சனி, 5 ஜூலை, 2014

என் காதலி

-தமயந்தி- (2006)



1.
அவன் புதைந்து கிடந்தான்.
புதிதாய் முளைத்த பச்சைச் சமாதி ஒன்றின் வடிவமாய்
கடதாசிப் பட்டாளம் அவனை மூடிக்கிடந்தது.
அவனதற்குள் புதைந்து கிடந்தான்.


சாம்பரைப் பற்றியும், இரத்தத்தைப்பற்றியும்,
கந்தகப்புகைக் கூட்டத்தைப் பற்றியும்,
துவக்குகளைப் பற்றியும், புக்காரா, சுப்பர்சொனிக்,
மிராஜ், யுரோ பைற்ரர், கிபீர்கள் பற்றியும்,
சாவுகளைப் பற்றியும்,
புழுதி மண்டிப்போன உளவு நிலங்களைப் பற்றியும்,
வயிறுகள் கிழிந்துபோன பனைகள் பற்றியும்,
பிடிப்பாரற்று தானாகவே
கொழுத்துச் சாகும் மீன்கள் சுமந்த கடலைப் பற்றியும்,
தூக்க முடியாமல் தூக்கிச்சுமக்கும்
துப்பாக்கியின் பாதியளவேயான
சிறுசுகளைப் பற்றியும்,
இவரா அவரா எவரோ என்று பேதமற்று
தத்தம் பங்கிற்குக் குதறப்பட்ட
பெண்ணுறுப்புக்கள் பற்றியும்,
உடைந்து நொறுங்கிப்போன கிரகங்கள் பற்றியும்....
இப்படி ஒப்பாரிகளை மட்டுமே சொல்லக்கூடிய
பலவற்றைத் தாங்கிய கடதாசிப் பட்டாளத்துள்
அவன் புதைந்து கிடந்தான்.

எல்லாவற்றையும் விலத்தி அவனால் எழ முடியவில்லை.
எழுவதற்கு அவன்
முயற்சி செய்ததாகவும் தெரியவில்லை.
அவன் புதைந்து கிடந்தான்.

கடதாசிப் பட்டாளம் அவனை
மூடிக் கிடந்தது சமாதி வடிவமாய்.
நீர்ப்பாம்புகள் ஊர்வதுபோல்
கடதாசிப் பட்டாளத்தின்
நீக்கல்களிடையே தலைகளை நுழைத்து
ஊர்ந்து சென்றன கனவுகள் அவனைத்தேடி.

விநோதமான மனிதரைப்போல்,
மோசமான மிருகங்களைப்போல்,
பறவைகளைப்போல் பல வடிவங்களில்
சாம்பர்க் கோர்வைக் கனவுகள்
அவனது நாசித் துவாரங்களுக்குள் புகுந்தன.

சிறகுகள் முளைத்து,
குழாய் முனைகளில்
கோட்டானின் அலகுகளைப் போலவும்,
சில கழுகுகளின் அலகுகளைப் போலவும்,
இன்னும்சில முதலைகளின் வாயைப் போலவும்
வைத்துக்கொண்ட துவக்குக் கனவுகள்
அவனது காதுகளுக்குள் புகுந்தன.

அசிங்கத்தைக் கொத்திக்கிளறிய,
குட்டைபிடித்த ராட்சச காகத்தைப்போலொரு
கிபீர் விமானக்கனவு அவனது நெஞ்சில் கொத்தியது.
புடையன் பாம்புபோல் ஒரு
இராணுவ உடை தரித்தவன் தோன்றிய கனவு
அவனது மலவாயிலூடாகப் புகுந்தது.

கடதாசிப் பட்டாளத்தை நீவிப் புகுந்த கனவுகள்
அவனது உடலுக்குள்ளும் புகுந்து கொண்டன.
அப்படியிருந்தும் அவனால் எழ முடியவில்லை.
எழுவதற்கு அவன் முயற்சிக்கவுமில்லை.


2.

நெருப்பினிடையில் அவள் நின்றுகொண்டிருந்தாள்.
போர்வைபோல் நெருப்பு
அவளைச் சூழ்ந்து நின்று தாண்டவமாடியது.
அவள் வெந்து கொண்டிருந்தாள்.

பல்வேறு அருவருப்பான உருவங்களில் வளைந்தும்,
சுருண்டும் வியாபித்த கொடிய நெருப்பு
அவளைக் கொடூரமாய்ப் புணர்ந்தது.
அவளது பிறப்புறுப்பில் வெறித்தனமாய்
புகுந்துகொண்டொரு நெருப்பு
அகங்காரமாய்த் தாண்டவமாடியது.
அவளது முகத்தில் ஏறி மிதித்தொரு நெருப்பு
எக்காளமிட்டுச் சிரித்தது.
இவளென் அடிமை என்றது.
ஓங்கி அவளது முகத்திலும், நெஞ்சிலுமாக உதைத்தது.


அவள் வெளியே வர விரும்பினாள்.
தன்னைத் தின்றுகொண்டிருக்கும் தீயிலிருந்து,
தனது விருப்பின்றியே
தன்னை வன்மமாய்ப் புணரும் நெருப்பிலிருந்து
அவள் வெளியே வர விரும்பினாள்.
குத்தீட்டிகளைப்போல் கூரியனவாய்
அவளைச் சுற்றிக் கூத்தாடிக்கொண்டிருந்த நெருப்பு,
மீசை முறுக்கி மிரட்டியது அவளை.
அவள் வெளியே வர விரும்பினாள்.

அவளது உணவும், உடையும்,
படுக்கையும், போர்வையும் நெருப்பாயிருந்ததால்,
அவளது சுவாசம் தணலாயிருந்ததால்,
நெருப்பில் வெந்து கொண்டிருந்தவள்
நெருப்பை வேகவைத்து வெளியில் வந்தாள்.
நெருப்பு மதில்களைத் துகள் துகளாய்
நொறுக்கித் தள்ளி அவள் நிமிர்ந்தாள்.

தன்னைச் சுட்ட நெருப்பைத் திரும்பச் சுட்டாள்.
நெருப்பு வெந்து சாம்பரானது.
“எனக்கு ஒளி நானே” என்று வெளியில் வந்தாள்.

அவளது உலகம் பரந்து கிடந்தது.
அவளது இனிய பாடல்
பூமியெங்கும், வான்வெளியெங்கும்
வியாபித்து எழுந்தது.
இனிய மலர்களின் நறுமணங்களுடன் கலந்த பாடல்
தடையற்று தரணியெங்கும் பயணித்தது.
காய்ந்த நிலமெங்கும்
அருவிகளும் ஆறுகளும் அலையலையாய் நர்த்தனமாடி,
அவளுக்கு இராணுவ மரியாதை செய்து நகர்ந்தன.

அவள் தீ.
தீயைச்சுட்ட தீ.
அவள் பூ.
நெருப்பைச் சுமந்த பூ.
அவள் பெண்.
தன்னால் நிமிர்ந்த பெண்.
அவள் கலை.
கலகம் செய்யும் கலை.
அவள் நிஜம்.
தன் வலுவைப் புரிந்துகொண்ட அவளே நிஜம்.


3.

அவன் இன்னமும் கடுதாசிப் பட்டாளத்தினுள்
புதைந்தபடியேதான் கிடந்தான்.
தூரத்தேயிருந்து மென்காற்றில்
மெல்ல மெல்ல ஊர்ந்து வந்தது அந்தப் பாடல்.
வாயிற்படியில் வந்து
பூட்டிய கதவுகளை ஒருகணம் நிலையோடு உலுப்பியது.
மெல்ல நகர்ந்து சாரளத்தைத் தட்டியது.
திறபட்ட சாரளத்தினூடு
உள்ளே நுழைந்தது அந்தப் பாடல்.
கடதாசிப் பட்டாளத்தினுள்
சோம்பிக் கிடந்த அவனைத் தட்டி எழுப்பியது.

தூக்கி நிறுத்தியது.
தூக்கம் கலைந்த பேயனைப்போல்
திடுக்குற்றெழுந்தான்.
அக்கினிப்பெண் எதிரே அமர்ந்திருந்தாள்.

சிரித்தபடி அமர்ந்திருந்தாள்.
அழுததும், அழுந்திச் சாதலும் போதும்
எழுந்திரு என்றாள்.
இல்லையேல் எரிந்தேபோய்விடு என்றும் சொன்னாள்.
அவன் எழுந்தான்.
கடதாசிப் பட்டாளம் உதிர்ந்து கொண்டுண்டது.
அவற்றிலிருந்த மொழிகள் யாவும்
மாய உருவங்களாய் மாறிப் போயின.
அவள் அவனுக்கு உயிர் ஊற்றினாள்.
அவன் உயிர் பெற்றான்.
புது மொழியொன்றால் கட்டப்பட்ட பாடலை
அவனுக்கு ஓதினாள்.

அவள் அவனுக்கு சொல்லிக்கொடுத்த புதுப்பாடலை
லகுவாகப் பயின்றான்.
பாடினான்.
அவளும் பாடினாள்.
குரலுக்குள் குரல் கலந்து கொண்டது.
ஒரே குரலானது.
முத்தங்கள் முதலில் கலந்தன.
அவனுக்கு அவளும், அவளுக்கு அவனும்
இனிப்பாய் உருசித்தனர்.
அவள் தன்னிரு கைகளையும் விரித்தாள்.
அடைக்கலமானான்.
ஆனாந்தமாய் உருகிக் கொண்டான்.
அவர்கள் இணைந்தனர்.

அவர்கள் இணைந்தபோது
கோடானுகோடி மனிதக் குரல்களால்
கட்டப்பட்ட இனிய பாடல்
வானை வாயால் கவ்வி புல்லாங்குழலாய் இசைத்தது.

இசைப் பிரவாகத்துள்
அவளும் அவனும் மிதந்து புணர்ந்தனர்.
உயிருக்குள் உயிர் உருகிக் கலந்தது.
இதுவா அதுவாவென எந்த அடையாளமுமின்றி
ஒரு உயிர் மட்டுமே எஞ்சியிருந்தது.
அந்த ஒரு உயிருக்குள்
அவளும் அவனும் ஒளிந்து கொண்டனர்.

ஒளி கவிந்த அறையில், ஒரு உயிரின் கூட்டில்
ஒன்றித்துக் கலவி முடிந்து இருவரும் எழுந்தபோது,

அவனது மாய உருவங்களாய் மாறிப்போன
மொழிகள் யாவும் அக்கினிக் குஞ்சுகளாய்
அந்த அறை முழுதும் பறந்து திரிந்தன.

வாயிற் கதவை உடைத்தும், சாளரத்தினூடு புகுந்தும்
அவை எழுபத்தியிரு திசைகளும்
வீறுகொண்டு பறந்தன.

அவள் அவனுக்கு கோடி உயிர்களைத் தன்னகத்தே
சுமந்து நிற்கும் ஓவியமாய்த் தெரிந்தாள்.

“நான் மட்டும் ஓவியனாய் இருந்தால்....”
என அவன் சொல்லி முடிக்குமுன்,
“நான் நாறியிருப்பேன்”
என்றாள் சட்டென்று நயனமாய்.
வெட்கமடைந்தான் அவன்.
எதையோ புதிதாய்ப் புரிந்தவனாய் அசடு வழிந்தான்.
சிரித்தான். நினைத்து நினைத்து சிரித்தான்.
சிரிப்புத் தாக்கமுடியாமல் விக்கித்தவித்தான்.
சிரித்தாள் அவளும்.

அக்கினி மாந்தரின் சிரிப்பொலி எங்கும் விதைந்து
பூமியை உள்ளங்கைக்குள்
சிறைப் பிடித்துக் கொண்டது.
ஆதாம் ஏவாள் புனைகதையெல்லாம் காலாவதியாகி,
“மனிதம்”
முதல் முதலாய் பிரசவமான தினம் இன்றென்றானது.


நன்றி உயிர்மெய்/3 2006

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக