வியாழன், 13 அக்டோபர், 2022

நீலவானம் தொட்டு நீலம் பூத்த கடல்

கூத்துக்கலைச்  செம்மல் அண்ணாவி  

சவிரிமுத்து மிக்கேல்தாஸ் 


உலகை உய்விக்கும் உயிர்நாடி ஐம்பூதங்களாகும். 
நீர், நிலம், காற்று மாசுபடும் போது அவை பொங்கி எழுகின்றன. 
“முந்நீர்” என்பது கடலுக்கான பெயரைக் கொண்டது. 
இதனை புறநானூறு:- 

“முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல 
செம்மீன் இமைக்கும் மாசு விசும்பின் 
உச்சநிலை நின்ற உலவு மதி கண்டு....” 

என விளம்புவது, மீனவர் படகின் விளக்காக வான் நடுவே செவ்வாய் மீன் விளங்குகின்றமையும், உச்சி மீது தோன்றும் முழு நிலவைக் கண்டு மயில்கள் ஆடுவதும், இயற்கையின் வழி நடத்தலைக் குறிப்பதாலாகும். 

முத்து பவளமென பல வளம் கொண்ட கடலன்னையை நோக்கி ஆறுகள் பலவாய் நிலமோடியும், மனித ஊறுகள் பலவாய் கடலில் கலப்பதும், உடல் வாட்டி உழைப்பவர்கள் சிந்திய வியர்வையும் கண்ணீரும் கடல் உப்பானதன் காரணமாக இருக்கலாம். 

தமயந்தி (சைமன் விமலராஜன்) கடல் வாழ்வோடும், கவிதையின் கனல் வீச்சோடும் இரண்டறக் கலந்தவர். 

இவர் 1985ல் சாம்பல் பூத்த மேட்டில் எனும் கவிதைத் தொகுப்பையும், 1986ல் உரத்த இரவுகள் என்னும்  கவிதைத் தொகுப்பையும் 2016ல் ”ஏழு கடல் கன்னிகள்” என்ற ஏழு கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார். 

தமிழர்களின் பாரம்பரியமிக்க கலையாகத் திகழும் கூத்துக்கலையை, அதன் அடையாளைத்தை நிலை நிறுத்திக் காட்டிய ஊர்களில் ஒன்றாக  மெலிஞ்சிமுனை திகழ்கின்றது. அதன் முன்னோடிகளில் ஒருவரான இவரின் தந்தையார் கலாபூசணம் சைமன் பத்திநாதன் அவர்களின் பயிற்றுவிப்பால், தமயந்தி அவர்கள் ஏகலைவன் என்னும் கூத்துநூலை வெளியிட்டதுடன் நெறிப்படுத்தி மேடையேற்றி உள்ளார். 

தமயந்தி கடல்நீரில் படகோட்டி, பாய் விரித்து மீன் பிடித்ததோடு மட்டுமல்லாமல், கடல்நீரில் உட்புகுந்து அதன் அடித்தளத்தில் வாழும் கடலட்டை, சிங்கி, சங்கு என்பனவற்றை மூழ்கி முத்தெடுடுத்த அனுபவம் மிக்கவர். வட கிழக்கின் கடல்வள உயிரினங்களையும், கடல்தாவரங்கள் பற்றியும், அங்குள்ள கடல் நிலங்களான கண்டமேடு, களப்பு, சுரி, வாய்க்கால் பற்றியும் கரைநில வளங்களைப் பற்றியும் நீண்ட ஆய்வை மேற்கொண்டு அதற்கு ஏற்படப் போகும் எதிர்கால தீங்குகளை ஆதாரத்துடன் பதிவுகள் செய்து வருகின்றார். 

சூரியனைத் தின்றவர்கள்:  

வானக் கதிரோன் குளிக்கும் வண்ணக்கடல் - நம்மை வந்து வந்து கரை தொட்டுப் பாடுகின்ற கடல் ஏன் இன்று பொருமுகின்றது? 

வயிற்றுக்காய் வலை விரித்து வரவு பார்க்கும் ஏழை மீனவன் வலையறுக்கும் கூட்டத்தால் கடலில் வாழ்ந்த மரங்களும் தோப்புகளும் வேரறுந்து கரையொதுங்கி செத்துக்கிடப்பது ஏன்? 

நிலவுக்கே சென்றாலும் நினைவுகள் பாதாளத்தில் வணிக முதலாளிகளின் அதீத இலாபங்களுக்காய் இழுவைப்படகு கொண்டு கடலின் இருப்பாகக் கருக்கொண்ட பூவுடன் பிஞ்சான குஞ்சுகளை வஞ்சனையாக வழித்தெடுத்து நெஞ்சேற்றி அழிப்பதால், கடல் மருந்தறியாக் காயங்களாய் மடிப்பெட்டி நிறைய மூடி, மறைமுகமாய் வெளிப்படுத்துகின்றது. 

அணைகளின் கட்டுப்பாட்டில் ஆற்றுநீரடங்கும். ஆதிக்கத்தின் கட்டுப்பாட்டில் ஆழ்கடல் அடங்குவதா? பருவகாலத்தில் ஆழ் கடலிலிருந்து குடாக்கடல் நோக்கி வரும் கடல் உயிரிகளின் உற்பத்தி, பெருக்கத்திற்கு ஊறு செய்யும் தடுப்பரணாய் கடலட்டை வளர்ப்புத் திட்டம் தடையாவதையும், கழிவுகளையெல்லாம் கடலின் மீது கொட்டும் கொடுமையையும் அச்சப்படாமற் பேசுகின்றன இந்தக் கவிதைகள். 

தொடர் கவிதைகளாக:- 

இறுதியாகப் பேசவிடுங்கள், முண்டஞ்சுறா, அவ்ரோடித், சமாதிகளைச் சுமப்போர், மவுனத்தோடவள் காத்திருத்தல், அவளும் நானும் ஆனியும் வடகரையும், என 23கவிதைகளும் மூழ்கியெடுத்த முத்துக்களாய், கடலின் கண்ணீரைக் கசிந்து உரைக்கின்றன. 

இவைபற்றித் தனித்தனியே விளக்குவதானால் இந்தக் குறிப்பு நீண்டுவிடும் என்பதால் தவிர்த்து, வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன். 

“கடல் பேசுமா? 
பேசும். 
பாடுவாள் கவிர் ஆடுவாள் 
பூங்கறை சிதறச் சிரித்திடுவாள். 
அழுவாள் கரை கடந்து சிறு 
உமிரியும் ஊரியும்கூட வாழவென்று" 
............................ 
மெல்லமெல்லக் கவிராடியபடி  
நுகைப்பு எடுக்கின்றது. 

மாலை மறைந்து இரவு நெருங்குவதைச் செக்கல் என்றும், விடிவெள்ளி தோன்றி காலை மலர்வதை வெள்ளாப்பு என்றும், கரை நீளம் படுத்திருந்த பாறைமீது ஆழிமலர்கள் நிரம்பப்பெற்ற பூங்காவைச் சுற்றி சாட்டாமாறு மரங்கள் மதிலாக நிமிர்ந்து நின்றன என்றும் செறிவு மிக்க, நெய்தல் நிலம், தொழில் சார்ந்த வாழ்வியலின் இயல்புகளையும், நெய்தல் நிலத்துப் பண்பாட்டுச் சொற்களையும் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்துள்ளார்.

பேச்சால், எழுத்தால், பாட்டால், கூத்தால் சமூகத்தின் இன்னல்களை வெளிப்படுத்தும் தமயந்தியின் கவிதைகளின் ஒவ்வொரு வரியிலும் உள்ளத்தைத் தொடும் வகையில் உணர்வின் அழுத்தம் புலப்படுகின்றது. 

தமயந்தியின் சமூகப்பணி தொடர வாழ்த்துகிறேன்.  

சவிரிமுத்து மிக்கேல்தாஸ் 

01.10.2022


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக