சனி, 5 ஜூலை, 2014

தவம்

-தமயந்தி- (7.06.2014 )



மேகத்தின் மேடையிலிருந்து
குதித்து இறங்கினாள்
அவள் நடந்துசென்ற வழி நெடுக
நீர்த்துளிகள் உதிர்ந்து
உதடுகள் நிறைந்த வார்த்தைகளை காத்தபடி
மெளனித்துக் கிடந்தன.



பொறுக்கியெடுத்து அவற்றை
மெல்லிய கவிதையொன்றில் மாலை கோர்த்து
அணிந்துகொண்டேன்

வழிப்பயணம் நெடுகலும்
சிரிப்பொலிகள், சிரிப்பொலிகள்.
கழுத்திலிருந்த
நீர்மாலையின் வார்த்தைச் சங்கிலிகள்
வழிநெடுக விதைந்தன.

ஓடக்கரையின் பாறையிலமர்ந்து
சற்றுக் கண்ணயர்ந்தபோது
வானிருந்திறங்கிவ ந்த காரான்சுழி
கழுத்துமாலையைப் பறித்துச் சென்றது.
இப்போ
சிரிப்பலையை எங்கும் காணேன்
எல்லா இடமும் மெளனம் கவ்விக் கிடந்தது.

நீர்மாலையின் சிரிப்பலையால்
மேடுகள் மட்டமாகி பள்ளங்கள் நிரப்பப் படுமென
இன்றைய கனவில் புகலக்கேட்டு
காரான் கொண்டு சென்ற நீர்மாலை வேண்டி
பூமித்தொட்டியில் விழித்திருக்கிறேன் தவத்தோடு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக