வெள்ளி, 4 ஜூலை, 2014

அந்தோனிகளுடன் நங்கூரமிட்டுள்ளான்

 -தமயந்தி-



(படத்தகவல்:
1985ம் ஆண்டு நெடுந்தீவுக்கும் கச்சத்தீவுக்கும் இடையில் இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு, தீவகக் கடற்பரப்புக்குள் எமது மக்களால் மீட்டெடுக்கப்பட்ட 9தமிழக மீனவர்களின் உடல்களை வேலணை தெற்குத் துறைமுகத்தில் அடக்கம் செய்து, கொல்லப்பட்டவர்களின் பெயராலேயே தீவக மீனவமக்களால் கட்டப்பட்ட நினைவுக் கல். 
கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள்:
1. செல்வம்
2. மொஹமெட்
3. செல்வரஜ்
4. சுப்பிரமணி
5. காளிமுத்து
6. மதணாளியன்
7. மஞ்சகோதன்
8. சேதுமாணிக்கர்
9. துவரி ஐயர் பிச்சை

நான் அகதியாகப் பல நாடுகள் ஓடும்போதெல்லாம் கூடவே சுமந்து திரிந்த எனது புகைப்படங்களில் மிக முக்கியமான ஒன்று. இந்த நெகடீவ்கூட இந்துமகா சமுத்திரத்தின் உப்புக்கறையால் பழுதடைந்தே விட்டது.  -தமயந்தி.
நன்றி குவெர்ணிகா, இலக்கியத்தொகுப்பு.
-----------------------------------------------------------------

அந்தோனிகளுடன் நங்கூரமிட்டுள்ளான் 

என் மகளே! 
கலங்காதிரு
காத்திருப்பைக் காத்துக்கொள்
அவன் வருவான்
கடலின்பொருட்டு கர்வமுடையவன்
அலைகளின் சிறகெடுத்து
மீண்டுமவன் கரை தொடுவான்

சோளகம் இல்லாக் காலம்.
கொண்டலடி காற்றும்
ஆழ உறக்கத்தில் அடைந்து கிடக்கும் பருவம்
வெகுநேரம் தரித்திருக்க வேண்டியது இல்லைத்தான்.

தேக்குமர அடிப்பாகம் தேடியெடுத்து
தன் பிள்ளைக்கென செதுக்கிக்கொடுத்த
சிறு பாய்வள்ளத்தை வெள்ளோட்டம் பார்க்கவென
ஓடோடி அவன் வருவான்.
வங்கு நிறைந்த மீன்களுடன்
வலம்புரிச்
சங்கினொலிக் குரலெடுத்து, அம்பாதனையிசைத்து
கரைமீள்வான் என் மகளே.
இந்துக்கடலின் பெருவெளியில்
நீல, வெள்ளைப் பேய்கள்தம் செப்புக்குண்டுகளை
அவனுடலில் புதைக்காதவரை
கடலின்பொருட்டு
அவன் கர்வமுடையவன்.
காற்றையும் புயலையும் ஆள வல்லவன்.
ஏழாற்றுச் சுழல்நீரை எள்ளி நகையாடி
உள்ளங்கையிலள்ளி வாய் கொப்பளித்தவன்
கடலின்பொருட்டு அவன் கர்வமுடையவன்.

சோளகக்காற்றில்
பிடுங்குண்டு அடையும் சாதாளைமுதல்
கடலடி வேர்கொண்ட சாட்டாமாறுவரை
அவனது மூச்சு நீண்ட நெடியது

போர்ப்பறவை நீர்ப்பறவை போகாத ஊர்ப்பறவை
சாப்பறவை சாம்பற்காட்டின் பேய்ப்பறவை எல்லாமே
அவன்
கொய்வீச எறிந்திழுக்கும் முகட்டுவலைத் தூசம்மா

அவன் வருவான்.
கடலின்பொருட்டு கர்வமுடையவன்
வங்கக் கடலலையை சிறங்கை என அள்ளி
வாய்
கொப்பளித்த கடலவன்
வாரி அள்ளிய வங்கு நிறைந்த பிலால்களுடன்
வருவான் கரை மீண்டும்.

நடுக்கடலில் நங்கூரமிட்டு
பாலைதீவு அந்தோனியுடனும்
கச்சைதீவு அந்தோனியுடனும்
பேசிக்கொண்டிருக்கிறான்

அந்தோனிகளே!
அனுப்பிவையுங்களவனைக் கரைக்கு விரைவாய்
அவனது மகனிடம்.
எனது நேசத்துக்குரிய மகளும் நெஞ்சுமலர்வாள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக