செவ்வாய், 27 செப்டம்பர், 2016

வண்ணத்துப்பூச்சிகளை வேட்டையாடுதல் --தமயந்தி-



"ஆறுகள் பெருக்கெடுத்து நீர்கொள்ளாப் பெருங்கடல் கொந்தளித்ததுபோல்
தேவதைகளின் துக்க சமுத்திரம் மட்டில்லாததாய்ப் போயிற்றே...."


துறவிகள்.
இளம், கிழத் துறவிகள்.
அவர்கள் வாழ்ந்தார்கள்.
போருக்கு முன்னும் வாழ்ந்தார்கள்
போருக்கு நடுவிலும் வாழ்ந்தார்கள்
போர் முடிந்தும் வாழ்ந்தார்கள்.
சாயம் கரைந்து வெளிறிப்போன அங்கிகளை
வெள்ளாவிப்பானையில் அவித்து அவித்து
கசங்காமல் நலுங்காமல் அணிந்து திரிந்தார்கள்.

பெருநகரங்கள் நகரங்கள் ஊர்கள் கிராமங்கள்
சேரிகள் கரையோரங்களென
எல்லா நிலத்திலும் அவர்கள்
ஆண்மை புடைக்கத் திரிந்தார்கள்.

ஆளுக்கொரு மந்திரக்கோலை 
சிறிதும் பெரிதுமான அளவுகளில் கறுப்புநாடாவில் கட்டி
தத்தம் கழுத்துக்களில் தொங்கப்போட்டபடி பவனி வந்தார்கள்.
கிழத் துறவிகளில் சிலரோ
தங்கள் கழுத்துக்களில் தொங்கும்  மந்திரக்கோலை
இடுப்புப் பட்டிகளில் சொருகிவைத்து
பூமியை அழுத்தமாக மிதித்தபடி திரிந்தார்கள்.

இன்னும் ஒருசிலரோ
மந்திரக்கோலை செங்கோலாகவே ஊன்றி நடந்தார்கள்.
சனங்களோ, இந்த மந்திரக்கோல்களின் முன்னால்
அபின் தின்றவர்களைப்போல் மயங்கிக் கிடந்தார்கள்.
ஆனால் தேவதைகளோ;
துறவிகளின் பொருட்டும்
அவர்களது மந்திரக்கோல்களின் பொருட்டும்
என்றென்றைக்கும் அச்சம் நிறைந்தவர்களாகவே இருந்தார்கள்.
போருக்கு முன்னும், போருக்கு நடுவிலும் , போர் முடிந்தும்
தேவதைகளின் அச்சம் வலுத்தனவேயல்லாமல் குறைந்தனவாய் இல்லை.

ஒவ்வொரு துறவிகளும் குறுநில மன்னர்களாகவும்,
அரசர்களாகவும், பேரரசர்களாகவும்,
மேதகு சக்கரவர்த்திகளாகவும் கொலுவோச்சியிருந்தார்கள்.

சனங்களின் வாழ்விடங்களுக்கு நடுவே
எழுந்திருந்த விரியன்பாம்புப் புற்றுகளை அவர்கள் தீண்டாதிருந்தார்கள்.
மாறாக அவற்றின் பாதுகாப்புக்களை
மேலும், இன்னும் வலுப் படுத்தினார்கள்.

நஞ்சுப் புற்றுகளுக்குக் காவலாக
நீண்ட நெடும் யுத்த நெருப்பினுள்
பட்டு நொந்து கெட்டழிந்த சனங்கள் மீதே
பட்டயம் எழுதி வைத்தார்கள்.
ஆலகால விருட்சங்களை வெட்டி அக்கினியிலே போடாமல்,
அவற்றை நந்தவனம் என்றார்கள்.
சனங்களும் நம்பினார்கள்.

சமுத்திரத்தில்
பசுமை விதைந்திருந்த தாவரங்கள்
வேரறுந்து கரையொதுங்கி அழுகி நாறிக்கிடந்தன.

சனங்களுக்கு நடுவில் வாழ்ந்திருந்த தேவதைகளோ
தலைமறைவானார்கள்.

வண்ணத்துப்பூச்சிகளை வேட்டையாடும் எல்லா உரிமங்களையும்
துறவிகள் தங்கள் அங்கிப்பைகளுக்குள் கொண்டு திரிந்தார்கள்.
அச்சப்பட்ட தேவதைகள் வண்ணத்துப்பூச்சிகளின் சிறகுகளுக்குள்
தலைமறைத்து வாழ்வதை
துறவிகள் நல்லாகவே அறிந்து வைத்திருந்தார்கள்.
வண்ணத்துப் பூச்சிகள் மீதான வேட்டைகளை
இடையறாது விருப்பத்தோடும், ரசிப்போடும் செய்து வந்தார்கள்.

(நன்றி: ஆக்காட்டி-12, ஜூலை,செப் 2016)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக