திங்கள், 10 அக்டோபர், 2022

சூரியனைத் தின்றவர்கள் - கரைமணலில் சில வரிகள்...

 கவிஞர் ஹம்சத்வனி`யின் முன்னுரை 



கூத்து, நாடக, கலைஞனாக, கவிஞனாக, ஒளிப்படக் கலைஞனாக, சிறுகதையாளனாக புலத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் அறியப்பட்ட தமயந்தியின் இன்னுமொரு முகம் எனக்கு மிகவும் நெருக்கமானது.

கடல்சார் வாழ்க்கை, கடலின் நலம், கடலின் எதிர்காலம் என்பன பற்றி அவன் கொண்டிருக்கும் மிதமான பற்றும் ஆதங்கமும் ஆழமான அறிவும் நிறைந்த முகமே அதுவாகும். 

கவிதை நாடகம், சிறுகதை என பல நூல்களின் படைப்பாளி என்ற பெருமையும் தமயந்திக்கு உண்டு.

தமயந்தியின் "சூரியனைத் தின்றவர்கள்" என்ற இந்தத் தொகுப்பை படித்து அதன் உள்பொருளை என் முன்னறிவுக்கு எட்டியவரையில் கோடிட்டுக் காட்டவும், கிடைத்த அரிய வாழ்கணங்களுக்கும் தமயந்தியின் அன்புக்கும் பாசத்துக்கும் நான் நன்றியுடையவன்.


சூரியனை தின்றவர்களில் உள்ள பெரும்பான்மையான கவிதைகள் கடலையும் கடல்சார் வாழ்வையும், கடலின் சீரழிவுகளையும், கடல் கொள்ளை போவதையும் உணர்வும் உணர்ச்சியும் பொங்க பேசுகின்றன.

ஒரு கடல்சார் வாழ்வியலின் பின்புலத்தில் ஊறிய ஒரு கடல்மனிதன் தமயந்தியாலேதான் இவ்வாறான கடலின் ஈரமும் இரத்தமும் உப்பும் நிறைந்த கவிதாகடல்மொழியில் எழுதமுடியும்.  ஈழத்து கவிதைகளில் கடல் பற்றியதான கவிதைத்தொகுதி இதுவே முதலும் முக்கியமானதும் எனக் கருதுகிறேன். 


கரைகளில் இருந்து கடலைப் பார்த்த சமூகத்தினரை, கவிஞர்களை கடலில் இருந்து நிலத்தையும் வானையும் இந்த முழு உலகையும் அது எதிர்நோக்கும் பேரவலத்தையும் பேரழகையும் பார்க்க கற்றுக் கொடுப்பதற்கு எமது கைகளைப் பற்றி அழைத்துச் செல்கின்றன சூரியனைத் தின்றவர்கள். 


கவிதைகளைப் படிக்கப் படிக்க தீவகத்தின் பல நிலப்பிரதேசங்களும், கடற்பகுதிகளும் கடல்வாழ் மனிதரின் சொல்லாடல்களும் அவர்கள் சார்ந்த மதநம்பிக்கை, நம்பிக்கையின்மை என்பவையும் சமூக அரசியல் பொருளாதார சூனியக்காறர்களும் வெளிச்சம் போட்டு காட்டப்படுவதை உணர்வீர்கள்.


இறுதியாக பேசவிடுங்கள், முண்டஞ்சுறா, அவளும் நானும் என்ற கவிதைகளை மீளமீள வாசிக்கவும் படிக்கவும் என்னை நானே தூண்டிக்கொண்டேன்.

கடல் எதிர்நோக்கும் எண்ணிலடங்கா அவலங்கள் ஒரு உலகப் பேரழிவின் தொடக்கம். 

ஒருபகுதி நிலத்தில் நடக்கும் அவலங்களைப் பேசும் உலகத்தீரே! மூன்று பகுதி கடலின் அவலத்தையும் பேசுங்கள் என தமயந்தியின் கவிதைகள் முகத்தில் அறைந்து உணர்த்துகின்றன. 


தமயந்தியின் கவிதா மொழி புதியதாகிறது.

கடலுக்குள் மருந்தறியாக் காயங்கள், ஆறுகள் பெருக்கெடுத்து நீர்கொள்ளாப் பெருங்கடல், இவை போன்ற சொல்லாடல்கள் என்னையும் என் வாசிப்பையும் பல கணங்களுக்கு கட்டிப்போட்டிருக்கின்றன.


இத்தொகுதி கடல்பற்றிய அக்கறையைத் தூண்டும் என நம்புகின்றேன்.

ஆயிரம் மின்மினிகளை புதைத்தது போல் கவிராடும் கடலாளைப்போல் இக்கவிதைகள் ஒளிரும். 

சூரியனைத் தின்றவர்களை நிதானமாக நிறுத்தி நிறுத்தி வாசியுங்கள் படியுங்கள்.

கடலாள் மேலுள்ள காதல் பெருகட்டும். 

கடல் நலம் பேணுக!

அவள் மிரண்டு சதிராடினால் எதுவுமே தாங்காது.


அன்பு

தமிழ்ச்செல்வன் (ஹம்சத்வனி)

மொன்றியல்  கனடா 26.09.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக