சனி, 5 ஜூலை, 2014

குருடாக்கப்பட்ட விளக்கொன்று பேசுகிறது

தமயந்தி  -2007-





உலகம் தன்பாட்டில்
மும்முரமாய் இயங்கிக்கொண்டிருந்தது
வானத்திடலில் கறுப்பும் வெள்ளையுமாய்
காதலோடு முத்தங்களை
கலந்துகொண்டிருந்தன முகில்கள்


பகலொளி உள்ளே விழியெறியாதபடிக்கு
சாத்தப்பட்ட சாளரங்கள்.

பகல் தடுக்கப்பட்ட அறைக்குள்
என்விழி திறக்கப்பட்டது.
அவர்களிருவரும் கலப்பற்ற இயற்கையாகி
அழகிய கவிதைகளாய் சமைந்தார்கள்.

கவிதைகள்
ஒன்றையொன்று படித்துச் சுவைத்தன
உருகி ரசமான கவிதைகள்
ஒன்றையொன்று பருகித் திளைத்தன.

நான் குறைவிழிப் பார்வைகொண்டு
குலவிச் செத்துக்கொண்டிருந்த
அவர்களை ரசித்தேன்.

என் சின்ன ஒளியிலவர்கள்
பொன்னாய் மின்னினர்.
வெண் விரிப்பின் மேனியில்
பொன்னாயுருகிய மாந்தரிருவரும்
கலந்தொன்றாகி
கவின் நிறைந்த நகையாகினர்.

ககனத்திடலில் காதலில் கலந்த
கறுப்பு வெள்ளை முகில்களை
காற்று துரத்தியது
எல்லாமே கலைந்து
சாளரம் திறந்து
அறைக்குள் பகல் புகுந்தபோது
எனது விழி அடித்து மூடப்பட்டது.

பூட்டிய அறைக்குள்
கனிந்தொழுகி கரைந்து கலந்த காதலுக்கு
சாட்சியாயிருந்த ஒரேயொரு நானும்
தூசிப்பட்டாளத்தால் மூச்சுமுட்டி சாகும்படிக்கு
மூலைக்குள் இருத்தப்பட்டேன்
அல்லது எறியப்பட்டேன்.

வெண்விரிப்பும்
அவர்களை இழந்து வெறுமையானது.
காதல்த்துளிகள் சில மட்டும்
இன்னமும் காயாமல்
காதலுடனேயே கிடந்தன.
இன்னும் சற்று நேரத்தில்
அவைகூட காய்ந்து
சாட்சியற்றுப் போகலாம்.

இப்போ நானும்கூட
ஒரு குருட்டுசாட்சி மட்டுமே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக