சனி, 16 செப்டம்பர், 2023

கடலாள் 10 நாட்கள் -தமயந்தி-


 

கடலே, நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?

நானே என்னை
தின்று கொண்டிருக்கிறேன்.

சனி, 4 பிப்ரவரி, 2023

கொண்டல் -தமயந்தி-


2023 மாசி 20. 

இரண்டு வாரங்களுக்கு முன்னமே மாசிப்பனி மூசிப் பெய்யத் தொடங்கி விட்டிருந்தது. 

கடந்த மாரிமழையும், வாடைக்காற்றும் வெறுங்கையை விரித்து உதறிக்காட்டிவிட்டு கமுக்கமாய்க் கடந்துபோய் விட்டது. இந்த மாசிப்பனிக் கடலாவது பஞ்ச பாதகமில்லாமல் கைதூக்கிவிடும் என்ற நம்பிக்கையைக் கைவிடாமல் தக்க வைத்திருக்கும் கப்பித்தான் இருதயநாதர் கயிற்றுக்கொடியில் கட்டிக்கிடந்த ஆறு பழைய வழிவலைகளையும் எடுத்து முற்றத்தில் விரித்துப்போட்டுச் செப்பனிட்டுக் கொண்டிருந்தார். மூப்படைந்த கண்கள் ஒளிமங்கிப்போனதால் வலைகளைச் செப்பனிடுவதில் அவருக்கு சற்று சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும் அனுபவத்தில் பழுத்த அவரது கைவிரல்கள் கட்புலனின் வழிகாட்டல்களோ கட்டளைகளோ இல்லாமல் தம்பாட்டுக்கு வலைக் கயிறுகளைச் செப்பனிடுதலில் இயங்கிக்கொண்டிருந்தன. 


இந்த சித்திரை இருபத்தெட்டு வந்தால் கப்பித்தான் இருதயநாதருக்கு எண்பத்திமூன்று வயது. 

சங்குமுனைக் கரையோரக் கிராமத்தில் பதின்ம வயதில் கடலில் இறங்கிய தொழிலாளர்களில் இருதயநாதரும் ஒருவர். 

தீவகத்துக் கடற்பரப்பு முழுவதையும் உள்ளங்கையில் அள்ளிப் பருகும் திறன்போல் அனுபவங்களைக் கொண்டவர். இளவயதிலேயே தேக்குமரச்சிறகுகட்டித் தோணியும், மீன்கள் ஏற்ற இறக்கவென ஒரு சிற மரவள்ளமும் சொந்தமாக வைத்திருந்தார். முப்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கட்டிமேய்த்துத் தொழில் செய்த பெருங் கடலோடி. சங்குமுனைக் கிராமத்தில் மட்டுமல்லாது அயலட்டைக் கிராமங்களைப் பொறுத்தவரையும் பெரு மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தொழிலாளியாக, சம்மாட்டியாக, கூத்துக் கலைஞனாக விளங்கினார். 

அந்தக்காலத்தில் அண்ணாவி அந்தோனி கூத்துகளில் வரும் கரைத்துறைக் கப்பித்தான், கப்பல்க் கப்பித்தான் பாத்திரம் என்றால், அது இருதயநாதர்தான் என்று தீவகம் பூராவும் கூத்து மேடைகளில் கண்டுணர்ந்த சங்கதி. அதனால்த்தான் அவருடைய பெயரோடு "கப்பித்தான்" என்ற இணைப்பெயரும் சேர்ந்து கொண்டது.  

 

1995. 

"மேய்ப்பர்கள்தம் இடுப்பிலும் தோளிலுமாக 

சுமந்திருந்த மந்திரக்கோல்களின் பொருட்டு 

அச்சங் கொண்டிருந்த மந்தைகள்  

அவர்களது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து  

மாமிசமாகப் பின் தொடரலாயின.  

மீறிப் பேசவோ, மந்தைவிட்டு அகலவோ 

வேறேதும் முகாந்திரமில்லை. 

தப்பிப் பிழைத்தலுக்கு 

தவிர்க்க முடியாதாயிருந்தது 

மவுனித்தலெனும் சித்தம் மட்டுமே"  


யாழ்ப்பாணம் வெளியேறிக் கொண்டிருந்தது. 

தீவகக் கிராமங்களும்தான். அதுபோலவே சங்குமுனைக் கிராமமும் வன்னி நோக்கி இழுத்துச் செல்லப்பட்டது. சங்குமுனையை விட்டு சனங்கள் போனபின்னாலும் ஐந்தாறு குடும்பங்கள் மட்டும் ஊரைவிட்டுப் போகவில்லை. சுட்டாலும் செத்தாலும் இந்த மண்ணிலதான் என வெளியேறாமலிருந்த ஐந்தாறு குடும்பங்களில் இருதயநாதரும் மகிறம்மாவும்தான். 


அன்றிரவு தென்திசையிலிருந்து கரைவந்தேறிய கடற்படை சுட்டுக்கொண்டே ஊருக்குள் வந்தது. ஊரைவிட்டு வெளியேறாமலிருந்த ஐந்தாறு குடும்பங்களும் ஆலயத்துக்குள் தஞ்சமடைத்திருந்தனர். இரவிரவாய் ஊருக்குள் கேட்டுக்கொண்டிருந்த வெடிச்சத்தங்கள் அதிகாலையில் அமைதியானது. 


கப்பித்தான் ஆலயத்தைவிட்டு மெல்ல மெல்ல தெருவில் இறங்கினார். படைகள் போய்விட்டன. வீட்டுப்பக்கம் சென்று பார்த்தார். அம்மி பொழிந்ததுபோல் வீட்டுச் சுவரெல்லாம் குண்டுகள் கொத்தி வைத்திருந்தன. கடற்கரைக்குச் சென்று பார்த்தார். சிறகுகட்டித்தோணி சிதறிக் கிடந்தது. மரவள்ளம் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை. 


2009. மீண்டும் சங்குமுனைக் கிராமம் சனங்களால் நிரம்பப்பெற்றது. 

பதின்மச் சிறுசுகளாகவும், இளசுகளாகவும் வெளியேறியவர்கள் குடும்பங்களாகவும், குழந்தை குட்டிகளோடும் மீளவந்து சேர்ந்தார்கள். 

சங்குமுனைக்குள் மீண்டும் கூத்துச் சத்தங்கள் ஒலிக்கத் தொடங்கின. வேலிகளையே கண்டிராத சங்குமுனை வீடுவளவுகள் மதில்களால் சுற்றிக் கட்டப்பட்டன. மரவள்ளங்களும், சிறுதோணிகளும் இயந்திரப் படகுகளாக கரையெங்கும் அணிவகுத்தன. 

இருதயநாதரிடமோ அந்தச்சிறு தோணி மட்டுமே. அதுவே அவருக்குப் போதுமானதாகவும் இருந்தது. 

** 

"என்ன தொட்டப்பு, வழிவலை செம்மயாக்கிறாய்.... ராவைக்குப் பாடு போகப்போறியோணெ...? 

கேட்டுக்கொண்டே முற்றத்துப் பூவரசோடு சைக்கிளைச் சாய்த்து வைத்துவிட்டு மண்ணெண்ணை பரலோடு இறங்கி வந்தான் வெங்கிலாசு. 


"ஓமடாப்பன், இண்டைக்கு மாசி இருவது அமகாச இருட்டெல்லோ...., அதுதான் இந்த களத்தால ஒருபாடு போட்டுப் பாப்பமெண்டு நினச்சன்" 

ஆறாவது வலையைச் செப்பனிட்டபடி வெங்கிலாசுக்குப் பதில் சொன்னார் கப்பித்தான்.  


"தொட்டப்பு இதில பத்து லீற்றர் எண்ணை இருக்கு. உன்ர தோணிப் பேமிற்றுக்குத் இந்த மாசம் தரவேண்டிய இன்னும் இருவது லீற்றர் அடுத்த கிழமதான் வருமெண்டு தலைவர் சொன்னவர். காசு குடுத்திற்றன்... தொழில் வாய்க்கேக்க ஆறுதலாத் தந்தால் போதுமணை" 


"எனக்கெதுக்கு ராசா எண்ணைய...? என்னட்டயென்ன மோட்டர் கீட்டரா இருக்கு.... நீ எடுத்து உன்ர தொழிலுக்குக் கொண்டு போவன் மோனே" 


"தொட்டப்பு, சும்மாயிரணை. எண்ண கிடைக்காமல் அடிபடுகிறாங்கள் நீ என்னடாண்டால் வேணாமெண்டிறாய். விளக்கெரிக்க அடுப்புமூடயெண்டாலும் உதவுமெல்லோ... இருட்டுக்கயா கிடக்கப்போறியள் ரெண்டுபேரும்" சொல்லியபடியே எண்ணைப்பரலை வீட்டுவிறாந்தைக்குள் கொண்டுபோய் வைத்தான் வெங்கிலாசு. 


"ம்..... அதுகுஞ் சரிதான்" 


"எந்தக் கடலண தொட்டப்பு பாடு போடப்போறாய்?" 


"இதில பெரியபுட்டிக் குடாவுக்குள்ள போகலாமெண்டிருக்கிறன். இண்டைக்கு அமகாசஅவதிக்கு ஏதாவது ஏறுந்தானே...?" 


"எங்கயண தொட்டப்பு...., இப்ப அமகாசக் கடலுமில்ல, அட்டமிப் பாடுமில்ல.... களங்கள் முழுக்க அட்டைப்பட்டியளப் போட்டு அடைச்சு வச்சிருக்கிறாங்கள் வம்பில புறந்தவங்கள்.... வீணாக வருகுது வாயில...." 


"அப்பிடியெல்லாஞ் சொல்லாத மோனே....! கடலும் தொழிலும் தெரியாதது அதுகளின்ர குற்றமில்லக் கண்டியோ.... இருவது இருவத்தஞ்சு வருசமாப் பூட்டிக்கிடந்த கடல்...., தொழிலறியாச் சந்ததிதானே இப்ப இருக்குதுகள்.... ஆரோ காசு குடுக்கிறாங்களெண்டு கை நீட்டி வாங்கிப்போட்டுதுகள்..... தங்களால ஏண்டியதத்தானே செய்யுங்கள்...?" 


"என்ன தொட்டப்பு நீயே இப்பிடிச் சொல்லுறாய்....?" 


"வேறயென்னத்தச் சொல்ல...., நெஞ்சுக்குள்ள ரெத்தக்கண்ணீர்தான் விடயேலும்.... நீயும் நானும் சொன்னாப்போல கேட்டிடவா போறாங்கள். விடு மோனே..." 


"அப்ப இது எங்கபோய் முடியப்போகுது தொட்டப்பு...?" 


"எல்லாம் முடிஞ்சுபோம். வெறுங் கடல்லயென்ன உப்பா அள்ளேலும்... ஊரோட எல்லாரும் திரும்ப வன்னிப்பக்கம் எதாவது கூலிக்குப் போவேண்டியதுதான்..." 


"தொட்டப்பு.... இப்பிடி வேண்டா வெறுப்பாக் கதைக்காதேயணை. இதுக்கேதாவது செய்ய வேணுமணை. எல்லாந் தெரிஞ்சுகொண்டும் நீ இப்பிடிக் கதைக்கிறது சரியில்லத் தொட்டப்பு..." 


"மோனே.... இதொரு இனஅழிப்பு" 


"போராடுவந் தொட்டப்பு..." 


"சரி, சட்டெண்டு ஓடிப்போய்ப் போராடு நீ" 


**** 

இன்னுங் கொஞ்ச நேரத்தில் பொழுது மேற்குக் கடலுக்குள் முழுவதுமாக இறங்கிவிடும். காற்றமர்ந்து, அலைகளடங்கி கடல் மிகவும் அமைதியாகக் கிடந்தது. சிறிய மீன்குஞ்சு துள்ளினாலும் டொலக் டொலக் என்று கடல் பெரிதாகச் சத்தமிட்டது.  

பல்லதீவின் வடகிழக்கில் பெரியபிட்டி. அதன் குடாக்கடலில்தான் கப்பித்தான் இருதயநாதரின் இன்றைய பாடு. 


செக்கல்வானம் மெல்ல மெல்ல இருளத் தொடங்கவும் வலைகளைக் கடலில் இறக்கத் தொடங்கினார் கப்பித்தான். கடலில் மீன்களின் நட்மாட்டத்தை அவதானித்த கப்பித்தானின் கண்கள் பெருமிதத்தில் சிரித்தன. தனது கணிப்புத் தவறவில்லை என்பதும், கடலனுபவங்கள் மூப்பின் நிமித்தம் இன்னமும் தனது நினைவுகளிலிருந்து அகலவில்லை என்ற மிதப்பும் அவரை அணியத்தில் நெஞ்சு நிமிர்த்தி நிற்க வைத்தது. 


வலைகள் கடலில் இறக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே ஆங்காங்கே மீன்கள் வலையில் சிக்கி கடலின் மேற்தளத்தில் அலையடிக்கும் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.  

ஒன்று இரண்டு மூன்று என சில நிமிடங்களிலேயே ஆறு வலைகளையும் கடலில் இறக்கிவிட்டு, மடிப்பெட்டியில் சுற்றி வைத்திருந்த சுருட்டை எடுத்துப் பற்ற வைத்தார்.  


சிறிது நேரத்தில் வடக்கிலிருந்து இரண்டு இயந்திரப் படகுகள் வெளிச்சம் பாய்ச்சியபடி கப்பித்தானின் தோணியை நோக்கி வேகமாக வந்தன. கடற்படையாக இருக்குமோ என்று ஒருகணம் எண்ணி அச்சப்பட்டார். இருக்காது. இப்போ அச்சப்பட என்ன யுத்தமா நடக்கிறது....? வந்தால் வரட்டும் ஏதாவது கஞ்சாக் கடத்தல்காரரை கண்காணிப்பதாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டார். 


இரண்டு படகுகளும் கப்பித்தானின் தோணியின் இரு புறங்களிலும் வந்து அணைந்து கொண்டன. இரண்டு படகுகளிலுமிருந்து பெரிய டோர்ச் லைட்டுக்களின் வெளிச்சத்தைக் கப்பித்தானின் முகத்துக்கு நேராகப் பாய்ச்சினர். கண்கள் கூச்சம் தாங்கமுடியாமல் இரண்டு கைகளாலும் முகத்தை மறைத்துக் கொண்டார். 

"ஆர்ரா பு..... இந்தக் கடலுக்க வரச்சொன்னது.....?" படகில் வந்தவர்களில் ஒருத்தன் பெரிய சத்தமாகக் கத்தினான். இன்னொருத்தன் கப்பித்தானின் தோணியில் இரும்புக்கம்பியால் ஓங்கி அடித்தான். தோணி உடைந்து விடுமாப்போல சத்தத்துடன் சிலகணம் அதிர்ந்தது.  


"இந்தப் பக்கம் வரப்படாதெண்டு தெரியாதாடா கிழட்டுப் பு....?" கேட்டபடியே மீண்டும் அவன் இரும்புக் கம்பியால் தோணியில் அடித்தான். 

இது கடற்படையில்லை என்பது கப்பித்தானுக்கு விளங்கிவிட்டது. சங்குமுனையைச் சேர்ந்தவர்கள்தான் சந்தேகமே இல்லை. அதுவும் எல்லாமே இனபந்துக்களின் இளைய தலைமுறைகள்தான்.  ஒவ்வொரு படகிலும் நான்கு நான்கு பேர் இருந்தனர். அவர்களோடு கூடவே போதையும் இருந்தது. அனைவரும் இளவட்டங்கள். 


"தம்பிமாரே..., என்ர கடல்ல தொழில்ச் செய்யாமல் வேறயெங்க ராசா நான் போறது...? கப்பித்தான் சொல்லி முடிப்பதற்குள் வலதுபக்க இயந்திரப்படகின் தளத்தில் நின்றவன் கப்பித்தானின் நெஞ்சில் காலால் எட்டி உதைத்தான். 


"உன்ர கடலோ...., கிழப்பிப்பார்ரா கிழடா கவட்டுக்க கிடக்கும் உன்ர கடல். இப்ப இந்தக் கடலெல்லாம் அட்டப்பட்டிக்கு லைசன்ஸ் எடுத்து வச்சிருக்கிறம். இந்தப் பக்கம் ஒருத்தரும் இனிமேல்ப்பட்டு வரப்பிடாது தெரியுமா?"  இடதுபக்கப் படகில் நின்ற ஒரு மெல்லிய சுள்ளான் கீச்சுக்குரலில் சொன்னான். 


"இனிமேல்ப்பட்டு இந்தப் பக்கம் வந்தியெண்டால் கண்ணாவுக்குள வெட்டித்தாழ்ப்பம் கிழடா" இரும்புக்கம்பியோடு நின்றவன் கத்தினான். 


இரண்டு படகுகளும் கப்பித்தானின் வலைகள் கிடந்த பக்கம் போயின. வலைகளை இழுத்து கத்திகள் கொண்டு மாறிமாறி அறுத்தெறிந்தனர். அவர்கள் அறுத்தெறியும் வலைகளில் வெள்ளிக்காசுகள்போல் மீன்கள் பளிச்சிட்டதை அவர்கள் பாய்ச்சிய வெளிச்சத்தில் கண்டு கலங்கிப்போனார் கப்பித்தான் இருதயநாதர். 


***** 


"தொட்டப்பு.... பொலிசில போய் இன்றி போடுவம் எழும்பி வாணெ...." வெங்கிலாசு திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டேயிருந்தான். கப்பித்தானோ எதையும் காதில் வாங்காதவராய் சர்வாங்கமும் இறுகிப்போய் முற்றத்தில் இருந்தார். 


"அந்தப் பூலுவத்துக்குப் புறந்தவங்கள் அட்டப்பட்டிக் காவலெண்டு கடல்ல அட்டாளக்கொட்டில் போட்டு நாளாந்தம் தண்ணியும் கஞ்சாவுமா அடிச்சுப்போட்டுக் கிடக்கிறாங்கள் தொட்டப்பு. பாவப்பட சனங்களின்ர களங்கண்டிப் பட்டியளையெல்லாம் வழிச்சுத்துடச்சு காஸ்சிலிண்டர் வச்சு காச்சித் தின்னாறாங்கள் தொட்டப்பு. இவங்களுக்கொரு பாடம் படிப்பிப்பம் எழும்பணை...." 


"வேணாம் ராசா விடு. சுத்திச்சுத்திப் பாத்தா எல்லாஞ் சொந்தங்கள்தானேயப்பு. விடடா" 


"நீ சரிவர மாட்டாயணை....." சினந்துகொண்டபடியே வெங்கிலாசு சைக்கிளை எடுத்துக்கொண்டு போய்விட்டான். 


கப்பித்தான் அப்படியே இறுகிப்போனவராய் அசைவற்று முற்றத்திலேயே இருந்தார். தனது நெஞ்சில் அந்த இளைஞன் காலால் உதைத்ததுகூட அவருக்கு வலிக்கவில்லை ஆனால் இவர்கள் கடலின் கருமடியை உதைத்தும், கீறிக் கிழித்தும் செய்யும் அட்டூழியங்கள்தான் பெருவலியெடுத்தது. 


அகலத் திறந்துகிடந்த வாசற்கதவு வழியாக நேற்று வெங்கிலாசு கொண்டுவந்து விறாந்தையில் வைத்த மண்ணெண்ணை பரல் கப்பித்தானின் கண்களில் பட்டது. ஏதோ எண்ணங் கொண்டவராக எழுந்து கோடிப்புறம் சென்றவர் மடிவலைக்குச் சாயமிடும் அண்டாப் பானையை எடுத்து முற்றத்தில் கொண்டுவந்து வைத்தார். வீட்டு விறாந்தையில் இருந்த மண்ணெண்ணை பரலை எடுத்துவந்து மூடியைத் திறந்து அண்டாவில் முழுவதையும் ஊற்றினார். பின்வளவில் சிதறிக்கிடந்த சிறகுகட்டித் தோணியின் பலகைத்துண்டங்களை எடுத்துவந்து அண்டாவுக்குள் போட்டார். எண்ணையில் மிதந்து ஊறியது சிறகுகட்டித் துண்டங்கள். 


சாமத்திற்கு சற்றுக் கிட்டவாக விழித்தபடி விறாந்தையில் உட்காந்திருந்த கப்பித்தானுக்கு மெல்லியதாக வாயூறத் தொடங்கியது. குதிக்கால் வியர்த்துக் கசிந்தது. நம்புதற்கு முடியாமலிருந்தது அவருக்கு. இப்போ எப்படிக் கொண்டல்காற்றும் மழையும் சேர்ந்து வரமுடியும் என்ற குழப்பம். மெல்ல எழுந்து வெளியே சென்று வானத்தை அண்ணார்ந்து பார்த்தார். ஏற்கனவே அமாவாசை கழிந்த இரண்டாம் நாளாகையால் இருளான வானம் இன்னும் கருமை கட்டிக்கிடந்தது. கிழக்குவானத்தில் கருமுகில்கள் கும்பல்கும்பலாக அடைத்து நின்றன. கப்பித்தானுக்கு வாயூறல் அதிகரித்தது. குதிக்கால்களிரண்டும் கசிந்து முற்றிலும் ஈரமாகிவிட்டன. ஆமாம் இன்னும் சற்று நேரத்தில் கொண்டலிடியும் பெருமழையும் வரப்போவதை உணர்ந்து கொண்டார். அத்தோடு அமாவாசை அவதியின்  வெள்ளப்பெருக்கும் அதிகரிப்பதால் கடல் கொந்தளிக்கப் பார்க்குமே என எண்ணிக் கொண்டதோடு, யாராவது கடலுக்குப் போயிருந்தால் என்னவாகும் என்ற அச்சத்தினாலும் உடலம் நடுங்கத் தொடங்கினார்.   


சில கணங்கள்தான் கழிந்திருக்கும். வலிந்த சண்டைக்கு எடுக்கப்பட்ட திக்விஜயப் படையணிபோல் கொண்டல்க்காற்றும், கொடிமின்னலும், இடிமுழக்கமும் எழுந்ததோடு பெருமழையும் கொட்டத் தொடங்கியது. வீட்டுக்கூரையைப் பிய்த்தெறிவதுபோல் உலுப்பியெடுத்தது கொண்டல். 


****** 


இரவு அடித்துப் பெய்த பெருமழையின் வெள்ளம் ஓடிச்சென்று குளம் குட்டைகள், கடலைச் சேர்வதற்கான வழித்தடங்களற்று மதில்களால் சூழப்பட்ட சங்குமுனைக் கிராமத்தையே சூழ்ந்து நின்றது. விடிந்தும் விடியாததுமாய் சங்குமுனைச் சனங்கள் பூராவும் கடற்கரையை நோக்கி வெள்ளத்துக்குள்ளால் ஓடிக் கொண்டிருந்தார்கள். பொலிஸ் வாகனம் உட்பட பல வாகனங்களும் கடற்கரையை நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. 


அவசர அவசரமாக வெங்கிலாஸ் சைக்கிள் இல்லாமல், சாறத்தை நெஞ்சுவரை தூக்கிக் கட்டிக்கொண்டு, ஜட்டியோடு வெள்ளத்தில்  உருண்டோடி வந்தான். 

"தொட்டப்பு! எணேய் தொட்டப்பு..... அட்டைப்பட்டியெல்லாம் புசலில அள்ளுண்டு போச்சுதாம். ஒரு தடிகூட மிச்சமில்லையாம். அட்டைக்கொட்டிலுக்குமேல மின்னலிடி விழுந்ததாம் எண்டும், சமையலுக்கு அவங்கள் வச்சிருந்த காஸ்சிலிண்டர் வெடிச்சதாமெண்டும் ஊரெல்லாம் கதையடிபடுகுது. என்ன ஏதெண்டு சரியா ஒரு விளப்பமுமில்லத் தொட்டப்பு.... பாவமணை பொடியள்... எல்லாரும் இளந்தாரிப் பொடியங்கள். வாழ்ற வயசு..... துறைக்குப்போய் என்னெண்டு பாத்திற்று வாறனணை...." சொல்லிவிட்டு வெங்கிலாஸ் சாறத்தைத் தூக்கித் தலையில் கட்டிக்கொண்டு வெள்ளத்துக்குள்ளால் கடற்கரையை நோக்கி ஓடிச் சென்றான். 


இருதயநாதர் வாசற்படியில் நின்றபடியே தாழ்வாரத்தைப் பார்த்தார். சாயப்பானை பத்து லீட்டர் மண்ணெண்ணையோடும் சிறகுகட்டிப் பலகைத் துண்டங்களோடும் மழைவெள்ளத்தில் மிதந்துகொண்டு கிடந்தது.  


"போய்ச்சேருகிற காலத்தில ஏன்தான் இவனுக்கு இப்பிடிக்கொந்த பாவகாரியமெண்டு நினைச்சியா ஆழியாச்சி...?" 

கடலை நினைந்து தனக்குள் உறுத்தலோடு உருகிக்கொண்டார் கப்பித்தான் இருதயநாதர். 


மெல்ல மெல்ல வடக்கிலிருந்து ஊர்ந்துவந்த வாடைக்காற்று வீட்டு வாசற்படியில் நின்றிருந்த கப்பித்தான் இருதயநாதரின் கன்னங்களைத் தடவியபடி அதுவும் சங்குமுனைக் கடற்கரையை நோக்கிப் பயணித்தது. 


முற்றும். 

நன்றி: அபத்தம் (மாசி இதழ்)

Apaththam-second-issue1.pdf (thayagam.com)

வியாழன், 20 அக்டோபர், 2022

கடல் அட்டை வளர்ப்பும், யாழ்ப்பாண தீவக கடல்களின் அரசியலும், சூழலியலும்

ஏ.எம். றியாஸ் அகமட் (அம்ரிதா ஏயெம்)

Senior lecturer at South Eastern University of Sri Lanka

- என்னுரை - பகுதி 1

இந்த வருடம் அக்கரைப்பற்று புத்தகக் காட்சி – 2022 நிகழ்விற்காக நோர்வே உயிர்மெய் பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட ”கடல் அட்டை வளர்ப்பும், யாழ்ப்பாண தீவக கடல்களின் அரசியலும், சூழலியலும்” என்ற நுாலை காலம் சென்ற எனது உம்மாவிற்கு சமர்ப்பணம் செய்திருக்கின்றேன்.  

வியாழன், 13 அக்டோபர், 2022

நீலவானம் தொட்டு நீலம் பூத்த கடல்

கூத்துக்கலைச்  செம்மல் அண்ணாவி  

சவிரிமுத்து மிக்கேல்தாஸ் 


உலகை உய்விக்கும் உயிர்நாடி ஐம்பூதங்களாகும். 
நீர், நிலம், காற்று மாசுபடும் போது அவை பொங்கி எழுகின்றன. 
“முந்நீர்” என்பது கடலுக்கான பெயரைக் கொண்டது. 
இதனை புறநானூறு:- 

“முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல 
செம்மீன் இமைக்கும் மாசு விசும்பின் 
உச்சநிலை நின்ற உலவு மதி கண்டு....” 

என விளம்புவது, மீனவர் படகின் விளக்காக வான் நடுவே செவ்வாய் மீன் விளங்குகின்றமையும், உச்சி மீது தோன்றும் முழு நிலவைக் கண்டு மயில்கள் ஆடுவதும், இயற்கையின் வழி நடத்தலைக் குறிப்பதாலாகும். 

முத்து பவளமென பல வளம் கொண்ட கடலன்னையை நோக்கி ஆறுகள் பலவாய் நிலமோடியும், மனித ஊறுகள் பலவாய் கடலில் கலப்பதும், உடல் வாட்டி உழைப்பவர்கள் சிந்திய வியர்வையும் கண்ணீரும் கடல் உப்பானதன் காரணமாக இருக்கலாம். 

தமயந்தி (சைமன் விமலராஜன்) கடல் வாழ்வோடும், கவிதையின் கனல் வீச்சோடும் இரண்டறக் கலந்தவர். 

இவர் 1985ல் சாம்பல் பூத்த மேட்டில் எனும் கவிதைத் தொகுப்பையும், 1986ல் உரத்த இரவுகள் என்னும்  கவிதைத் தொகுப்பையும் 2016ல் ”ஏழு கடல் கன்னிகள்” என்ற ஏழு கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார். 

தமிழர்களின் பாரம்பரியமிக்க கலையாகத் திகழும் கூத்துக்கலையை, அதன் அடையாளைத்தை நிலை நிறுத்திக் காட்டிய ஊர்களில் ஒன்றாக  மெலிஞ்சிமுனை திகழ்கின்றது. அதன் முன்னோடிகளில் ஒருவரான இவரின் தந்தையார் கலாபூசணம் சைமன் பத்திநாதன் அவர்களின் பயிற்றுவிப்பால், தமயந்தி அவர்கள் ஏகலைவன் என்னும் கூத்துநூலை வெளியிட்டதுடன் நெறிப்படுத்தி மேடையேற்றி உள்ளார். 

தமயந்தி கடல்நீரில் படகோட்டி, பாய் விரித்து மீன் பிடித்ததோடு மட்டுமல்லாமல், கடல்நீரில் உட்புகுந்து அதன் அடித்தளத்தில் வாழும் கடலட்டை, சிங்கி, சங்கு என்பனவற்றை மூழ்கி முத்தெடுடுத்த அனுபவம் மிக்கவர். வட கிழக்கின் கடல்வள உயிரினங்களையும், கடல்தாவரங்கள் பற்றியும், அங்குள்ள கடல் நிலங்களான கண்டமேடு, களப்பு, சுரி, வாய்க்கால் பற்றியும் கரைநில வளங்களைப் பற்றியும் நீண்ட ஆய்வை மேற்கொண்டு அதற்கு ஏற்படப் போகும் எதிர்கால தீங்குகளை ஆதாரத்துடன் பதிவுகள் செய்து வருகின்றார். 

சூரியனைத் தின்றவர்கள்:  

வானக் கதிரோன் குளிக்கும் வண்ணக்கடல் - நம்மை வந்து வந்து கரை தொட்டுப் பாடுகின்ற கடல் ஏன் இன்று பொருமுகின்றது? 

வயிற்றுக்காய் வலை விரித்து வரவு பார்க்கும் ஏழை மீனவன் வலையறுக்கும் கூட்டத்தால் கடலில் வாழ்ந்த மரங்களும் தோப்புகளும் வேரறுந்து கரையொதுங்கி செத்துக்கிடப்பது ஏன்? 

நிலவுக்கே சென்றாலும் நினைவுகள் பாதாளத்தில் வணிக முதலாளிகளின் அதீத இலாபங்களுக்காய் இழுவைப்படகு கொண்டு கடலின் இருப்பாகக் கருக்கொண்ட பூவுடன் பிஞ்சான குஞ்சுகளை வஞ்சனையாக வழித்தெடுத்து நெஞ்சேற்றி அழிப்பதால், கடல் மருந்தறியாக் காயங்களாய் மடிப்பெட்டி நிறைய மூடி, மறைமுகமாய் வெளிப்படுத்துகின்றது. 

அணைகளின் கட்டுப்பாட்டில் ஆற்றுநீரடங்கும். ஆதிக்கத்தின் கட்டுப்பாட்டில் ஆழ்கடல் அடங்குவதா? பருவகாலத்தில் ஆழ் கடலிலிருந்து குடாக்கடல் நோக்கி வரும் கடல் உயிரிகளின் உற்பத்தி, பெருக்கத்திற்கு ஊறு செய்யும் தடுப்பரணாய் கடலட்டை வளர்ப்புத் திட்டம் தடையாவதையும், கழிவுகளையெல்லாம் கடலின் மீது கொட்டும் கொடுமையையும் அச்சப்படாமற் பேசுகின்றன இந்தக் கவிதைகள். 

தொடர் கவிதைகளாக:- 

இறுதியாகப் பேசவிடுங்கள், முண்டஞ்சுறா, அவ்ரோடித், சமாதிகளைச் சுமப்போர், மவுனத்தோடவள் காத்திருத்தல், அவளும் நானும் ஆனியும் வடகரையும், என 23கவிதைகளும் மூழ்கியெடுத்த முத்துக்களாய், கடலின் கண்ணீரைக் கசிந்து உரைக்கின்றன. 

இவைபற்றித் தனித்தனியே விளக்குவதானால் இந்தக் குறிப்பு நீண்டுவிடும் என்பதால் தவிர்த்து, வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன். 

“கடல் பேசுமா? 
பேசும். 
பாடுவாள் கவிர் ஆடுவாள் 
பூங்கறை சிதறச் சிரித்திடுவாள். 
அழுவாள் கரை கடந்து சிறு 
உமிரியும் ஊரியும்கூட வாழவென்று" 
............................ 
மெல்லமெல்லக் கவிராடியபடி  
நுகைப்பு எடுக்கின்றது. 

மாலை மறைந்து இரவு நெருங்குவதைச் செக்கல் என்றும், விடிவெள்ளி தோன்றி காலை மலர்வதை வெள்ளாப்பு என்றும், கரை நீளம் படுத்திருந்த பாறைமீது ஆழிமலர்கள் நிரம்பப்பெற்ற பூங்காவைச் சுற்றி சாட்டாமாறு மரங்கள் மதிலாக நிமிர்ந்து நின்றன என்றும் செறிவு மிக்க, நெய்தல் நிலம், தொழில் சார்ந்த வாழ்வியலின் இயல்புகளையும், நெய்தல் நிலத்துப் பண்பாட்டுச் சொற்களையும் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்துள்ளார்.

பேச்சால், எழுத்தால், பாட்டால், கூத்தால் சமூகத்தின் இன்னல்களை வெளிப்படுத்தும் தமயந்தியின் கவிதைகளின் ஒவ்வொரு வரியிலும் உள்ளத்தைத் தொடும் வகையில் உணர்வின் அழுத்தம் புலப்படுகின்றது. 

தமயந்தியின் சமூகப்பணி தொடர வாழ்த்துகிறேன்.  

சவிரிமுத்து மிக்கேல்தாஸ் 

01.10.2022


திங்கள், 10 அக்டோபர், 2022

சூரியனைத் தின்றவர்கள் - கரைமணலில் சில வரிகள்...

 கவிஞர் ஹம்சத்வனி`யின் முன்னுரை 



கூத்து, நாடக, கலைஞனாக, கவிஞனாக, ஒளிப்படக் கலைஞனாக, சிறுகதையாளனாக புலத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் அறியப்பட்ட தமயந்தியின் இன்னுமொரு முகம் எனக்கு மிகவும் நெருக்கமானது.

கடல்சார் வாழ்க்கை, கடலின் நலம், கடலின் எதிர்காலம் என்பன பற்றி அவன் கொண்டிருக்கும் மிதமான பற்றும் ஆதங்கமும் ஆழமான அறிவும் நிறைந்த முகமே அதுவாகும். 

கவிதை நாடகம், சிறுகதை என பல நூல்களின் படைப்பாளி என்ற பெருமையும் தமயந்திக்கு உண்டு.

தமயந்தியின் "சூரியனைத் தின்றவர்கள்" என்ற இந்தத் தொகுப்பை படித்து அதன் உள்பொருளை என் முன்னறிவுக்கு எட்டியவரையில் கோடிட்டுக் காட்டவும், கிடைத்த அரிய வாழ்கணங்களுக்கும் தமயந்தியின் அன்புக்கும் பாசத்துக்கும் நான் நன்றியுடையவன்.


சூரியனை தின்றவர்களில் உள்ள பெரும்பான்மையான கவிதைகள் கடலையும் கடல்சார் வாழ்வையும், கடலின் சீரழிவுகளையும், கடல் கொள்ளை போவதையும் உணர்வும் உணர்ச்சியும் பொங்க பேசுகின்றன.

ஒரு கடல்சார் வாழ்வியலின் பின்புலத்தில் ஊறிய ஒரு கடல்மனிதன் தமயந்தியாலேதான் இவ்வாறான கடலின் ஈரமும் இரத்தமும் உப்பும் நிறைந்த கவிதாகடல்மொழியில் எழுதமுடியும்.  ஈழத்து கவிதைகளில் கடல் பற்றியதான கவிதைத்தொகுதி இதுவே முதலும் முக்கியமானதும் எனக் கருதுகிறேன். 


கரைகளில் இருந்து கடலைப் பார்த்த சமூகத்தினரை, கவிஞர்களை கடலில் இருந்து நிலத்தையும் வானையும் இந்த முழு உலகையும் அது எதிர்நோக்கும் பேரவலத்தையும் பேரழகையும் பார்க்க கற்றுக் கொடுப்பதற்கு எமது கைகளைப் பற்றி அழைத்துச் செல்கின்றன சூரியனைத் தின்றவர்கள். 


கவிதைகளைப் படிக்கப் படிக்க தீவகத்தின் பல நிலப்பிரதேசங்களும், கடற்பகுதிகளும் கடல்வாழ் மனிதரின் சொல்லாடல்களும் அவர்கள் சார்ந்த மதநம்பிக்கை, நம்பிக்கையின்மை என்பவையும் சமூக அரசியல் பொருளாதார சூனியக்காறர்களும் வெளிச்சம் போட்டு காட்டப்படுவதை உணர்வீர்கள்.


இறுதியாக பேசவிடுங்கள், முண்டஞ்சுறா, அவளும் நானும் என்ற கவிதைகளை மீளமீள வாசிக்கவும் படிக்கவும் என்னை நானே தூண்டிக்கொண்டேன்.

கடல் எதிர்நோக்கும் எண்ணிலடங்கா அவலங்கள் ஒரு உலகப் பேரழிவின் தொடக்கம். 

ஒருபகுதி நிலத்தில் நடக்கும் அவலங்களைப் பேசும் உலகத்தீரே! மூன்று பகுதி கடலின் அவலத்தையும் பேசுங்கள் என தமயந்தியின் கவிதைகள் முகத்தில் அறைந்து உணர்த்துகின்றன. 


தமயந்தியின் கவிதா மொழி புதியதாகிறது.

கடலுக்குள் மருந்தறியாக் காயங்கள், ஆறுகள் பெருக்கெடுத்து நீர்கொள்ளாப் பெருங்கடல், இவை போன்ற சொல்லாடல்கள் என்னையும் என் வாசிப்பையும் பல கணங்களுக்கு கட்டிப்போட்டிருக்கின்றன.


இத்தொகுதி கடல்பற்றிய அக்கறையைத் தூண்டும் என நம்புகின்றேன்.

ஆயிரம் மின்மினிகளை புதைத்தது போல் கவிராடும் கடலாளைப்போல் இக்கவிதைகள் ஒளிரும். 

சூரியனைத் தின்றவர்களை நிதானமாக நிறுத்தி நிறுத்தி வாசியுங்கள் படியுங்கள்.

கடலாள் மேலுள்ள காதல் பெருகட்டும். 

கடல் நலம் பேணுக!

அவள் மிரண்டு சதிராடினால் எதுவுமே தாங்காது.


அன்பு

தமிழ்ச்செல்வன் (ஹம்சத்வனி)

மொன்றியல்  கனடா 26.09.2022

புதன், 22 டிசம்பர், 2021

கடலோடியின் நினைவுக் குறிப்புகளினூடான காற்றில் உப்புக் கரிக்கவில்லை

 தமயந்தியின் "ஏழு கடல்கன்னிகள்" 

-கருணாகரன்-

கடினமான கணக்குகளை அறிந்து கொண்டும் அந்தக் கணக்குகளிற்குள் ஊடுருவி, கடந்து சென்ற படைப்பின் உயர்வான கவர்ச்சியாக 'அதற்குள் அவராகவே வாழ்வதால்' சாத்தியம் ஆக்கப்பட்டுள்ளது.


தமயந்தியின் கதைகள் இயல்பான நேரடித் தன்மை கொண்டவை. இக் கதைகளின் பின்னணியில் இயல்பான கடல்சார் வாழ்க்கை கண்ணோட்டமும், ஈழப்போராட்ட மனிதம் சார் ஏக்கங்களும் அக்கம்பக்கமாக நிறுத்தப்படுகின்றது. கதைகள் அனுபவத்தையும், உணர்வு நிலைகளையும் மட்டுமே நம்பியிருக்கின்றன. உண்மை யின் யதார்தங்கள் ஆங்காங்கே எமது நனவிலி மனங்களை கட்டுடைத்து வெள்ளம்போல் நுரைதிரள உப்புக் கலந்த வாசனையோடு எம் நாசிகளை தழுவிச் சொல்கின்றன. 


சனி, 14 செப்டம்பர், 2019

மக்களைச் சுடும் பிரச்சனைகளைப் பேச வைக்க வேண்டும்!

சமவுரிமை இயக்கம் "போராட்டம்" பத்திரிகைக்காக
தமயந்தியுடன் ஒரு நேர்காணல்


முன்னாள் போராளி. தமயந்தி என்ற பெயரில் அறியப்பட்ட கவிஞன், புகைப்பட ஓவியன். தற்போது நோர்வேயின் ஓலசுண்ட நகரில் வசித்து வருகிறார். தீவகத்தின் மெலிஞ்சிமுனைக் கிராமத்தைச் சேர்த்த இவர் தனது இளமைக் காலத்திலேயே தேர்ச்சி பெற்ற தென்மோடிக் கூத்துக் கலைஞர். ஆனந்தசீலன், தாவீது கொலியாத், ராஜகுமாரி, புனிதசெபஸ்தியார், மந்திரிகுமரன் போன்ற கூத்துகளில் இவரின் பாட்டும் நடிப்பும் இவரை ஒரு கவனிக்கத் தக்க கூத்துக் கலைஞனாக வெளிக்காட்டியது.

யுத்தம் காரணமாகவும், சமூக அக்கறையற்ற போக்காலும் அழிவுற்று வரும் இலங்கையின் பராம்பரிய கலைகளில் ஒன்றான  தென்மோடிக் கூத்துக் கலைக்கு புத்துயிர்ப்புக் கொடுப்பதுடன், நவீன மயப்படுத்துவதிலும் முன்நிலைச் சக்தியாக செயற்பட்டு வருகிறார் அண்ணாவி சைமன் விமலராஜன் .
சமவுரிமை இயக்கத்தால் ஐப்பசி மாதம் பாரிஸ் நகரில் நடாத்தப்படவிருக்கும் இனமத ஐக்கியத்தை வலியுறுத்தும் அனைத்து இனக் கலைவிழாவில் இவரால் இயற்றப் பெற்ற ஏகலைவன் கூத்து மேடை ஏற்றப்படவுள்ளது. இதையொட்டி போராட்டம் பத்திரிகை அவருடன் உரையாடிய சில மணிகளின் தொகுப்பு.

செவ்வாய், 10 செப்டம்பர், 2019

"ஏகலைவன்" மீளுருவாக்கம்


தெணியான்
07/06/2015 

"நான் அறிந்தவரையில் இதுவரை வெளிவந்த பிரதிகளுள் தமயந்தியின் பிரதி மிக வித்தியாசமானது. ஆழ்ந்த சமூக நோக்குடையது. இதற்கு முன்னர் வெளி வந்திருக்கும் பிரதிகள் ஏதோ வகையில் ஏகலைவன் துரோணரின் துரோகச் செயலுக்குப் பலியாவதையே எடுத்துப் பேசுகின்றன. அதேசமயம் முற்போக்கான சில சிந்தனையுடன் குறிப்பிட்ட சில மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. ஆனால் தமயந்தியின் பிரதி காலத்துக்கும், சமூக மாற்றத்துக்கும் தகுந்த வகையில் ஒரு பாய்ச்சலாக மீளுருவாக்கம் செய்யப் பெற்றுள்ளது".


வெள்ளி, 6 செப்டம்பர், 2019

நீளும் துயரத்தில் ஒரு வரலாற்றுப் பதிவு

ஏகலைவன்! 

-செல்வம் அருளானந்தம்- 


சென்ற மாதத்தில் ஒரு நாள் "நாவாய் ஒளி" என்கின்ற ஒரு கலை நிகழ்வுக்கு செல்கின்ற வாய்ப்புக் கிடைத்தது.


செவ்வாய், 26 மார்ச், 2019

காசு கண்ணனின் ஆள்காட்டி அரசியல் -நீலகண்டன்-


"தமிழ்ச் சிறுபத்திரிக்கை தளத்தில் ‘காலச்சுவடு’ என்கிற பார்ப்பனப் பத்திரிக்கை, இலக்கியத்தில் இந்துத்துவத்தைப் பிரச்சாரம் செய்வதற்கென்றே கடந்த காலங்களில் இயக்கி வந்தது போதாமல், இப்போது ‘மத சார்பின்மை ஒரு மறு ஆய்வு’ என்கிற பெயரில் இந்துத்துவத்தை எதிர்ப்பதுபோல் காட்டிக்கொண்டு நரித்தனமாக ஆதரிக்கும் வகையில் இஸ்லாமியர்களை, இஸ்லாமிய ஆதரவாளர்களைக் கொச்சைப்படுத்தியும், உளவுத் துறைக்கு ஆள்காட்டி வேலை செய்யும் நோக்கிலும் நேரடியாகக் களத்தில் குதித்துள்ளது." 
அன்று சொன்னதையே இன்று மீளவும் சொல்கிறோம். 

//‘ஒவ்வொரு இஸ்லாமியப் பெண்ணின் யோனியிலும் இந்துக்களின் விந்தை நிரப்பி புனிதப்படுத்து// என்கிற குரு கோல்வால்க்கரின் பயங்கரவாத அரசியலுக்கு முண்டு கொடுக்கும் காலச்சுவடு போன்ற போக்கிரிகளிடத்தே மனமாற்றமோ, அரசியல் மாற்றமோ வரும் என்று நாம் எப்போதும் நம்பவே மாட்டோம்.
அன்று சொன்னதையே இன்று மீளவும் சொல்கிறோம்



வெள்ளி, 22 மார்ச், 2019

தோழர் டானியலின் தணிக்கை செய்யப்பட்ட கட்டுரையும் இன்று எழும் கேள்விகளும்


உயிர்மெய் இதழ்-4 (2007) பிரசுரமான கட்டுரை

இங்கு பிரசுரமாகும் தோழர் டானியலின் கட்டுரை 1979ல் யாழ்ப்பாணத்தில் தீண்டாமை எதிர்ப்பு வெகுஜன இயக்க மலருக்கென எழுதப்பட்டு அப்போதிருந்த தணிக்கைச் சட்டத்தின் காரணமாக பிரசுரம் தடைசெய்யப் பட்டதால் குறிப்பிட்ட மலரில் பிரசுரமாகவில்லை. இக்கட்டுரையின் ஒரு பிரதி 1982இல் நான் டோக்கியோவில் வாழ்ந்து வந்தபோது யாழில் இருந்துவந்த ஒரு நண்பருக்கூடாக எனக்குக் கிடைத்தது. அன்றிலிருந்து கடந்த 25வருடங்களாக இந்தக் கட்டுரைப் பிரதியும் என்னுடன் பல இட மாற்றங்களை அனுபவித்துள்ளது. எனக்கு ஒரு பிரதியைக் கிடைக்கச் செய்ததுபோல வேறு யாருக்கும் டானியல் இக் கட்டுரையின் பிரதிகளை அனுப்பியிருப்பார். ஆகவே இந்தக் கட்டுரை ஏற்கனவே பிரசுரிக்கப் பட்டிருக்கலாம். அப்படியிருப்பினும் இதனை மீண்டும் பிரசுரிப்பதில் பயனுண்டு என நம்புகிறேன்.

இந்தக் கட்டுரையில் யாழ்ப்பாணத்தில் சாதியத்திற்கெதிரான போராட்டங்களின் வரலாற்றுப் பின்னணியைத் தெளிவாக்கி 1960களில் இடம்பெற்ற வெகுஜனப் போராட்டத்தின் முக்கியத்துவம் பற்றி ஆயப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் சமூகங்களில் யாழ்ப்பாணத்திலேயே சாதியமைப்பு மிகவும் இறுக்கமான நிறுவன மயமாக்கலைக் கொண்டிருந்தது. சைவவேளாள உயர் வர்க்கத்தினால் பிராமணிய மயப்படுத்தப்பட்ட யாழ் சமூக அமைப்பில் தீண்டாமையும் சாதிக் கொடுமைகளும் சைவ வேளாளியக் கருத்தியலினாலும் பல்வேறு சடங்குகளினாலும் நியாயப் படுத்தப் பட்டன. இத்தகைய ஒரு சமூக அமைப்பில் சாதியத்திற்கெதிரான போராட்டங்களின்றித் தாழ்த்தப்பட்போர் தமது சுதந்திரத்தை மனித கவுரவத்தைப் பெற முடியாதென்பது அடிப்படை உண்மை. கிறிஸ்துவ பாடசாலைகளின் வருகை யாழ் சமூகத்தில் சாதியத்தை கேள்விக்குள்ளாக்கி எதிர்புக்களைத் தெரிவிக்கும் சமூக இடைவெளிகளை உருவாக்கவதற்கு உதவியது.

கிறிஸ்துவ மதமாற்ற நிறுவனத்தினர் தமிழ்ச்சமூக அமைப்பின் அடிப்படைகளையோ, ஆதிக்க சக்திகளையோ நேரடியாகத் தாக்காது தமது செயற்பாடுகளை நடத்தியபோதும், கிறிஸ்துவ பாடசாலைகளும் மதமாற்றமும் ஒருசில தாழ்த்தப்பட்ட சாதியினரின் கல்விக்கும் சமூக நகர்ச்சிக்கும் உதவின. இந்தத் தனிநபர்கள் சாதியத்திற்கெதிராகக் குரல் கொடுத்தனர். நடைமுறைரீதியான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். இந்தப்போக்கு சென்ற நூற்றாண்டின் முதலாவது தசாப்தத்திலேயே துளிர் விடத் தொடங்கியது. இந்தப் போக்கு தொடர்ந்த வேளை 1920களில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் உதயமாகியது. இது காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தினாலும், முற்போக்குச் சிந்தனைகளாலும் ஆகர்சிக்கப்பட்ட இந்த இயக்கம் பிரிட்டிஷ் காலனித்துவத்திடமிருந்து பூரண சுதந்திரத்தை வேண்டி நின்ற அதேவேளை, யாழ் தமிழ் சமூகத்தின் சாதி அமைப்பினையும் எதிர்த்துச் செயற்பட்டது.

இதைத் தொடர்ந்து 1935இல் உருவான இடதுசாரிக் கட்சியான சமசமாஜக் கட்சியினர் யாழ்ப்பாணத்தில் சாதிய எதிர்ப்பினைத் தொடர்ந்தனர். இடதுசாரிய அரசியலின் வருகை சாதி அமைப்புப் பற்றிய அறிவுரீதியான விமர்சனப் போக்கினையும் வளர்க்க உதவியது. இதே காலகட்டத்தில் சர்வஜன வாக்குரிமையின் வருகை தமிழ் அரசியலில் யாழ் சமூகத்தின் ஏறக்குறைய முப்பது வீதத்தினராய் இருந்த தாழ்த்தப்பட்டோரின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. 1920களில் யாழ் இளைஞர் காங்கிரசினால் நடைமுறைப் படுத்தப்பட்ட சமபந்தி போசனம் காலப்போக்கில் பாராளுமன்ற அரசியல்வாதிகளால் வாக்குகள் பெறும் ஒரு பிரச்சாரக் கருவியாக்கப் பட்டதையும் காண்கிறோம்.

ஆயினும் இந்த வலதுசாரி அரசியல் வாதிகளும் அவர்களின் கட்சிகளும் (தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி) சைவ வேளாளியத்தின் அமைப்பு ரீதியான, கருத்தியல் ரீதியான மேலாதிக்கத்தை விமர்சிக்கவோ, எதிர்க்கவோ முன்வரவில்லை. அப்படிச் செய்வது அவர்களின் வர்க்க நலன்களுக்கு வரோதமானது என்பதை அவர்கள் அறியாமலில்லை.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 1943இல் சமசமாஜக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு குழுவினரால் தோற்றுவிக்கப்பட்ட பின்னர் சாதிய எதிர்ப்பில் இடதுசாரிகளின் குறிப்பாக கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. படிப்படியாக வெகுஜன அணிதிரட்டலின் அவசியம் மேலும் உணரப் படுகிறது. 1960களில் மாக்சிய லெனினிசக் கட்சி உருவாகிய பின்னர் இது நடைமுறைப் படுத்தப்படுகிறது. வெகுஜன அணிதிரட்டலின் அடிப்படையிலமைந்த போராட்டத்தின் முக்கியத்துவத்தினை டானியல் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

’’தியாகங்களுக்கஞ்சாத, விட்டுக்கொடாத போராட்டம் ஒன்றே ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்கக் கூடியது’’

டானியலின் கட்டுரையின் பிரதான செய்திகளில் இது முதன்மை பெறுகிறது. அவர் கூறுவதுபோன்று 1966-78க்கிடையில் உள்ள காலத்தில் பெற்ற வெற்றிகள் அதற்கு முந்திய முப்பது ஆண்டு காலத்தில் பெற்றவற்றைவிட மிகத் தாக்கமானவை. இதற்கான விளக்கத்தை வெகுஜனப் பங்கு பற்றலைக் கொண்ட போராட்டத்திலேயே காண்கிறோம். அதேவேளை சாதியத்திற்கெதிரான நீண்ட வரலாற்றின் பல்வேறு கால கட்டங்களையோ பல்வேறு தனி நபர்கள் ஆற்றி பங்கினையோ டானியல் ஒதுக்கி விடவில்லை. அவருடைய வரலாற்றுப் பார்வை பல வகையில் முழுமையானது. அந்த முழுமையான வரைதலுக்கூடாகவே அவர் வெகுஜன அணிதிரட்டலின் அடிப்படையிலான போராட்டத்தின் விசேடத் தன்மையை இனம் காட்டுகிறார்.

டானியலின் இந்தக் கட்டுரை அவரது முழுப் பங்களிப்புடன் ஒப்பிடும்போது ஒரு சிறு அலகாகவே படும். ஆயினும் அதன் உள்ளடக்கம் கனதியானது என்பதை வாசகர் ஏற்றுக்கொள்வர். டானியலின் விமர்சன அணுகுமுறையில் மானுடவியல் நிறைந்திருப்பதைக் காண்கிறோம். அவருடைய நாவல்களை, குறுநாவல்களைப் படித்தவர்கள் இது டானியலின் அறிவின், ஆற்றலின் ஒரு சிறப்பம்சம் என்பதை ஏற்றுக்கொள்வர்.

இந்தக் கட்டுரை தற்போது பிரசுரமாவது புதிய விவாதங்களுக்கும் ஊக்கமளிக்கலாமென நம்புகிறேன்.

* தீண்டாமைக்கெதிரான போராட்டம் ஏன் தொடரவில்லை?

* அதைத் தொடர்ந்தும் தக்கவைக்க முடியாமைக்கு என்ன காரணங்கள்?

* தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்திற்கும், இந்தப் போராட்டத்திற்குமிடையே உறவு இருந்ததா? அப்படியானால் அது எத்தகையது?

Cதீண்டாமைக்கெதிரான வெகுஜனப் போராட்டத்தின் அரசியல் நெறிப்படுத்தல் எத்தகையது?

* கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இது பற்றி விவாதங்கள் வேறுபாடுகள் இருந்தனவென்றால் அவை எவை? அவை எப்படிக் கையாளப்பட்டன?

* தமிழ்த் தேசியப் போராட்டமும் அதைப் பீடித்துள்ள இராணுவவாதம், அது உருவாக்கிய துப்பாக்கிக் கலாச்சாரம் போன்றவை சாதி அமைப்பையும் அதற்கெதிரான போராட்ட மரபினையும் எப்படிப் பாதித்தன?

* தேசியப் போராட்டத்தின் இன்றைய காலகட்டத்தில் சாதியத்தின் நிலை என்ன?
அது பலவீனம் அடைந்துள்ளதா?
அப்படியானால் அது எந்த வகையில்?

* இடப் பெயர்வும் புலப் பெயர்வும் வெளிநாட்டுப் பணமும் சாதி வேறுபாடுகளை எப்படிப் பாதித்துள்ளது?

* மரபு ரீதியாக பாதிக்கப்பட்ட சாதியினர்க்கு சமூக நகர்ச்சி சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளனவா?

* சைவ வேளாளியமெனும் கருத்தியலின் அது வைத்திருக்கும் விழுமியங்களின் இன்றைய நிலை என்ன?

இப்படிப் பல கேள்விகள் டானியலின் கட்டுரையை வாசிப்பவர் மனதில் தோன்றத்தான் போகின்றன. 

1964ம் ஆண்டு காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஸ்தாபனங்களின் ஐக்கியத்தில் அச்சுவேலியில் நடந்த மாநாடும், அந்த மாநாட்டில் கலந்துகொண்டு ”ஆறுமாத காலத்துள் உங்கள் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும்” என சாவகச்சேரி எம்.பி திரு வீ.என். நவரெத்தினம் அவர்கள் தந்த வாக்குறுதியும், காலஞ்சென்ற கோப்பாய் எம்.பி திரு.எஸ்.வன்னியசிங்கம் அவர்கள் 61இல் ஸ்ரான்லி பாடசாலை வட்டமேசை மாநாட்டில் தந்த வாக்குறுதியும் பற்றிய தாற்பரியங்களும் 1965இல் ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய இயக்கத்தினால் இணுவில் கந்தசாமி கோவிலில் இருந்து திருவாளர்கள்: நல்லையா, சுப்பிரமணியம் முதலானோர் தலைமை தாங்கி நடாத்தப்பட்ட – முற்றுமுழுதாகத் தாழ்த்தப்பட்ட மக்கைளையே கொண்ட – மௌன ஊர்வலமும் அத்தோடொத்த பல காரியங்களும், மீளாய்வு செய்யப்பட்டு, ”தியாகங்களுக்கஞ்சாத விட்டுக்கொடாத போராட்டம் ஒன்றே ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்கக்கூடியது” என்ற கொள்கையில் வெகுஜன இயக்கம் நெறிப்படுத்தப் பட்டது. 

தோழர் டானியலின் தணிக்கை செய்யப்பட்ட கட்டுரை

இந்த நெறிப்படுத்தலின் அடிப்படையில் ஆலயப்பிரவேச இயக்கங்கள், தேனீர்க்கடைப் பிரவேசப் போராட்டங்கள் நாடெங்கும் விரிவடைந்தன. இந்தப் போராட்டங்கள் இழப்புக்கள் பலவற்றுக்கும் உட்பட்டதாயிற்று. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை இயக்கங்கள் காலத்தில் இந்த மக்களுக்கு ஒத்தாசையாக இருந்த தமிழ்த் தலைவர்களும், பிரமுகர்களும், தந்த ஆதரவுக்கு முற்றும் வேறுபட்ட விதத்தில் அப்போதைக்கப்போது உரிமைப்போர் நடந்த இடங்களுக்கு நேராகச் சென்று ஆலோசனை கூறியும், உற்சாகமளித்தும், இலங்கையின் சகல பகுதிகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை விளங்கவைத்தும், சிங்கள சாதாரண மக்களின் அனுதாபத்தைப் பெற்றுத் தந்தும் இன்றுவரை தொடர்ச்சியாக வெகுஜன இயக்கத்தின் நடவடிக்கைகளை உற்சாகப்படுத்தியும் வரும் என்.சண்முகதாசன் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கும் அதேவேளை சாதி வெறியர்களுக்குச் சிம்ம சொற்பனமாகவும் இருக்கிறார் என்பது விசேஷமாகக் குறிப்பிடக் கூடியதாகும்.
66-78க்கிடையிலுள்ள காலப்பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொண்ட வெற்றிகள் முன்னே காட்டப்பட்ட 30 ஆண்டுகால இயக்க வழியில் இந்தப் 12 ஆண்டு காலம் குறுகியதாயினும் இந்தக் குறிகிய காலத்திற் சாதிக்கப்பட்ட காரியங்கள்தான் விகிதத்தில் மிகமிகத் தாக்கமானதும், நிரந்தரமானதுமாகும். இந்தக் குறுகிய காலப் பலாபலன்களை அரைநூற்றாண்டு காலப் பலாபலன்களுடன் ஒப்பிடுவதில் கருத்துவேறுபாடு யாருக்குமே இருக்க முடியாது!
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகள்!
மாவிட்டபுரம் கந்தன், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள், செல்வச்சந்நிதி முருகன், வல்லிபுர ஆழ்வார் ஆகியவைகள் உட்படப் பல பகுதிகளின் ஆலயங்களின் கதவுகள் திறக்கப்பட்டதும், எவ்வளவு சரித்திரப் பிரசித்தி பெற்ற சம்பவங்களோ அதேயளவுக்குப் பிரசித்தி பெற்றவையே தேனீர்க்கடைகள், பொது நிலையங்கள் திறக்கப்பட்ட சம்பவங்களும், பொதுக் கிணறுகள் புழக்கத்துக்கு விடப்பட்ட செயலுமாகும்.
1968-78க்கிடையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் யாவும் மக்கள் மனத்திற்கு வலிந்து கொண்டுவர வேண்டியதில்லை. ஏனெனில் இவை மிகச் சமீபத்திலே நடந்த 10ஆண்டுகாலச் சம்பவங்களாகும்.
அதற்காக ஒரு வரலாறு பிறக்க இருக்கிறது. அந்த வீர வரலாறு ஒடுக்கப்பட்ட மக்களின் பலநூறு சந்ததியினருக்கும் வழிகாட்டியாகவே நிற்கப்போகின்றது.
இந்த இடையில் சாதிக் கொடுமையின் வேள்வித் தீக்கு 11 ஒடுக்கப்பட்ட வீரர்கள் பலியிடப் பட்டனர். பொருட்சேதம், இரத்தசேதம் கணக்கிட முடியாதவை. இந்தத் தியாகங்கள் யாவும் ஒடுக்கப்பட்ட மக்களின் 50ஆண்டுகாலத் தியாகங்களைவிட மேலானவை என்பதற்குப் பின்னே வரும் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு சான்றுகள் பகரும். இச்சிறு கட்டுரைக்குள் அவைகளை எல்லாம் அடக்க முடியாது.
இந்தப் பத்தாண்டு காலத்துள் ஒடுக்கப்பட்ட மக்களாலும், அதற்கு ஆதரவு தந்த சக்திகளாலும் சரித்திரப் பிரசித்தி பெற்ற கோவில்கள் நான்கு உட்படப் பலவும், தேனீர்ச் சாலைகளும், பொது நிலையங்களும் வெல்லப்பட்டன.
”தியாகங்களுக்கஞ்சாத விட்டுக்கொடாத போராட்டமே முடிவான விடுதலையைத் தரவல்லது” என்ற வழியில் முன்னேறிச் செல்லத் துடிக்கும் மக்கள் பரப்பில் மாற்றங்களை வரவேற்கும் சகலரும் இணைந்துகொள்ளக் கடமைப்பட்டவர்களாகின்றனர்.
பின்னணி (இங்கு சில பகுதிகள் காணாமல் போய்விட்டன)
அவ்வேளை இந்துக்கல்லூரி ஆசிரியராக இருந்த நெவின்ஸ் செல்லத்துரை அவர்களைத் தலைவராகவும், அமரர் ஜேக்கப் காந்தி அவர்களைச் செயலாளராகவும் கொண்டு உதயமாகிய ”ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கத்திற்கு” மேலே குறிப்பிடப்பட்ட நால்வரும் போஷகர்களாக இருந்தமையிலிருந்து அன்று தொடக்கம் இன்றுவரை சாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டும் தன்னந்தனியனாக நிற்கவில்லை என்பதும், காலத்துக்குக் காலம் நல்லெண்ணம் கொண்ட மக்கள் பலரும் ஒத்தாசை நல்கியுள்ளனர் என்பதும் புலனாகின்றது.
இந்தப் போஷகர்களில் மூவர் வெள்ளையர்கள் ஆதலால் அவர்கள் பிரதானப் படுத்தப் படவில்லையாயினும், உருத்திர கோடீஸ்வர ஐயரைப் பொறுத்தவரை அவர் சாதித் தமிழர்களின் கண்டனங்களுக்கும், எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் இலக்காக வேண்டியதாயிற்று. இதேபோல் இந்த ஸ்தாபனத்தின் யோவேல் போல் எண்ணற்ற எதிர்ப்புகளுக்கும் பயமுறுத்தல்களுக்கும் முகம் கொடுத்துப் பெருமையைச் சம்பாதிக்கத் தவறவில்லை.
1927ம் ஆண்டுக் காலகட்டத்தில் இலண்டனில் இருந்து தனது நண்பர் மூலமாக இலங்கைவாழ் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை, இலண்டனில் குடியேற்ற நாடுகளின் பிரச்சனைகளைக் கவனிக்கவென நிறுவப்பட்ட சபைக்குத் தெரிவித்ததில் அமரர் யோவேல் போல் அவர்கள் எடுத்த முயற்சியின் பலாபலனாக டொனமூரைத் தலைவராகக் கொண்டு இலங்கைக்கு வந்த அறுவர் அடங்கிய கமிஷனாகும். ”வயதுவந்தோருக்கு வாக்குரிமை அளித்தல்” என்ற கொள்கையின் கீழ் அன்று குடியேற்ற நாடுகளின் காரியதரிசியாக இருந்த அமெரி என்ற M.P யினால் நியமிக்கப்பட்ட இந்த டொனமூர்க் கமிஷனுக்கு எதிர்ச் சாட்சியமளிக்க சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் இலண்டன் மாநகரம் சென்றதில் இருந்துதான், ”பஞ்சமச் சாதியிடம் வாக்குக் கேட்டுச் சாதிமான்கள் யாசகம் போவரோ?” என்ற கேள்வி சாதிமான்களிடையே ஆக்ரோஷமாக எழுந்து சாதி அடக்குமுறைகள் கோரவடிவங்களை எடுத்தன என்பது முக்கிய கவனத்துக்குரியதாகும். பின்னர் இங்கே வந்த டொனமூர் கமிஷன் ”வயது வந்தோருக்கு வாக்குரிமை” கிடைப்பதன் மூலம் பல உரிமைகளை அவர்கள் அடைய வழி பிறக்கும் என அறிக்கை மூலம் பிரகடனப் படுத்தியபோதும் உள்நாட்டு அரசு இயந்திரங்களைப் பெருஞ்சாதியினரே ஆளுகை நடத்தி வந்தமையால்- ஒடுக்கப்பட்ட மக்களால் எதிர் பார்க்கப்பட்டவைகள் நடந்தேறவில்லை. பதிலுக்கு அடக்குமுறைகள் அதிகரித்தன. விதானை, உடையார், மணியகாரன் என்ற பதவிகளில் குந்தியிருந்தவர்கள், காவல்ப் படையினைச் சேர்ந்தவர்கள், சிவில்சேவை அதிகாரம் வகித்தவர்கள் உட்பட சகல பிரிவினரும் தேசவழமைச் சட்டத்தின் அடிப்படையில் துரித கதியில் செயற்படத் தொடங்கினர். இவைகளைத் தாக்குப் பிடிக்க முடியாத ஒடுக்கப்பட்ட மக்கள் மதமாற்றம் போன்ற குறுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர். இதனால் ஒருசில சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின என்பது உண்மையே.
அந்தக் காலத்துத் திண்ணைப் பள்ளிகளுக்குக்கூட அனுமதி கிடைக்கப்பெறாத மக்களுக்குப் பிற மதப் பாடசாலைகள் சற்று வழி விட்டன. சுற்றுச்சார்புகளை மீறிப் பாடசாலைகளுக்குச் சென்ற பலர் தண்டிக்கப்பட்டனர், இம்சிக்கப் பட்டனர்.
பகிரங்க வீதிகளில் தலைநிமிர்ந்து நடமாடத் தடை- சுடலைகளில் பிணம் சுடத் தடை- பொது ஸ்தாபனங்களில் உள்நுழையத் தடை- சுதந்திரமான வாகனப் போக்குவரத்துக்குத் தடை- கோவிற்பக்கம் செல்லத் தடை- மேளம் அடிக்கத் தடை- மீசை விடத் தடை- கடுக்கன் அணியத் தடை- குளங்களில் குளிக்கத் தடை- பந்தல் போட்டு வெள்ளை கட்டத் தடை- முளங்கால் மட்டத்திற்குக்கீழ் வேட்டியணியவும், மேலங்கி அணியவும், சால்வை போடவும் தடை- வண்டில் ஆசனத்தட்டில் ஏறியிருக்கத் தடை- புகைவண்டியின் ஆசனங்களில், பஸ் ஆசனங்களில் இருக்கத் தடை- கடை போன்றவை வைக்கத் தடை- செய்த வேலைக்குக் கூலி கேட்கத் தடை- குழந்தைகளுக்கு நல்ல பெயரிடத் தடை- பால்மாடு வளர்க்கத் தடை- விறுமர், அண்ணமார், காளி, பெரிய தம்பிரான், வீரபத்திரர், வைரவர், நாச்சிமார், காத்தவராயர் ஆகிய தெய்வங்களின் பெயர்களைவிட ஏனைய பெயர்களில் கோவில்கள் அமைக்கத் தடை- குடை பிடிக்கவும், வெள்ளை வேட்டி அணியவும், செருப்பு அணியவும், பெண்கள் குடுமி போட்டுக்கொள்ளவும் தடை- தாவணி போடத் தடை, தங்கத்தாலி, நகை நட்டுக்கள் அணியத் தடை- இப்படித் தடை வரிசையோ கணக்கற்றவை. இவை யாவும் தேசவழமை என்ற மதிப்பீட்டுக்கு உட்பட்டவையாகவே கணிக்கப் பட்டன.
சர்வசன வாக்குரிமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முறையில் இராமநாதன் துரை அவர்கள் இலண்டன் சென்றிருந்தபோது அவரைத் தலைவராகக் கொண்டிருந்த சைவ சித்தாந்த சபைக்குத் தற்காலிகத் தலைவராக, ஆறுமுகநாவலரின் மருமகனாகிய த.கைலாசபிள்ளை அவர்கள் நியமிக்கப் பட்டிருந்தார்கள். அப்போது பரமேஸ்வராக் கல்லூரியில் சைவ சித்தாந்த அறக்கல்விப் போதனைக்காக மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அப்போது திரு.யோவேல் போல் அவர்களால் உந்தப்பட்ட சுன்னாகத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்டோர் சிலர், தாமும் சைவ சித்தாந்த அறக்கல்வியைப் பெறவேண்டும் என்று கோரி, மாநாட்டு மண்டபத்துக்குள் நுழைய முற்பட்டபோது, ”நிரந்தரத் தலைவர் இல்லாதபோது இதை அனுமதிக்க முடியாது” என மாநாட்டுத் தலைவர் கைலாயபிள்ளை மறுக்கவே, அறக்கல்விக்கு அனுமதி கேட்டுப் போயிருந்த ஒடுக்கப் பட்டோர் அவரின் மறுப்பை எழுத்தில் பெற்று, டொனமூர்க் கமிஷனுக்கு தந்திமூலம் இலண்டனுக்கு அனுப்பி வைத்தனர். அந்த வேளையும் உயர்சாதியைச் சேர்ந்த நாகநாதி அதிகாரம், இலங்கைச் சட்டசபை உறுப்பினராக இலண்டனிலிருந்த தம்பிமுத்து ஆகியோர் இந்த மக்களுக்கு ஆதரவாய் இருந்தனர். நம்மவர் துணிந்து செயற்பட்டமையால்த்தான் இராமநாதன் துரை அவர்களின் இலண்டன் பிரயாணம் தோல்வியில் முடிந்ததெனலாம்.
1930ம் ஆண்டுக்காலப் பகுதியில் கண்டி எச்.பேரின்பநாயகத்தைத் தலைவராகவும், செனட்டர் நாகலிங்கம், ஓறேற்றர் சுப்பிரமணியம், கலைப்புலவர் நவரெத்தினம், ஏ.எஸ்.கனகரெத்தினம் ஆகிய முக்கியஸ்தர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய இளைஞர் காங்கிரஸ் என்ற ஸ்தாபனம் தோன்றியது.
இந்த ஸ்தாபனம் பல தேசியப் பிரச்சனைகளைக் கொண்டிருந்தபோதும், சாதி ஒழிப்பு விவகாரத்தில் பெருமளவு செயற்பட்டு, ”சம ஆசனம்- சம போசனம்” என்ற கொள்கையை ஏற்று நாடெங்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டது. அப்போது இவர்களுக்குச் சாதிமான்களால் கிடைத்த எதிர்ப்புகள் பெருமளவாகும். இதன் பிரச்சாரத்துக்கென தமிழகத் தமிழறிஞர் திரு வி.க அவர்கள் அழைக்கப்பட்டு, சமபந்தி, சமபோசனப் பிரசாரத்தில் ஈடுபடுத்தப் பட்டதும் அவர் திரும்பிப்போன மறுகணமே அவர் பேசிச் சென்றதும், சம ஆசன நடவடிக்கையில் ஈடுபடுத்தப் பட்டதுமான பல பாடசாலைகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. வசாவிளான் வடமூலை, ஒட்டகப்புலம், சுழிபுரம், புன்னாலைக்கட்டுவன், காங்கேசன்துறை, பருத்தித்துறை ஆகிய இடங்களில் சுமார் 14பாடசாலைகள் சாதிவெறியர்கள் வைத்த தீயில் எரிந்து சாம்பராகின.
1931இல் வரவிருந்த ஆட்சிமன்றத் தேர்தலைத் தமிழர்களின் உரிமைக்காகப் பகிஷ்கரிக்கத் திட்டமிட்டுப் பிரசாரம் செய்துவந்த வாலிபர் காங்கிரசினர், அவ்வேளை சாதிவெறியர்களின் கோபாக்கினிக்கு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. இந்தக் காலகட்டத்தோடு வீறுகொண்டெழுந்து நின்ற சாதி வெறியர்கள் கிராமப்புறங்கள் எங்கும் தங்கள் தாக்குதல்களை மேற்கொண்டனர். அத்தாக்குதல்களுக்கு முதன்முதலில் பலியிடப்பட்டவன் புத்தூர்ப் பகுதியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்டவன் ஒருவனாகும். பீதிமிகுதியால் பனைமரத்தில் ஏறியிருந்த அந்த அப்பாவிப் பஞ்சமன் மரம் தறித்து வீழ்த்தப்பட்டு- கொல்லப்பட்டு- அந்த மரத்தின் அடியிலேயே கொழுத்திப் பிடிசாம்பராக்கப் பட்டான்! ஏனைய கிராமப் புறங்களில் இல்லாத அளவில் புத்தூர்ப் பிரதேசத்தில் நில ஆதிக்க முறையும், சாதி ஒடுக்குமுறையும் மேலோங்கியிருந்தன என்பதற்கு இன்றும் அழியா அடையாளச்சின்னங்கள் பல உண்டு. பல பாரம்பரிய குடும்பங்களின் பழைய நால்சார் வீடுகளில் இன்றுவரை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பல்லக்குகளும், வீட்டு முற்றங்களின் நீள்வரிசைகளில் சுற்றுவட்டாரத்தில் உண்டாக்கப்பட்ட பல அளவுகள் கொண்ட பொருக்குப் பட்டையற்ற நேர்மரங்களும் இன்றைய அமைப்புக்குச் சற்று வேறுபட்ட, சற்று உயர்ந்த அமைப்பிலுள்ள ஏர்க் கலப்பைகள் இடம்பெற்றுள்ளதும் இன்றும் நாம் பார்க்கக்கூடிய சின்னங்களாகும். அக்காலத்தில் பல்லக்கு முதலிகுடும்பம் எனப்படுவோர் தங்கள் பிரயாணத்திற்குப் பயன்படுத்திய பல்லக்குகளைச் சுமந்துசெல்லக் கோவியர் சமூகத்தினரை அமர்த்தி வைத்துக் கொண்டிருந்ததையும், ஊரிலுள்ள பஞ்சமர்களிடையே ஏற்பட்ட குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்க, அளவான மரத்தைப் பார்த்து அவர்களைக் கைகொடுக்க வைத்துச் சவுக்கடி கொடுத்த தர்பார்த்தன வழக்கத்தையும், மாட்டுக்குப் பதிலாக அடிமை மனிதனை ஏரில் பூட்டி, உழுது பயிரிட்டமையையும் இந்த அடையாளச் சின்னங்கள் இன்றும் நினைவுறுத்திக் கொண்டிருக்கின்றன.
கலியாணப் பெண்களுக்கு சீதனம் கொடுக்கும்போது அந்த சீதன வரிசையில் ஒரு கோவியனும், ஒரு பள்ளியும் நிச்சயமாக இடம் பெற்றே தீர வேண்டும் என்பது இறுக்கமான நடைமுறையாயிருந்தது.
இந்தக் குடும்பங்களின் மரண வீடுகளில் தொண்டு வேலைகள் புரியும் வரிசைகள் சில இன்றுவரை இருந்து வருவதைக் காணலாம்.
இயற்கை மரணத்தை எதிர் நோக்கி நிற்கும், நயினார் அல்லது நயினாத்தி மரணப் படுக்கையிற் கிடக்கும்போது கண், வாய் பொத்த, கோவியன், அல்லது கோவிச்சி காத்திருக்க வேண்டும். மரணம் நிகழ்ந்த பின்பு சகல தொண்டு வேலைகளையும் கோவியக் குடும்பம் செய்து முடிக்க வேண்டும். மரணித்தது ஆணாக இருப்பின் ”பரியாரி” என்று இவர்களால் அழைக்கப்படும் அம்பட்டன் பிணத்தைச் சவரம் செய்வதும், ”கட்டாடி” என்று அழைக்கப்படும் வண்ணான் தனது சேவைகளைச் செய்வதும் முதன்மையான அடிமைத்தனத் தொண்டுகளாகும். இவைகளுக்குப்பின் பிரேத ஊர்வலத்தில் நடைமுறை வரிசை பார்ப்பதற்கே மனங்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
கட்டை குத்தி அடுக்கும் பள்ளர் பச்சையான கட்டை குத்திகளைச் சுமந்துகொண்டு முன்னே செல்ல, அதையடுத்து மாராயச்சாதிப் பெண்கள் குடமூதி நடக்க, அதை அடுத்து ”சாம்பான்” என்ற பறையன் பறை கொட்டிச் செல்ல, அதன் பின்னே வண்ணான் நில பாவாடை விரித்துவர, நான்கு கோவியர்கள் பாடை காவியும், நாலு கோவியர்கள் மேலாப்புப் பிடித்தும்வர, கடைசியில் பரியாரி என்ற அம்பட்டன் பாடைக்குப் பொரி எறிந்து நெருப்புச்சட்டி தூக்கிவரும் காட்சி சாதி முறையின் பூரண வெளிப்பாடானதாகும். சகலவிதமான அடிமை குடிமை முறைகளோடும் நடந்து வந்த வைபவ முறைகளில் பெரிய அளவு மாற்றங்கள் எதுவுமே இல்லாது இன்றுவரை அவை நடைமுறையில் இருப்பதைக் காணலாம்.
ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கம் சற்று விரிந்து பரந்ததன் பலாபலனாய் 1940ம் ஆண்டில் ஒடுக்கப்பட்ட சகல மக்கள் பிரிவினரையும் உள்ளடக்கிய ”சிறுபான்மைத் தமிழர் மகாசபை”யாகப் பரிணமித்தது.
அன்று சமூக சிறுசிறு இயக்கங்களோடும், தனித்தனியாகவும் இருந்து செயல்பட்டு வந்த எஸ்.ஆர்.யேக்கப் காந்தி, ஆ.ம.செல்லத்துரை, டீ.யேம்ஸ், வீ.ரீ.கணபதிப்பிள்ளை, எம்.சி.சுப்பிரமணியம், எம்.ஏ.சி.பெஞ்சமின், எஸ்.நடேசு, ஜீ.நல்லையா, வி.ரி.அரியகுட்டிப்போதகர், ஜீ.எம்.பொன்னுத்துரை, யோனா, யே.டீ.ஆசீர்வாதம், எம்.வி.முருகேசு, விஷயரட்ணம், பேப்பர் செல்லையா, A.P.இராசேந்திரா ஆகியோர்களையும் உள்ளடக்கிக்கொண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த ஸ்தாபனம் உடனடியாகவே பல் சாதிக் கொடூர நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியதாயிற்று. வில்லூன்றி மயானத்தில் முதலி சின்னத்தம்பி சுட்டுக் கொல்லப் பட்டதும், பூநகரியில் நடந்த சாதி வெறியினால் மூவர் உயிர் இழந்ததும் 26வீடுகள் தீக்கிரையாக்கப் பட்டதும் இந்தக் காலகட்டத்தில்தானாகும்.
யாழ்ப்பாணத்து நீதிமன்றத்தில் முதலி சின்னத்தம்பியின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நியாய தரந்தரர்கள் தங்களுக்கள் ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு முதலி சின்னத்தம்பிக்கான பக்கத்திற்கு வழக்காட மறுத்தபோது திரு.தர்மகுலசிங்கம் அவர்கள் ஒருவர் மட்டுமே சாதிமான்களின் கட்டுப்பாட்டை உடைத்துக் கொண்டு வழக்குரைக்க முன் வந்தார். இதன்மூலம் தனது நல்லெண்ணத்தைத் தெரிவித்துக் கொண்டபோதும், மகாசபைக்கு அது போதுமான ஆதரவாகப் படாமையால் கொழும்பு நீதிமன்றத்திற்கு வழக்கை எடுக்க அப்போது யாழ்ப்பாணத்திலிருந்த சிங்கள நியாய துரந்தரர் உதவியோடு முயற்சித்து வெற்றி கண்டதுடன், கொழும்பு விசாரணையில் மூவர் தண்டிக்கப்படவும் வைத்தனர். இதேபோன்றே பூநகரி கொலை, வீடெரிப்பு வழக்குகள் கண்டி நீதிமன்றத்தின் பின்பு கொழும்பு நீதிமன்றத்திலும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுக் குற்றவாளிகள் தண்டிக்கவும்பட்டனர்.
அப்போதைக்கப்போது, அவ்வப்பகுதிகளில் சாதி அடக்குமுறைத் தாக்குதல்களுக்கெதிராகச் சட்ட நடவடிக்கைகள் மூலம் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாதென்பதனைச் சிறிய அளவில் இவர்கள் உணர்ந்து கொண்டமைதான் சில அரசியல் இயக்கங்களுக்கான ஆதரவுக் குரலையும் இவர்கள் வைக்க முற்பட்டமைக்கான காரணமாயிற்று. இந்த முயற்சியில் முதலாவது பலனாகச் சங்கானையைச் சேர்ந்த பொன்னர் என்பவர் கிராமச் சங்க உறுப்பினராகவும், பளையைச் சேர்ந்த செல்லையா என்பவர் கிராமச் சங்க உறுப்பினராகவும் வந்தனர்.
கிராமச் சங்க உறுப்பினர் முதன்முதல் கிராமச் சங்கக் கூட்டத்திற்குச் சென்றபோது, கைத்தறி நெசவுக் கிடங்கு போல கிடங்கமைத்து, அதிலே கால் செருகிக்கொண்டு உட்காரும்படியும், செல்லையா சென்றபோது, தென்னைமர அடிக்குத்தி ஆசனமாக வைக்கப் பட்டிருந்தமையும், தமிழர்களின் ஜனநாயக அமைப்பு முறையின் சரித்திரத்தில் குறைந்தபட்சம் பித்தளை எழுத்துக்களாலேனும் பொறித்து வைக்கப்பட வேண்டியவையாகும். அத்தோடு, அந்தக் காலகட்டத்தோடு ஒட்டிய ஐந்தாண்டு இடைவெளியில் எரிக்கப்பட்ட வீடுகள் என்று கணக்கை நிரைப் படுத்தினால் அவை:
பூநகரி- 26
காரைநகர்———————–10
கரவெட்டி————————14
ஊர்காவற்றுறை—————5
பருத்தித்துறை(சல்லி)— 3
கன்பொல்லை, கரவெட்டி மேற்கு, கலட்டி, இளவாலை, நாரந்தனை மேற்கு, பளை, அல்லைப்பிட்டி, புத்தூர், சங்கானை மொத்தமாக 65க்குக் குறையாததுதான் அமையும்.
இந்த இடைக்காலத்தின் சாதிவெறி நடவடிக்கைகளில் பலியான உயிர்கள் என்று குறிப்பிடும் போது:-
பன்றித்தலைச்சி————————- 3
பூநகரி—————————————– 3
சண்டிலிப்பாய்—————————– 1
வில்லூன்றி——————————— 1
ஊரெழு————————————— 1
நயினாதீவு———————————– 1
பருத்தித்துறை-சந்தாதோட்டம்—- 1
காரைநகர்———————————– 1
கெருடாவில்——————————– 1
புத்தூர்—————————————- 1
கோண்டாவில்—————————– 1
புன்னாலை———————————- 1
கம்பர்மலை——————————— 1
இக் கட்டுரைக்குள் அடக்கப்படாத 68க்குப் பின் சம்பவங்களினால் இழக்கப்பட்ட உயிர்கள் பற்றிய தொகுப்பு:
சங்கானை———————————– 3
கன்பொல்லை—————————– 3
கரவெட்டி———————————— 1
அச்சுவேலி———————————- 1
சண்டிலிப்பாய்—————————– 1
கொடிகாமம்——————————– 1
பளை—————————————— 2
மிருசுவில்———————————— 1
என நிரைப்படுத்திக் கொள்ளலாம்.
உயிர்ச் சேதமற்ற துப்பாக்கிச் சூடு, வாள்வெட்டு, கத்திக்குத்து, எலும்பு முறிவு, மானபங்கம் ஆகியவை என்று குறிப்பிடும்போது, யாழ்ப்பாணக் குடா நாட்டில் எத்தனை சிறு கிராமங்கள் உள்ளன என்று கணக்கெடுத்து, சிறுநகர் எத்தனை இருக்கிறது என்று பார்த்து இரண்டையும் சேர்த்துக் கணக்கெடுத்து, சராசரி 75னால் பெருக்கினால் வரும் எண்ணிக்கை எதுவோ, அதுதான் உத்தேச- ஆனால் சரியான கணக்காகும்.
இந்தக் காலத்தில் விஷேசமாக நடைபெற்ற இன்னொன்று குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
சோல்பரிப்பிரபு தலைமையிலான ஒரு கமிஷன் இந்தச் சாதி அடக்குமுறையில் விசாரணைக்காக நியமிக்கப் பட்டது.
இந்தக் கமிஷனுக்கு சிறுபான்மைத் தமிழர் மகாசபையினர் ஒரு விபர வியாக்கியானக் கொத்துச் சமர்ப்பித்திருந்தனர். இந்த வியாக்கியானக் கொத்துச் சமர்ப்பிக்கப் பட்டதுதான் தாமதம், அப்போது பருத்தித்துறைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு.ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் சபையினரைச் சென்.சாள்ஸ் பாடசாலையில் சந்தித்து, அந்த வியாக்கியானக் கொத்தை மீளப் பெறும்படியும், தான் சகல சாதிப் பிரச்சனையையும் தீர்த்து வைக்க ஆவன செய்வதாகவும் கூறினார். இதை மகாசபையினர் நிராகரித்தனர். அதன்பின் மகாசபையினர் சோல்பரியால் அழைக்கப் பட்டனர். பத்துப்பேர் கொண்ட ஒரு குழு கொழும்பு சென்று விபரக் கொத்தின் வியாக்கியானத்தைத் தெளிவு படுத்தியதன்மேல் சோல்பரி இதை ஏற்றுத் தனது யாழ்ப்பாண வருகையின்போது சாதி ஒடுக்குமுறைக்குட்பட்ட ஒரு கிராமத்தைத் தனக்குக் காட்டும் படியும் கேட்டு, இந்தக் காரியத்தைத் தான் வந்து பார்க்கும் வரை இரகசியமாக வைத்திருக்கும்படி கூறினார். குறிப்பிட்டபடி சோல்பரி யாழ்ப்பாணம் வந்தபோது, நெல்லியடிச் சந்தியில் பொன்னம்பலம் அவர்களால் பெரு வரவேற்பொன்று அவருக்கு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு முடிந்தபின், இரகசியத் திட்டத்தின்படி பருத்தித்துறை வாடி வீட்டிலிருந்து சோல்பரிப் பிரபுவை மகாசபையினரைச் சேர்ந்த திருவாளர்கள். எம்.சி.சுப்பிரமணியம், டீ.யேம்ஸ், வீ.ரீ.கணபதிப்பிள்ளை ஆகியோர் அழைத்துச் சென்று கன்பொல்லைக் கிராமத்தைக் காட்டினர். இரண்டொரு நாட்களுக்கு முன் சாதி வெறியர்களால் தீயிடப்பட்டுப் புகைந்து கொண்டிருந்த வீடொன்றையும் சோல்பரி பார்த்துக்கொண்டு திரும்பியபின், குறிப்பிட்ட மூவரும் பஸ் எடுப்பதற்காக நெல்லியடிக்கு வந்தனர். இவைகளை அவதானித்திருந்த சாதி வெறியர்கள் மூவரையும் சிறைப் பிடித்து எம்.சி.சுப்பிரமணியம் அணிந்திருந்த கதர் சால்வையாலேயே சுற்றி மூவரையும் கட்டி நையப்புடைத்துப் பட்டப் பகலில் நெருப்பு வைக்க முற்பட்டனர். அந்தவேளை தற்செயலாக டாக்டர் பஸ்ரியான் என்பவரும், மூன்று பொலிஸாரும் காரில் வந்தபோது, சாதி வெறியரின் தீ வைப்பு முயற்சி முறியடிக்கப்பட்டு இம்மூவரும் காப்பாற்றப் பட்டனர். இந்தச் சம்பவம் இன்று பகிரங்கப் படுத்தப் படுவதைச் சாதித் தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக வந்தவர்கள்கூட விரும்ப மாட்டார்கள்.
1949 செப்டம்பர் 14ம் திகதி அப்போதைய உள்நாட்டு மந்திரியும், கிராம அபிவிருத்தி மந்திரியுமாயிருந்த ஒலிவர் குணத்திலகா அவர்கள் இந்துக் கோயில்களில் பலியிடுதல், நிதி நிர்வாகம் ஆகியன பற்றியும் தனக்குக் கிடைத்த குற்றச் சாட்டுதல்களை யோசிக்க கீழ்சபையிலும், மேல் சபையிலும் அங்கத்தவர்களான தமிழ் உறுப்பினர்களை அழைத்துச் சம்பாஷித்தார். அப்போது திரு. சி.சிற்றம்பலம் இவைகளைவிட ஒரு பகுதியினரைக் கோவிலுக்குள் விடாமல் தடுத்து வைத்தல் பெருங் குற்றம், எனவே அதை முதற் பிரச்சனையாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனப் பிரேரிக்க செனட்டர் பெரியசுந்தரம் அதை ஆதரிக்க இந்த ஆலய வழிபாடு விஷயம் பற்றித் தனியாக விசாரிக்க ஒரு கமிஷன் வைக்கிறேன் எனக் கூறி வாய்மூலம் நேருக்கு நேராகவும், எழுத்து மூலமாகவும் கமிஷனுக்குச் சாட்சியங்கள் அளிக்கப்பட்டன. வடக்கில் சுமார் 60ஸ்தாபனங்களினதும் கோவில் நிர்வாகிகள், குருக்கள் என்ற விதத்தில் 80பேர்களினதும் வசதி படைத்த கொழும்பு வாசிகளின் ஸ்தாபனங்கள் 13இனதும் தனியானவர்கள் 12பேர்களினதும் சாட்சியங்கள் பதிவாகின. ஆலயப் பிரவேசத்தை ஆதரித்த விதத்தில் யாழ்ப்பாணம் காந்தி நிலையம், மனோகரா சேவா சங்கம், சுன்னாகம் தாழ்த்தப்பட்டோர் ஐக்கிய சங்கம், தேவரையாளி சைவ கலைஞான சபை, பருத்தித்துறை திராவிடர் கலைமன்றம் ஆகியவை தர்க்கரீதியான முறையில் வழிபாட்டை வற்புறுத்தி நின்றன. அத்துடன் வட பகுதியிலுள்ள ஸ்தாபனங்களையும், தனி மனிதர்களையும் தவிர்ந்த ஏனைய ஸ்தாபனங்களும் தனி மனிதர்களும் நூற்றுக்கு நூறு இந்தத் தர்க்க நியாயங்களுக்குச் சார்பாகவே சாட்சியமளித்துள்ளனர். இதற்கு மாறாகச் சாட்சியம் கொடுத்தவர்களுடைய தர்க்க நியாயங்களுள் ”தாழ்த்தப் பட்டவர்கள் மனிதப் பிறவிகள் அல்லர்” என்ற கருத்துக்களே பொதுவில் பரவலாக இடம் பெற்றிருந்தன.
முதன்முதலில் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இந்து சமய வழிமுறைகளில் தமக்கென பாடசாலை ஒன்றை அமைக்கும் முயற்சியில் வதிரியைச் சேர்ந்த கா.சூரன் என்பவர் எடுத்த விடா முயற்சியால் 1914ம் ஆண்டிலேயே வதிரி தேவரையாளி இந்துக் கல்லூரி அமைக்கப் பட்டதும், அதைத் தொடர்ந்து கல்வி அடிப்படையிலான முயற்சிகள் எடுக்கப் பட்டதும், அப்பகுதி மக்கள் மேலும் முன் செல்ல உதவியது.
1940 – 41 காலப் பகுதியில் டீ.ரீ.சாமுவேலைத் தலைவராகவும், கவிஞர் செல்லையாவைக் காரியதரிசியாகவும், சைவப்புலவர் வல்லிபுரத்தைத் தனாதிகாரியாகவும் கொண்டு தொடக்கப்பட்ட வடமராட்சி சமூக சேவா சங்கம், வடமராட்சிப் பகுதியில் தொடக்கப்பட்டபோது அப்பகுதியைச் சேர்ந்த பல உயர்சாதி இந்துக்களும் அதற்கு ஆதரவளித்து உற்சாகப் படுத்தினர்.
1944 – 46ம் ஆண்டுக் காலத்தில் அச்சங்க மாநாடொன்றில் தலைமை உரையாற்றிய டாக்டர் பசுபதி என்பவர் ”தாழ்த்தப்பட்ட மக்களைக் கோவிலுக்குள் அனுமதிக்காத வரையில் நான் இன்றிலிருந்து கோவிலுக்குள் போக மாட்டேன்” என்று சபதம் எடுத்துக் கொண்டார். இந்தச் சபதத்தை அவர் உயிர் உள்ளவரை – நீண்டகாலம் கடைப்பிடித்தே வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பல சம்பவங்கள் மறப்பதற்கரியனவே!
1956-ம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் மகாசபையின் இணைக் காரியதரிசிகளாகப் பொறுப்பேற்றுக் கொண்ட இ.வி.செல்வரட்ணமும், கவிஞர் பசுபதியும் திரு.எம்.சி.சுப்பிரமணியம் தலைமையில் எடுத்துக்கொண்ட நடைமுறை வேலைகளுக்கு நாடெங்குமிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் பகுதிகளிலிருந்து ஆதரவு கிடைத்தது. அதன் பெறுபேறுகளாக 14க்கு மேற்பட்ட பாடசாலைகள் அமைய வழி பிறந்தமையாலும், அந்தக்கால வடபகுதி முதலாவது இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினரான பொன்.கந்தையா அவர்களின் துணிவான, நேரடியான ஒத்துழைப்புக் கிடைத்தமையாலும் இந்த இளைய தலைமுறையினர் மேலும் உற்சாகமுடன் செயற்பட்டனர்.
தாழ்த்தப்பட்ட மக்களின் குரலின்கீழ் பல சாதியினரையும், பல மதத்தினரையும் பெருவாரியாகக் கலந்துகொள்ள வைத்த அனுபவத்திலிருந்துதான் ”தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்” பிறப்பிக்கப் பட்டதாகும். பல பிற்போக்காளர்களாலும், தமிழர் அரசியல் இயக்கங்களாலும் ஒருமுகமாக இந்த எழுச்சி எதிர்க்கப்பட்டபோது பெருஞ்சாதித் தமிழர் வழி வந்த திரு.என்.சண்முகதாசன் அவர்களால் தலைமை தாங்கப்பட்ட இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த எழுச்சியை ஏற்று ஒத்துழைப்புத் தர முன் வந்ததோடல்லாமல் ஆக்கபூர்வமான காரியங்களில் நேரடியான ஒத்துழைப்பையும் நல்கியது. இந்தச் செயற்பாடு அதுவரை திறக்கப்படாது யாழ்நகர் எங்குமிருந்த தேனீர்க் கடைகளையும், யாழ் நகருக்கப்பால் கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களின் தேனீர்க் கடைகளையும் திறப்பதற்கு வாய்ப்பளித்தது. மகாசபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்களில் இருந்துதான் பொதுவான ஒரு அரசியல் உணர்வையும், சமூக மாற்றத்திற்கான செயற்பாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் பங்கையும், ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியெங்கும் பரப்ப முடிந்தது.
ஆரம்ப காலத்தில் செனற் சபையில் ஏ.பி.இராசேந்திரா அவர்களுக்கு நியமனங் கிடைத்த பின்னும் சிறிதளவேனும் நகர்ந்து கொடுக்காத சாதிமுறையில் சற்றுத் தளர்ச்சி ஏற்பட்டது, இந்தத் தலைமையின் நடவடிக்கைகளுக்குப் பின்புதான் என்பதைத் துணிந்து கூறிவிடலாம். இதேபோன்று பிற்காலப் பகுதியில் திரு.ஜீ.நல்லையா அவர்களுக்குச் செனட்டில் இடம் கிடைத்தபோதும், திரு.எம்.சி.சுப்பிரமணியம் அவர்களுக்குப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்தபோதும், ஒடுக்கப்பட்ட மக்களால் எதிர் பார்க்கப்பட்ட பலாபலன்கள் கிடைத்து விடவில்லை. இதிலிருந்து அரசாங்க மட்ட நியமனங்களைவிட இயக்க ரீதியான காரியங்களும், நடவடிக்கைகளுமே உரிமைகளை வென்றெடுக்கக் கூடியனவென்பது புலனாயிற்று.
திருவாளர்கள் சுப்பிரமணியமும், நல்லையாவும் பதவிகள் பெறாத காலத்தில் மக்கள் பெற்று வந்த பேறுகளை, அவர்கள் பதவி வகித்த காலங்களில் பெற முடியவில்லை. இதை அவர்களே ஒப்புக்கொள்வர்.
56க்கும் 66க்கும் இடையே உள்ள காலப் பகுதியில் சமூக ரீதியில் சலுகைகளைப் பெறும் முயற்சியில் சற்று வெற்றி காண முடிந்ததேயன்றி அந்தச் சலுகைகளால் சமூகக் கொடுமைக்குத் தீர்வு காண முடியவில்லை. இதற்கான காரண காரியங்களைத் தேடிப் பிடிப்பதில் அரசியல் கோட்பாடுகளுக்கூடான முயற்சிகள் நடந்தன. இதன் பிரதிபலிப்பாகவே 57ம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமூகக் குறைபாடுகள் நீக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது சட்டமாக்கப்பட்டபோது சாதிக் கொடுமைகளிலிருந்து முற்றாக விடுபட இது வழி வகுக்கும் என்று பலரும் நம்பினர். ஆனால் அந்தச் சட்டம் ஒரு பரீட்சார்த்த முன்னறிவித்தல் போலவே நிலப் பிரபுத்துவ கெடுபிடிக்குட்பட்ட அரசு யந்திர சேவையாளர்களின் ஆளுகைக்கு உட்பட்டு தானாக அட்டை போலச் சுருண்டு கொண்டது.
இந்த நிலைமையை நன்கு உணர்ந்துகொண்ட இளம் சந்ததியினர் 1966 அக்டோபர் 21ல் ”சாதி ஒழிப்புச் சட்டத்தை அமுல் நடத்து” என்ற சுலோகத்தைத் தூக்கிப் பிடித்து ஆயிரக் கணக்கிற் திரண்டு சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாண நகரத்தை நோக்கிப் புறப்பட்டனர். இவர்கள் மேல் குண்டாந்தடிப் பிரயோகம் செய்யப் பட்டது. பலர் காயமுற்றனர். சிலர் சிறைப் பிடிக்கப் பட்டனர். ஆயினும் திட்டமிட்டபடி ஊர்வலம் நகர்வரை எழுச்சி பொங்க வந்தே சேர்ந்தது!
இந்த ஊர்வலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடன் என்றுமில்லாத விதத்தில் வேறு சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.