வியாழன், 20 அக்டோபர், 2022

கடல் அட்டை வளர்ப்பும், யாழ்ப்பாண தீவக கடல்களின் அரசியலும், சூழலியலும்

ஏ.எம். றியாஸ் அகமட் (அம்ரிதா ஏயெம்)

Senior lecturer at South Eastern University of Sri Lanka

- என்னுரை - பகுதி 1

இந்த வருடம் அக்கரைப்பற்று புத்தகக் காட்சி – 2022 நிகழ்விற்காக நோர்வே உயிர்மெய் பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட ”கடல் அட்டை வளர்ப்பும், யாழ்ப்பாண தீவக கடல்களின் அரசியலும், சூழலியலும்” என்ற நுாலை காலம் சென்ற எனது உம்மாவிற்கு சமர்ப்பணம் செய்திருக்கின்றேன்.  


உம்மா எனக்கு எல்லாமானவர். 

சூழல் உயிருள்ள, உயிரற்ற காரணிகளின் கலவை என்றும், அவை ஒன்றுடன் ஒன்று இடைத்தொடர்பானது என்றும், சூழல் மாசடைதல் என்பது சூழலில் ஏற்படுத்தப்படும் அல்லது ஏற்படும் விரும்பத் தகாத மாற்றம், நிலத்தில், நீரில், வளியில், கதிர்த்தொழிற்பாட்டில், ஒளியில், ஒலியில் ஏற்படக்கூடியது என்றும்,  சூழலில் ஏற்படும் இவ்வாறான மாற்றங்களைத் தடுப்பதற்கு பல்வேறு வழிகள், கடதாசிகளில் எழுதப்பட்டிருந்தாலும், இதற்கு அடிப்படையானது சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு என்றே கருதுகின்றேன். சுற்றுச் சூழல் விழிப்புணர்வானது நான்கு மனித பங்குதாரர்களைக் கொண்டிருக்கலாம் (என்னைப் பொறுத்த வரையில்). (ஒரு வேளை இதனைவிட அதிகமாகவும் இருக்கலாம்). பங்குதாரர்களாக பொதுமக்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களைக் கொள்ளலாம்.

சூழலிலிருந்து வளங்களையும், நன்மைகளையும் பெறுவதோடு சூழலோடு பொதுமக்களின் தொடர்பு முடிந்துவிடுகிறது. ஆசிரியர்களுக்கு உரிய காலத்துக்குள் சுற்றுச் சூழலைக் கற்பித்து முடிப்பதோடும், ஆய்வாளனுக்கு சுற்றுச் சூழலை ஆய்வு செய்து அதனை கௌரவமான, மகத்துவமான, புகழ்பெற்ற, பெருமைக்குரிய, மேற்று ஐரோப்பிய, வட அமெரிக்க நியமங்களுக்குட்பட்ட, சொற்ப தொகையினரே வாசிக்கக்கூடிய சஞ்சிகைகளில் பிரசுரித்து, பேராசிரியர் பதவி உயர்வுக்கு புள்ளிகளைப் பெறுவதோடும், மாணவர்களுக்கோ, கற்றதனை மனனம் செய்து எழுத்தால் ஒப்புவித்து உயர்ந்த புள்ளிகளைப் பெறுவதோடும் முடிகிறது. அரசியல்வாதிக்கோ கிடைக்கப்போகும் தரகுக்காகவும், அரசியல் இருப்பை உறுதி செய்வதற்காகச் செய்யப்போகும் அபிவிருத்தித் திட்டங்களோடும் தொடர்பு முடிகிறது. 

சுற்றுச் சூழல் என்பதே வாழ்க்கைக்கும், கல்விக்கும், இதர செயற்பாடுகளுக்கும் அடிப்படையான ஒரு விடயமாகும். சுற்றுச் சூழல்தான் உணவு தருகிறது. உடை தருகிறது. உறையுள் தருகிறது. ஓளடதம் தருகிறது. இன்னோரன்ன பிறவும் தருகிறது. சுற்றுச் சூழல் இன்றி மருத்துவம் இல்லை. கால்நடை இல்லை. விவசாயம் இல்லை. விலங்குகள் இல்லை. தாவரங்கள் இல்லை. இரசாயனங்கள் இல்லை. வர்த்தகம் இல்லை. நிருவாகம் இல்லை. நிதி இல்லை. நீதி இல்லை. அரசியல் இல்லை. சமூகங்கள் இல்லை. தத்துவங்கள் இல்லை. மதங்கள் இல்லை. மொழிகள் இல்லை. கலைகள் இல்லை. ஆக சுற்றுச் சூழல் என்பதே அடிப்படையானது. எனவே சுற்றுச் சூழல் சம்பந்தமான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தல் என்பதுவும் மிக மிக அடிப்படையான ஒன்றாகும். 

இந்த அடிப்படையில் சுற்றுச்சூழல் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கின்றது. தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள், சமூகங்கள், அரசியல், பொருளாதாரம் போன்றவைகள் சூழல் என்ற சங்கிலியின் பல கண்ணிகள். இவைகளுக்கிடையில் ஒரு சமநிலை வேண்டும். எவரும் எவரையும் பாதிக்காத வகையில் இருந்து, அந்த சூழலின் நிலைபேறான இருப்புக்கு உதவ வேண்டும். 

உதாரணமாக அபிவிருத்தித் திட்டம் ஒன்றை செயற்படுத்தும்போது, அவை தாவர விலங்குகளிற்கும், அருகிலுள்ள சமூகங்களுக்கும், மனிதர்களுக்கும்  பாதிப்பற்றதாக இருக்க வேண்டும். அந்த அபிவிருத்தி திட்டம், சூழலுக்கு பாதிப்பாக இருந்தாலும், அதீத இலாபத்தை நோக்கமாகக் கொண்ட உற்பத்தி முறை காரணமாக, சமூக அமைப்புக்கள் எவ்வளவு எதிர்ப்பைக் காட்டினாலும், அரசியல் இந்த  திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதி கொடுத்தால், அதன் காரணமாக செயற்படுத்தப்படும், பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட திட்டம் சூழலின் சமநிலையைக் குழப்பி, தனது இருப்பையும் கேள்விக்குள்ளாக்கும். இதற்கு இலங்கையின் பல அபிவிருத்தித் திட்டங்களை உதாரணமாக கூறலாம்.


என்னுரை - பகுதி ii 

வரையறையற்ற மூலதனத்தை குவித்து, உலக முதலாளித்துவத்தை முதலாளித்துவவாதிகள் விரித்து செல்வதற்கான உழைப்பிற்கு, நிலம் தேவைப்படுகின்றது. இங்கே அவர்கள் (சூழலைக் கருதாது) “இயற்கையை வெல்”, “எல்லாம் மனிதருக்காக” என்ற தாரக மந்திரங்களை உருவாக்கி நிலத்தை சுரண்டோ சுரண்டென்று சுரண்டி தங்களது பரந்த ஏகாதிபத்தியத் தேவைகளுக்கான உற்பத்தியைக் கூட்டுகிறார்கள். மேலே கூறிய தாரக மந்திரங்கள் 16ம் நூற்றாண்டில் ஆரம்பித்த முதலாளித்துவ உலக பொருளாதாரத்திற்கு பின்னர் உருவானவைகள்தான். அன்று இதற்கெதிராக கிளம்பிய சமூக எதிர்ப்புக்களையும், கிளர்ச்சிகளையும் அன்றிருந்தே முதலாளித்துவவாதிகள், அடக்கியும், மழுங்கடித்தும் வந்திருக்கின்றார்கள். இலாப நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்த முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு சூழலியல் பற்றிய அக்கறை ஒரு போதும் கிடையாது. ஆனால்  கடுமையான எதிர்ப்புக் கிளம்பும்போது  முதலாளித்துவம் தனக்கும் சூழல்மீது அக்கறை இருப்பதாக பம்மாத்துக் காட்டும்.

சூழலிலுள்ள உயிர்கள், தாவரங்கள், விலங்குகள் போன்றன அரசியல், பொரளாதார, வணிகமயமான திட்டங்களால் உயிரினப் பல்வகைமை, சூழல் அழிவுக்குள்ளாகும்போது அல்லது உயிரினப் பல்வகைமையின் கூறுகளான  பறவைகள், ஊர்வன, பூச்சிகள், ஆறு, கடல், அலை போன்றவற்றிற்கு அழிவுகள் ஏற்படும் போது அவை பற்றி அறிவும், விழிப்புணர்வையும் நாம் கொண்டிருக்க வேண்டும். இந்த விழிப்புணர்விற்கான குரல்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும். அவை ஓங்கி ஒலிக்கச் செய்யப்பட வேண்டும். 

இன்று நடைமுறையில் உள்ள அரச, தனியார், இயந்திரங்களில் உள்ளவர்கள், எதிர்ப்புகளை சமாளித்து அதனை முளையிலேயே கிள்ளி எறிவதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் சூழலியல் கோரிக்கைகளை தங்களுக்கு சாதகமாகவே வளைக்க முற்படுகின்றனர். எனவே இதற்கெதிராக திரண்டெழக் கூடியவர்கள் மக்களே. இதற்கு முதன் முதலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  இந்த விழிப்புணர்வுக் கருத்துக்கள் ஒரு வலுவான எதிர்ப்புக் குரலாக உருவாக வழி வகுக்க வேண்டும். 

சுற்றுச்சூழற் சங்கங்கள், சூழலுக்கு ஆதரவு தரும் தொழிற் சங்கங்கள், சுரண்டலுக்கு எதிரான அமைப்புக்கள் போன்ற பலவும் நிறைய உருவாகி தொடர்ந்து போராட வேண்டும். இத்தகைய போராட்டங்கள் பல வெற்றிபெற்றுள்ளன. வெற்றி பெற்றும் வருகின்றன. இவை நமக்கு மிகுந்த தெம்பை அளிக்கின்றன. நம்பிக்கையும் அளிக்கின்றன. 

இன்று சூழலியல்  ஒரு தீவிரமான அரசியல் போக்காக உலகின் பலபாகங்களில் மாறிக்கொண்டிருக்கின்றது. சூழலைப் பாதுகாப்போம் என்ற மையவாதக் கருத்தைச் சுற்றி பல அரசியல் இயக்கங்கள் சூழல் அழிவைத் தடுப்பதற்கும், நல்ல சூழலைக் கட்டியெழுப்புவதற்கும் களத்தில் கச்சை கட்டிக் கொண்டு நிற்கின்றன. சூழலின் மீது வணிகமும், பொருளாதார நலன்களும், அரச அதிகாரங்களும் மையப்பட்டுள்ள நிலையில,; இவ்வாறான இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வதில் அல்லது இவ்வாறான சூழலியல்-அரசியல் போக்கை முன்னெடுத்துச் செல்வதில் நாம் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். 

இன்று சூழலியல்  ஒரு தீவிரமான அரசியல் போக்காக உலகின் பலபாகங்களில் மாறிக்கொண்டிருக்கின்றது. சூழலைப் பாதுகாப்போம் என்ற மையவாதக் கருத்தைச் சுற்றி பல அரசியல் இயக்கங்கள் சூழல் அழிவைத் தடுப்பதற்கும், நல்ல சூழலைக் கட்டியெழுப்புவதற்கும் களத்தில் கச்சை கட்டிக் கொண்டு நிற்கின்றன.  இன்று எமது நாட்டில் அல்லது எமது பிரதேசங்களில் இவ்வாறான இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வதில் அல்லது இவ்வாறான சூழலியல்-அரசியல் போக்கை முன்னெடுத்துச் செல்வதில் எமது பங்கு என்ன என்று ஒவ்வொருவரும் தங்களைப் பார்த்துக் கேட்டுக்கொள்வதும், அதற்கான நடவடிக்கையில் காலம் தாழ்த்தாது இறங்குவதும் மிகவும் முக்கியமானதும், அவசியமானதுமான ஒன்றாக இருக்கிறது.


என்னுரை - பகுதி iii 

உம்மா இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பல பரிசோதனைகளுக்குப் பின், பல அலைச்சல்களுக்குப் பின் கடந்த ஜனவரி மாதம் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. பத்து நாட்களுக்குப் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி, கொழும்பில் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் தங்கியிருந்து உம்மா சிகிச்சை எடுத்தார். மீண்டும் இரு வாரங்களுக்குப் பின் வைத்தியரிடம் ஆலோசனைக்கு அதே வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியிருந்ததாலும், எங்களின் ஊர் கொழும்பிலிருந்து 350 கிலோ மீற்றருக்கு அப்பால் இருந்ததாலும், நோயாளிக்கு பிரயாணம் உகந்ததல்ல என்பதாலும், கொழும்பில் வாடகைக்கு வீடு ஒன்றை சில காலங்களுக்கு எடுத்திருந்தோம். இந்தக் காலத்தில் சகோதரி, தந்தை, உறவினர்களுடன் உம்மாவை கண்ணும் கருத்துமாக பார்த்து கவனித்தும் பராமரித்தும் வந்தோம். 

இதே காலத்தில் பல்வேறு நிகழ்வுகளின் நிமித்தமும், கடல் அட்டை வளர்ப்பு பிரச்சினைகள் சம்பந்தமான கள விஜயத்திற்காகவும் யாழ்ப்பாணம் வந்தேன். அந்த வேலைகளை முடித்தேன். உம்மாவை இன்னும் இரு வாரங்களுக்குப் பிறகு வைத்தியரிடம் வைத்திய ஆலோசனைக்கும், சிகிச்சைக்கும் மீண்டும் அழைத்துச் செல்ல வேண்டியிருந்ததால், யாழ்ப்பாணத்திலிருந்து ஊர் (மருதமுனை வந்து), அங்கிருந்து உடனே கொழும்பிற்கு உம்மாவிடம் செல்வதென தீர்மானித்திருந்தேன். ஏனெனில் ஆரம்பத்திலிருந்து நானே உம்மாவுடன் இருந்தேன். உம்மாவை சுகப்படுத்தும், அல்லது உம்மா சொல்லுக் கேட்கும் மந்திரக் கயிறு என்னிடமே இருக்கிறது என்று ஆழமாக நம்பினேன். 

உம்மாவை நான் மீண்டும் மீட்டு ஊர் வந்து விடுவேன் என்று உம்மா என்னில் பாரிய நம்பிக்கை வைத்திருந்தார். தொலைபேசியிலும் வேண்டிக்கொண்டே இருந்தார். நானும் உறுதி கொடுத்துக்கொண்டே இருந்தேன். ஊர் வந்து உம்மாவிடம் செல்வதற்கு ஆயத்தமானவோது, எனக்கு கொவிட் 19 குரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதுடன், அதற்கான சிகிச்சையும், ஓய்வையும் ஊரிலேயே எடுத்துக்கொண்டிருந்தேன். நோயிலிருந்த இந்தக் காலத்திலேயே எனது கடலட்டை அனுபவங்களை முகநூலில் எழுதத் தொடங்கியிருந்தேன். உம்மாவிடம் செல்ல முடியாமல் போய்விட்ட இந்தக் காலத்தில் மிகவும் சிறப்பாகவும், வேகமாகவும் குணமாகிக் கொண்டிருந்த உம்மா, எனக்கு நோய்வந்து ஒரு வார காலத்தில் கண்டு பிடிக்க முடியாத காரணங்களினால் இறந்துபோனார். 

நான் உடைந்து போனேன். எனது மிகப் பெரும் ரசிகையாகவும், எல்லாமாகவும் இருந்த உம்மா, சுற்றுச்சூழல் பணியும் மிக முக்கியமான ஒன்று கற்றுத் தந்த உம்மாவின் மறைவு மிக மிக வலி மிகுந்த ஒன்றாக இருந்தது. நான் சுற்றுச்சூழலின் நிமித்தம் அங்கு செல்லாமல் இருந்தால் உம்மா உயிருடன் இருந்திருப்பார் என்ற மற்றவர்களின் கருத்து ஒன்றும் இருந்தது.  ஆனாலும் விதியை நினைத்து ஆறுதலடைந்தேன். ஒரு சூழலியல் போராட்டத்திற்காக அல்லது சுற்றுச்சூழல் போராட்டத்தில் உம்மா இறந்ததாக ஆறுதலடைந்தேன். இன்றுவரை உறுதியாக அப்படியே நம்புகின்றேன். அப்படி இறந்தவர்களை வீரமரணம் அடைந்தவர்கள் (சஹீதுகள்) என்று கூறுகிறார்கள். அப்படியே மற்றவர்களையும் நம்புகின்றேன். 

எழுதிச் செல்லும் விதியின் கை!

எழுதி எழுதி மேற்செல்லும்.

தொழுது கெஞ்சி நின்றாலும்!

சூழ்ச்சி பலவும் செய்தாலும்,

வழுவிப் பின்னால் நீங்கியொரு

வார்த்தையேனும் மாற்றிடுமோ?

அழுத கண்ணீர் ஆறெல்லாம்!

அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?

-உமர்கைய்யாம- 

எங்களுடைய சூழலியல் மரபில் இந்த நீரிலுள்ள, நிலங்களிலுள்ள, மலைகளிலுள்ள உயிருள்ளவையும், உயிரற்றவையும், மனிதர்களானவையும், மனிதர்களற்றவையும், காட்டு விலங்குகளும், வீட்டு விலங்குகளும், நாட்டுப் பறவைகளும் ஒரே “உம்மா” வை (பல சாகியங்களைக்கொண்டு) ஆக்குகின்றன. இவைகளே, பூமியின் சொந்தங்கள். உயிரிகளின் சாராம்சமான உயிர்வலைகளை கவனமாகப் பின்னுகின்றன. இது போன்று பல உம்மாக்கள் சேர்ந்து, சூழற்றொகுதிகளை (உம்மா) ஆக்குகின்றன.   

அவைகளை கவனமாக, நிலைபேறான முறையில் பாதுகாப்பது “அமானா” (அமானிதம் நிறைவேற்றல்). இந்தக் கடமைகளை முன்னெடுப்பதில் ஒரு மனிதன் எப்போதும் பின்நிற்க மாட்டான். இந்த அமானா ஒரு மனிதனுக்கு உயிர்வலையின் அறப் பொறுப்புக்கள் பற்றிய ஆத்மீகப் பெறுமதியைக் கொடுக்கிறது. 

இந்த நிலங்களினதும், மலைகளினதும் உயிருள்ளனவும், உயிரற்றனவும், ஒவ்வொன்றும், ஒவ்வொன்றுடனும் இடைத்தொடர்புபட்டவைகள். இந்த மலைகளையும்,  இந்த நிலங்களையும் இழப்பது உன்னை இழப்பது போன்றதாகும். இந்த நிலங்களுடனும், மலைகளுடனும், பூமியுடனும் தாராளத் தன்மையுடன் இருந்தால், அவைகளும் உன்னுடன் தாராளத் தன்மையுடன் இருக்கும். இதுவே ஒரு மனிதனின் மலைகளும், நிலங்களும், உயிர்களும், உயிரற்றவைகளும், விலங்குகளும், தாவரங்களும், உயிர் வலைகள் பற்றியதுமான நம்பிக்கைகளின் சாரம். 

மனித வாழ்க்கையின் சாராம்சமே இந்த உம்மாக்களை மதிப்பதும், பாதுகாப்பதும்தான். எனது வாழ்க்கையின் சாராம்சமும் இதுவேதான். எனது யாழ்ப்பாணப் பயணமும், அட்டை எழுத்துக்களும் உணர்வுபூர்வமானவை. உம்மாவை ஞாபகவிக்கச் செய்பவை. வலிகளுடன் உலா வருபவை. கண்ணீரை முகிழ்க்கச் செய்பவை. இந்த அட்டைக் கதைகளிலும், கள விஜயங்களிலும் இதே போன்று இன்னொரு வகைiயான வலிகளையும், கண்ணீர்களையும் கண்டேன்.

ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஆழங்குறைந்த கடல்களில் ஆண்டாண்டு காலமாக மீன்பிடித்து குடும்பம் ஓட்டிய இடங்களில் சிறிய எண்ணிக்கையிலானவர்களுக்கு கடல் அட்டைப் பண்ணைகள் அமைத்துக் கொடுப்பது பாரிய சிக்கல்களை உருவாக்கலாம். இந்தச் சிக்கல்கள் தனியே பொருளாதார இலாபத்தை மட்டும் வைத்து கணிக்க முடியாதவை. எனவே கடல் அட்டைப் பண்ணைகளை செயற்படுத்த முனையும்போது, உள்ளுர் மக்களின் பங்குபற்றுகை, உள்ளுர் அறிவு, மீன்பிடி வளங்கள், தாவரப் பன்வகைமை, விலங்குப் பன்வகைமை, ஒவ்வொரு ஆண்டும் வலசைபோகின்ற உயிரினங்களின் நடத்தைக் கோலங்கள், அவைகளின் பரம்பல், பழங்காலவியல், உயிர்புவியியல் அம்சங்கள், நாட்டாரியல், ஐதீகம், புராதன குடியேற்றங்கள், தொல்லியல், அரசியல், பூகோள ஈடுபாடுகள், சமூக, பொருளாதார அம்சங்கள் போன்ற பல அம்சங்கள் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் இவ்வகையான திட்டங்கள் நிலைபேறானாதாக இருக்கும். இருக்கவும் முடியும். 

இந்த யாழ்ப்பாண களவிஜயத்தை ஏற்பாடு செய்ததற்கும், இந்த நூலை உயிர்மெய் பதிப்பக வெளியீடாக கொண்டு வருவதற்கு கால்கோளாக இருந்த தோழர் தமயந்திக்கும், இந்த நுாலுக்கும் தேடலுக்கும் ஆய்வுகளுக்குமுரிய தங்களது நேரங்களை ஒதுக்கித் தந்த எனது மனைவிக்கும், மகளுக்கும், பெற்றோருக்கும், எனக்கு ஒத்துழைப்பைத் தந்த நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். 


ஏ.எம். றியாஸ் அகமட் (அம்ரிதா ஏயெம்),

224, காரியப்பர் வீதி, மருதமுனை 05

இலங்கை

0776009200

riyasahame@yahoo.co.uk


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக