செவ்வாய், 1 மார்ச், 2016

அவளும் நானும், ஆனியும் வடகரையும்

 (2 June 2014)

 புலியன் தீவின் கிழக்காக,
நாகை தீவின் வட கிழக்காக,
ஈச்சாமுனையின் வடக்காக,
நாவட்டக் கல்லின் வடமேற்காக
பவளப் பாறைத் தொடரின்
வடகிழக்காக
அடர்ந்த
சாட்டாமாற்றுச் சோலையின்
பெருமணற் பரப்பில்
யாராலும் அபகரித்துச் செல்ல முடியாத
கரு நீலமும், கரும் பச்சையுமான
தாமரைகளின் மத்தியிலிருந்து
அவள் எழுந்து
அலைகளின் விளிம்பில்
வானத்தை
அண்ணார்ந்து பார்த்தபடி
மல்லாந்து கிடந்தாள்.

ஆயிரமாயிரம் தாமரை காத்தான்கள்
அவளைச் சூழ நின்று காவல் காத்தன

அலைவிலத்தி அகலச் செல்ல சிறு
கலம் மட்டுமல்ல,
காகிதத்தில்கூட கப்பல்கட்ட இல்லை வழி.

வடகரையிலிருந்து பாடும் பாடலையோ
எழுதும் கவிதையையோ
காற்றை நம்பி அவளுக்கு
அனுப்பவும் முடியாது.

காற்றின் கையில் கொடுத்தனுப்புவது மீண்டும்
முகத்தில் வந்தறையும்.
சோளகம் வேறென்ன செய்யும் வடகரைக்கு?

பின்னிரா கழிந்த கணமொன்று.

வெள்ளாப்பு வெளிப்பதற்கு சற்றுமுன்னதாக
ஆயிரமாயிரம் தாமரை காத்தான்களின்
காவல்களுக்கிடையில்
அலைகளின் நுனியில் மல்லாந்தபடி
அவள் பாடிய பாடலை
சுமந்துவந்து தந்தது சோளகம்.

முகவரி மாறி வந்ததோவென
தடுமாறுகையில்
இல்லை,
அது எனக்கானதுதானென
அவளது பாடலிலேயே பதிலிருந்தது.

சிறகுகள் இருந்ததன.
துடுப்புகள் இருந்தன.
சோளக அலைகளை விலத்திச் செல்லும்
கொம்பேரா பொருத்திய
கலம் இருந்தது.
இடைவாள் உறையில் இருந்தது.

நான் பறந்தேன் வானில்
மிதந்தேன் அலைகளில்
முன்னேறிப் பாய்ந்தேன் சோளகம் கிழித்து

ஆயிரமாயிரம் தாமரைகாத்தான்களின் சைனியம்
தோற்கடிக்கப்பட்டது எனது உடைவாளால்.

காற்றையும், அலைகளையும்
தாமரைகாத்தான் சைனியங்களையும் வென்று
அவளோடு கரை திரும்புகையில்
ஆனித்தூக்கத்தில் உறங்கிக் கிடந்தது வடகரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக