்பித்து கூத்துக் கலைஞனாகவும், நாடக ஆசிரியனாகவும் விளங்குவதைக் காண முடிகின்றது.

சைமன் என்ற வித்தகக் கலைஞனின் வாரிசாக, செம்மையுடன் ஏகலைவன் எனும் இளையோருக்கான கூத்து அரங்காற்றுப் பிரதியைப் படைத்து மேடையேற்றி வெற்றியும் கண்டுள்ளார். இப்படைப்பில் வரும் அர்ச்சுனன் வரவு தருவாக,
”குந்திதேவி மைந்தன் விஜயன் 
வந்தனங்கள் தந்தேன்- வலம்புரிச் 
சங்கினங்களொலி எங்குமே புகல 
விந்தை சேர் புகளின் பாண்டவன் நானே! 

அடவியாளும் சிம்மம்- எந்தன் 
ஆண்மை கண்டு அஞ்சும்- அகிலம் 
ஆளும் மன்னர்களும் வீரனென் பெயரை 
அறிகில் அடங்கியவர் அடி பணிவாரே” 
எனும் பாடல் வரிகளை பதமாக எடுப்பதாயின் வீரத்தின் தன்மைகளை வலம்புரிச் சங்கின் ஒலியூடாக சொல்வளமிக்க அடி நாத உத்திகளுடன் விளக்குகின்றார். இவரின் இம்முயற்சியைப் பாராட்டுவதுடன், மேலும் இப்பணிகள் தொடர வாழ்த்துகிறேன்.

ச.மிக்கேல்தாஸ் அண்ணாவியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக