சனி, 5 ஜூலை, 2014

மீட்பு

-தமயந்தி- (15.12.1993)




புயல் துரத்த
புயலோடு
அள்ளுண்டோடி வரும்
புழுதிப் படை துரத்த
கடல் துரத்த
கருமூஞ்சி
கொப்பழித்தித்துப் புரளும்
முகில் துரத்த
இருள் துரத்த
இருட்டாள்கையில்
விழிகள் தணல் சீற
ஆந்தை துரத்த
வனம் துரத்த
வளமாய்க் குடல் தின்ன
வனவஞ்சக
நரி துரத்த
பேய் துரத்த
பேய்க்குப் பலிதேடி
பேயாய் அலையும்
பேயின் புதல்வர் துரத்த


ஓடிக் களைத்து
வீழ்ந்து
எழுந்து மீண்டும் ஓடி
புழுதிக்குள் புதைந்து

ஓடிக் களைத்து
புதைந்து
மீண்டும் எழுந்தோடி
முகிலில் மோதி

ஓடிக் களைத்து
மோதி
மீண்டும் எழுந்தோடி
ஆந்தை ஒளி பறிக்க

ஓடிக் களைத்து
ஒளியிழந்து
மீண்டும் தடம்மாறி ஓடி

தொடர்ந்தோட முடியாமல்
பேயின்
பாதாள மலக்குழிக்குள்
அழுகிய கழிவாய் சூரியன்.

புயலமர
புயலின்
புழுதிப் படையமர
கடலமர
கருமூஞ்சி முகிலமர
இருளமர
தணல்விழி ஆந்தை அமர
வனம் அமர
வனத்திடை நரியமர
பேயமர
பேயின் புதல்வர் அமர
வந்தானென் சூரியன்
தீக்கரங்கள் விரித்து

லட்சோப லட்சம்
மனிதக் கரங்கள்
பாதாள மலக்குழியிலிருந்தவனை
மீட்டு சுமந்து நின்றன.

மக்கள்.
மக்கள் மீட்டனர்.
பாதாளச் சிறை கிடந்த
தமது சூரியனை
மக்கள் மீட்டனர்.


நன்றி சுவடுகள் இதழ்/56 (1994 ஏப்ரல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக